Friday, April 10, 2015

சமுதாய அக்கறையும் வேண்டும்

உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு, சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவோர் மிகவும் உற்சாகத்தில் உள்ளனர். ஆனால், அவர்களுக்கு விடுக்கும் சிறிய வேண்டுகோள் என்னவெனில், சமூக வலைதளங்களைப் பயன்படுத்தும்போது சிறிதளவாவது சமுதாய அக்கறையும் இருக்க வேண்டும் என்பதே.

இன்றைய நகர இளைஞர்களில் 100-க்கு 99 சதவீதத்தினர், ஏன்... 100-க்கு 100 சதவீதத்தினரும் சமூக வலைதளங்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.

இன்று எந்த அயல் நாட்டில் இருந்தாலும் "ஸ்கைப்' தொழில்நுட்பம் மூலம் நேருக்குநேர் பேசிக்கொள்கின்றனர்.

முகநூல் (பேஸ்புக்), கட்செவி அஞ்சல் (வாட்ஸ் அப்), சுட்டுரை (டுவிட்டர்) என இன்றைய இளைஞர் சமுதாயம் புகுந்து விளையாடுகிறது. இதன் மூலம், தங்களது கருத்துகளை எளிதில் தெரிவித்து விடுகின்றனர்.

கிராமப்புற இளைஞர்களும் இந்த சமூக வளைதளங்களின் வலைவீச்சுக்குத் தப்பவில்லை. அந்த அளவுக்கு சமூக வலைதளங்கள் நமது இளைஞர்களை வளைத்துப் போட்டுவிட்டன.

முன்பெல்லாம் கிராமப்புறங்களில் செய்தித்தாள்களும், அதை விட்டால் வானொலிப் பெட்டியும் மட்டுமே காண முடியும். ஆனால், இன்றைய நிலை அப்படியே தலைகீழாக மாறிவிட்டது.

கையில் ஆண்ட்ராய்டு எனப்படும் அதிநவீன வசதிகளைக் கொண்ட செல்லிடப்பேசி இல்லாத கிராமத்து இளைஞரைக் காண முடியாது.

ஆனால், அப்படிப்பட்ட அந்த இளைஞர் சமுதாயம் இதுபோன்ற சமூக வலைதளங்களை நல்ல முறையில் பயன்படுத்துகிறதா என்றால் அங்கு நிச்சயமாக ஒரு கேள்விக்குறி விழத்தான் செய்கிறது. காரணம், சமூக வலைதளங்கள் அந்த அளவுக்குத் தவறாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

ஆபாசப் படங்களை அனுப்புவது, அடுத்தவர் மனம் புண்படும்படியாகக் கருத்துகளை வெளியிடுவது, பிரபலங்களை விமர்சனம் செய்வது, அரசியல்வாதிகளை அநியாயத்துக்கு காலை வாருவது என சமூக வலைதள பிரியர்களின் விமர்சனங்களுக்கு ஓர் எல்லையே இல்லாமல் போய் விட்டது.

இன்னும் சிலர், திரைப்படத்தைப் பார்க்காமலேயே நண்பர்கள் சொல்வதைக் கேட்டோ அல்லது தனக்குப் பிடிக்காத நடிகராக இருந்தாலோ அந்தத் திரைப்படம் மொக்கை, கடி, சுமார் ரகம் என "ஸ்டேட்டஸ்' போடுகின்றனர்.

உண்மையிலேயே அது நல்ல படமாக இருந்தாலும், இவர்களின் விமர்சனத்தால் அந்தப் படம் தோல்வியடைந்து விடுகிறது. இதனால், கோடிகளைக் கொட்டி அந்தத் திரைப்படத்தை எடுத்தவர் தெருக் கோடிக்குச் செல்லும் நிலை ஏற்படுகிறது.

அதேபோல, கிரிக்கெட்டில் ஒரு வீரர் சரியாக விளையாடாவிட்டால், அதற்குக் காரணம் அவரது காதலிதான் என்று தரம் தாழ்ந்த வார்த்தைகளால் விமர்சனம் செய்கின்றனர். இதனால், அந்த வீரர் எந்த அளவுக்கு பாதிக்கப்படுவார் என்பதைப் பற்றியெல்லாம் இவர்கள் சிந்திப்பதே இல்லை.

