Thursday, April 9, 2015

சிவப்பு ரத்தம் குடித்த செம்மரக்கட்டை

கடலில் மட்டுமல்ல, காடுகளில் எல்லைத்தாண்டி போனாலும், உயிருக்கு ஆபத்து என்பதை நிரூபிக்கும் ஒரு கொடூர சம்பவம் ஆந்திரா வனப்பகுதிகளில் அரங்கேறியிருக்கிறது. செம்மரக்கட்டைகளை வெட்டிக்கொள்ளையடித்ததாக தமிழ்நாட்டில் உள்ள விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களைச் சேர்ந்த 20 இளைஞர்கள், ஆந்திர மாநில போலீசைச் சேர்ந்த செம்மர கடத்தல் தடுப்பு அதிரடி படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். தென்மாநிலங்களில் எங்கும் இல்லாத அளவுக்கு ஒரே நேரத்தில் 20 பேர்கள் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டது இதுவே முதல்முறையாகும். ஜவ்வாது மலைப்பகுதியில் உள்ள சிலருக்கு மரம் வெட்டுவதில் உள்ள லாவகம் வேறு யாருக்கும் இருப்பதில்லை என்பார்கள். சாதாரண ரம்பத்தை பயன்படுத்தியே மரங்களை வெட்டி, பட்டையை உரித்து, லாரிகளில் ஏற்றும் வலிமை கொண்டவர்கள் என்பதால், ஆந்திராவில் உள்ள வனப்பகுதிகளில் செம்மரத்தை வெட்டி கடத்தும் தொழிலுக்கு இவர்களைத் தேடிப்பிடித்து கடத்தல்காரர்கள் இந்த வேலைகளில் ஈடுபடுத்துகிறார்கள். இது உயிருக்கு ஆபத்தான வேலை என்றாலும், ஒருநாள் காட்டுக்குள் சென்று செம்மரத்தை வெட்டிக் கொடுத்தால் பலமுள்ளவன் ரூ.20 ஆயிரத்தை சம்பாதித்துக் கொண்டு வந்து விடலாம் என்ற நப்பாசையில், உயிரை பணயம் வைத்து இந்த தொழிலுக்கு செல்கிறார்கள்.

இதுவரையில் பலர் போலீஸ் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்துள்ளனர். கடந்த ஆண்டில் மட்டும் மே மாதத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேர்களும், ஜூன் மாதத்தில் ஒருவரும், ஜூலை மாதத்தில் 2 பேர்களும், ஆகஸ்டு மாதத்தில் 2 பேர்களும் செம்மரம் வெட்டச் சென்ற நேரத்தில் ஆந்திர போலீஸ் நடத்திய துப்பாக்கி சூட்டில் உயிரிழந்து இருக்கிறார்கள். இதுமட்டுமல்லாமல், இப்போதும் ஆந்திரா வனப்பகுதிகளில் செம்மரம் வெட்டச் சென்ற நேரத்தில் கைது செய்யப்பட்ட 1,121 தமிழக மக்கள் கடப்பா, கர்னூல், நெல்லூர், சித்தூர் மாவட்ட சிறைகளில் கைதிகளாக இருக்கிறார்கள். இவ்வளவு இருந்தும் காட்டுக்குள் போய் செம்மரம் வெட்டப் போனால் பிடித்து ஜெயிலில் போடுவார்கள், துப்பாக்கியால் சுடுவார்கள் என்ற பயமில்லாமல் இப்படி போய் மாட்டிக் கொண்டு உயிரிழந்து இருக்கிறார்கள்.

ஆந்திர அரசாங்கம் இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட 4,160 டன் செம்மரக்கட்டைகளை ஏலம் போட்டே கடந்த டிசம்பர் மாதத்தில் ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. ஒரு பக்கம் தொடர்ந்து இவ்வாறு செம்மரம் வெட்டப்பட்டுக் கொண்டே இருந்தால், தமிழக காடுகளில் சந்தன மரங்களை வெட்டிச் சாய்த்த நிலை செம்மரங்களுக்கும் வந்துவிடும், அரசுக்கு வரவேண்டிய வருமானம் களவாடப்படுவது மட்டுமல்லாமல், காடுகளும் அழிக்கப்பட்டுவிடும் என்ற எண்ணத்தில் செம்மரம் வெட்டுபவர்களை சுட்டுத் தள்ள போலீசுக்கு, ஆந்திர அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது. அப்படி இருந்தும் சட்ட விரோதமாக மரம் வெட்டச் சென்று உயிரை இழந்துவிட்டனர். இனி மேலும் இப்படி யாரும் செம்மரம் வெட்டவரக் கூடாது, வந்தால் இதுதான் நிலை என்று காட்டுவதற்காக இந்த துப்பாக்கி சூடு நடந்தது போல தெரிகிறது. இவ்வாறு துப்பாக்கி சூடு நடத்தி உயிரை பறித்தற்கு பதிலாக கைது செய்து இருக்கலாம், முட்டுக்குகீழ் சுட்டு இருக்கலாம், அதைத்தவிர்த்து இப்படி செய்தது மனித உரிமை மீறிய செயல், இது போலி என்கவுண்டர், சி.பி.ஐ. விசாரணை, நீதி விசாரணை வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இனியும் ஜவ்வாது மலையில் இருந்து யாரும் இந்த செம்மர கடத்தல் தொழிலுக்கு செல்லாத வகையில், அவர்களுக்குரிய வாழ்வாதாரத்தை வழங்க பல்வேறு வறுமை ஒழிப்பு திட்டங்கள், மலைவாழ் மக்கள் மேம்பாட்டு திட்டங்கள், வேலைவாய்ப்பு திட்டங்களை மத்திய அரசாங்கமும், மாநில அரசும் நிறைவேற்றி, அவர்களுக்கு புதிய வாழ்வை உருவாக்கிக் கொடுக்க வேண்டும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024