Friday, April 10, 2015

லோக் ஆயுக்தாதான் நிரந்தர தீர்வு

அமெரிக்காவின் துணை ஜனாதிபதி ஜோ பிடன், தொடர்ந்து இருமுறையாக ஒபாமாவுடன் ஒன்றாக பணியாற்றுபவர். ஊழலுக்கு எதிரான கொள்கையுடையவர். ஊழலை எதிர்ப்பது சிறந்த நிர்வாகம் மட்டுமல்ல, அது சுய பாதுகாப்பு; அது நாட்டுப்பற்று என்பது அவர் உதிர்த்த பிரகடனம். தமிழ்நாட்டில் அதை கடைப்பிடித்து தன்னுயிர் ஈத்த ஒரு அதிகாரியின் மரணத்துக்கு இப்போது பரிகார நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன. திருநெல்வேலியில் வேளாண்மைத்துறையில் உதவி செயற்பொறியாளராக வேலைபார்த்தவர் முத்துக்குமாரசாமி. பதவியில் இருந்து ஓய்வுபெற 8 மாதங்களே இருந்த முத்துக்குமாரசாமி, தன் பணிக்காலம் முழுவதுமே எந்த புகாருக்கும் இடமில்லாமல் வாழ்ந்தவர். அப்படிப்பட்ட அதிகாரி தன்னுடைய துறையில் 7 டிரைவர்களை நியமிக்கவேண்டிய நிலையில், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இருந்து சீனியாரிட்டி லிஸ்ட் பெற்று, அதன்அடிப்படையில் தகுதியானவர்களை நியமிக்க மாவட்ட கலெக்டர் கருணாகரன் உத்தரவின்பேரில், உத்தரவையும் அனுப்பிவிட்டார்.

அவ்வளவுதான் சென்னையில் இருந்து அவருக்கு தொல்லைக்குமேல் தொல்லை, மிரட்டலுக்குமேல் மிரட்டல் அலை அலையாய் செல்போன் மூலம் வந்தது. ஒரு டிரைவருக்கு 1.75 லட்ச ரூபாயை வசூலித்துத்தா என்ற அச்சுறுத்தலைத்தாங்க முடியாமல், ரெயிலில் விழுந்து தற்கொலை செய்துகொண்டதாக செய்தி வந்தது, எல்லோரையும் சோகத்தின் உச்சிக்கு கொண்டு சென்றுவிட்டது. இதற்காக உடனடியாக போர்க்குரல் தொடுத்த அனைத்து அரசியல் கட்சிகளும், தங்கள் வீட்டில் ஒருவருக்கு நடந்த சம்பவம்போல இதை கருதி செயல்பட்டது. இதில் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியும், அவரது உதவியாளர்களும், உயர் அதிகாரியும் சம்பந்தப்பட்டு இருக்கலாம் என்று தகவல் கிடைத்தவுடன், அவரை முதலில் கட்சி பதவியில் இருந்து நீக்கிய அ.தி.மு.க. தலைமை, அடுத்து அமைச்சர் பதவியில் இருந்தும் தூக்கிஎறிந்தது. அந்த துறையின் தலைமை பொறியாளர் செந்திலும் கைது செய்யப்பட்டுள்ளதால், அதிகாரிகளின் மத்தியிலும் ஒரு அச்சம் பிறந்துவிட்டது. செந்திலின் வாக்குமூலம் முத்துக்குமாரசாமியின் மரணத்துக்கு காரணமாக வெளிவந்த செய்திகளையெல்லாம் உறுதிப்படுத்தியுள்ளது. இப்போது தூக்கமாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற திருச்சி அரசு மருத்துவமனை உள்ளுறை மருத்துவர் டாக்டர் நேரு, அரசியல்வாதிகளின் தொல்லையால்தான் இந்த முடிவை எடுத்தேன் என்றது இந்த பரபரப்பின் வேகத்தை கூட்டியுள்ளது.

பொதுவாக அரசு ஊழியர்களின் நியமனத்திலும், இடமாறுதல்களிலும், பதவி உயர்வுகளிலும் நடக்கும் ஊழல்தான் அரசு நிர்வாகத்தில் ஊழலை பெருக்கெடுத்து ஓடச்செய்துவிடுகிறது. தாங்கள் கொடுத்த பணத்தை எப்படியும் மீட்டே தீரவேண்டும் என்ற வெறியில் முதலில் பணம் வாங்கத்தொடங்கும் அரசு ஊழியர்கள், பிறகு ருசிகண்ட பூனைகளாக மாறி ஊழலிலேயே திளைத்துவிடுகிறார்கள். இதையெல்லாம் தடுப்பதற்காக நிறைவேற்றப்பட்ட மசோதாதான் லோக்பால் மசோதா. ஆண்டாண்டுகாலமாக சொல்லப்பட்டு வந்தாலும், அன்னா ஹசாரே போராட்டத்துக்குப் பிறகுதான், பியூன் முதல் பிரதமர் வரை யார் மீதும் ஊழல் புகார் கொடுப்பதற்கும், நடவடிக்கை எடுப்பதற்கும் வகைசெய்யும் லோக் பால் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்படி, மத்தியில் லோக்பால் அமைப்பும், மாநிலத்தில் லோக் ஆயுக்தா அமைப்பும் ஏற்படுத்தப்படவேண்டும். அப்படி ஒரு அமைப்பு இருந்தால் முத்துக்குமாரசாமி போன்றவர்கள் இப்படி தற்கொலை செய்யவேண்டியது இல்லை. அங்குபோய் புகார் கொடுத்து இருக்கலாம். எனவே, ஒரு அமைச்சரையே கைது செய்த தமிழக அரசு, உடனடியாக லோக் ஆயுக்தா அமைப்பையும் அமைத்து, ஊழலை ஒழிக்க அசுர வேகம் எடுக்கவேண்டும். இனியும் யாரும் இப்படி முத்துக்குமாரசாமி போல தற்கொலை செய்துகொள்ள இடமளிக்காமல், என்னுடைய மனக்குறையை சொல்வதற்கு ஒரு அமைப்பு இருக்கிறது, அங்குபோய் நான் புகார் செய்வேன், எனக்கு நீதி கிடைக்கும் என்ற நிலையை அரசு ஊழியர்களுக்கு ஏற்படுத்த லோக் ஆயுக்தாதான் சிறந்த வழி.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024