இது ஒருபுறம் இருக்க, ஆசிரியர் பணியை அறப் பணியாகக் கொண்ட ஆசிரியர்களும், கண்ணியமிக்க காவல் துறையில் பணிபுரிபவர்களும்கூட இந்த சமூக வலைதளங்களை தவறாகப் பயன்படுத்துவதை நினைக்கும்போது மிகவும் வேதனையாக இருக்கிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் தேர்வறைக் கண்காணிப்பாளராகப் பணியாற்றிய ஓர் ஆசிரியர், பிளஸ் 2 கணித வினாத்தாளை செல்லிடப்பேசியில் புகைப்படம் எடுத்து, அதை கட்செவி அஞ்சல் மூலம் பிற ஆசிரியர்களுக்குப் பரப்புகிறார்.

சென்னை காவல் துறையில் உயர் அதிகாரி ஒருவர் பெண் காவலரிடம் பேசியதைப் பதிவு செய்து கட்செவி அஞ்சல் மூலம் பரப்புகின்றனர்.

இதுபோன்ற சம்பவங்களால்தான் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துபவர்களுக்கு நீதிமன்றம் கடிவாளம் போட்டது. அதாவது, சமூக வலைதளங்களைப் பயன்படுத்தும்போது அத்துமீறி செயல்படக் கூடாது; அடுத்தவர் மனம் நோகும்படி, தரம் தாழ்ந்த விமர்சனம் செய்யக் கூடாது; எதற்கும் ஒரு வரையறை உண்டு என்ற ரீதியில் சமூக வலைதளப் பிரியர்களின் கையைக் கட்டிப்போட்டது நீதிமன்றம்.

13 வயதுச் சிறுவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று கடந்த 2013 மார்ச் 24-ஆம் தேதியே தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது இங்கு நினைவுகூரத்தக்கது. இதனால், சமூக வலைதளப் பிரியர்களின் கொட்டம் கொஞ்சம் அடங்கத்தான் செய்தது.

இந்த நிலையில்தான், சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவோருக்கான கட்டுப்பாடுகளை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கருத்துச் சுதந்திரத்தைப் பொருத்தவரை இது ஒருபுறம் வரவேற்கத்தக்க விஷயமாக இருந்தாலும், அதன் முழு பலனும் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துபவர்களின் எண்ணம், நோக்கம், சிந்தனை ஆகியவற்றில்தான் அடங்கியுள்ளது.

குறிப்பாக, சிலர் இதுபோன்ற சமூக வலைதளங்களை பல நன்மைகளுக்கும் பயன்படுத்துகின்றனர். அதாவது, விபத்தில் சிக்கியவருக்கு ரத்த தானம் செய்யக் கோருவது, உடலுறுப்பு மாற்றம் தேவைப்படுபவர்களுக்கு உதவக் கோருவது என நல்ல பல விஷயங்களும் நடக்கத்தான் செய்கின்றன.

உதாரணமாக, சென்னை திருவொற்றியூர் சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்த தாமோதரன்- சுந்தரி தம்பதியரின் மகன் சிவமணி (23), தனது 7 வயதில் பெற்றோரைத் தொலைத்தார்.

16 ஆண்டுகள் கடந்த நிலையில், தனது பெற்றோரைக் கண்டறிய விரும்பிய அவர், கட்செவி அஞ்சல் (வாட்ஸ் அப்) மூலம் தகவல் கொடுத்தார். விளைவு நீ...ண்ட இடைவெளிக்குப் பிறகு தனது பெற்றோருடன் இணைந்து விட்டார்.

எந்த ஒரு விஷயமானாலும், அதில் நல்லதும் இருக்கும், கெட்டதும் இருக்கும். அன்னப் பறவை எப்படி பாலில் உள்ள தண்ணீரை விட்டுவிடுகிறதோ அதுபோல நாமும் சமூக வலைதளங்களில் தவறான செயல்பாடுகளைக் கைவிட்டு நல்லவற்றுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

No comments:

Post a Comment

IIM-I partners with 2 foreign varsities for dual degree

IIM-I partners with 2 foreign varsities for dual degree  TIMES NEWS NETWORK 19.09.2024  Indore : Indian Institute of Management, Indore, (II...