Monday, May 14, 2018

ராக யாத்திரை 03: மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்…

Published : 04 May 2018 10:01 IST

டாக்டர் ஜி. ராமானுஜம்

 


சென்ற வாரம் கேட்ட கேள்வியோடு தொடங்குவோம். ‘ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்…’ (அபூர்வ ராகங்கள் 1975) என்ற பாடல் வாணி ஜெயராமுக்குத் தேசிய விருது வாங்கித் தந்தது. சரணங்களில் வேறு வேறு ராகங்கள் வந்தாலும் அப்பாடல் ஆரம்பிக்கும் ராகம் ‘பந்து வராளி’(ரங்கீலா ஹாய் ராமா நினைவுக்கு வருகிறதா?). சரியான பதிலை முதலில் அனுப்பிய கோவை உஷாவுக்குப் பாராட்டுகள். பின்னர் அந்த ராகத்தைப் பற்றி அலசுவோம். இப்போது அதன் நெருங்கிய உறவான இந்த ராகத்தில்தான் கர்னாடக இசையின் தொடக்கப் பாடங்களைக் கற்றுத் தருவார்கள். ஆகவே, இந்த ராகத்திலேயே நமது பயணத்தைத் தொடங்குவது பொருத்தமாக இருக்கும். அதற்கு முன் இசை இயலின் நுட்பமான சில அம்சங்களைப் பார்க்கலாம்.

மறுபடியும் முதல்லேர்ந்தா?

முதலில் இசையில் எத்தனை ஸ்வரங்கள் இருக்கின்றன? என்ன சார்! போன வாரம்தானே ஏழு ஸ்வரங்கள் என்று பாட்டெல்லாம் பாடி முடித்தீர்களே எனக் கேட்கிறீர்களா? அது போன வாரம். நான் சொல்வது இந்த வாரம். ஒரு வாரத்தில் எத்தனையோ விஷயங்கள் மாறும். ஏழு சுரங்கள்தாம் என்றாலும் அவற்றில் ஸா, பா மட்டுமே மாறாத சுரங்கள். ஆகவேதான் ஸ்ருதி சேர்ப்பதற்காகத் தொடக்கத்தில் ‘ஸா… பா… ஸா…’என அந்த சுரங்களைப் பாடுகிறார்கள். ரி,க, ம,த,நி ஆகிய சுரங்கள் ஒவ்வொன்றிலும் இரண்டு வகைகள் உள்ளன. எப்படி என்கிறீர்களா? சின்ன ரி, பெரிய ரி அல்லது ரி1, ரி2 என்பார்கள். அடுத்து சின்ன க (க1), பெரிய க (க2). எண்கள் உதாரணத்தையே எடுத்துக் கொண்டால் 1,2 ,3 என எண்கள் இருந்தாலும். ஒன்றுக்கும் இரண்டுக்கும் இடையே ஒன்றே கால், ஒன்றரை எல்லாம் இருக்கிறதல்லவா? அதே போல் தான். ஸாவை விட ரி 1-ன் அதிர்வெண் பெரியது. அதைவிட ரி2 பெரிது.

கீ போர்டு, பியானோ போன்றவற்றில் பார்த்தீர்களானால் வெள்ளை, கறுப்பு என இரண்டு நிறங்களிலும் கட்டைகள் இருக்கும் அல்லவா? இரண்டு வெள்ளைக் கட்டைகளுக்கு இடையே கறுப்பு இருக்கும். உதாரணதுக்கு. ஸாவுக்கும் ரி2-க்கும் இடையே மேலே உள்ள கறுப்புக் கட்டை ரி1. இப்படி ஏழு சுரங்களைப் பன்னிரண்டாகப் பிரித்துள்ளனர். மனிதன் செவியால் இந்த பன்னிரண்டு சுரங்களைத்தான் பிரித்து உணர முடியும். மேற்கத்திய இசையிலும் இதே 12 தான். (நிபுணர்களால் 22 கூட பிரித்தறிய முடியுமாம்)

இப்படி ரி,க,ம,த,நி யில் வரும் வேறுபாடுகளை வைத்துக் கொண்டுதான் 72 தாய் ராகங்கள் உருவாகின்றன. ஒரு ராகத்தில் ரி,க,ம,த,நி ஆகிய சுரங்களில் ஒவ்வொன்றிலும் இரண்டு உள்ளன அல்லவா? ஒரு தாய் ராகம் (மேள கர்த்தா ராகம் எனவும் அழைக்கப்படும்) என்றால் அதில் ஏதேனும் ஒன்றுதான் வரும். க1 வந்தால் க2 வராது. உதாரணம் சங்கராபரணம் (வரிசையில் 29 ஆவது ராகம்) ஸ,ரி2,க2,ம1,ப,த2, நி2. கல்யாணி (65-வது ராகம் ) ஸ,ரி2,க2,ம2,ப,த2, நி2. கவனித்தால் இரண்டுக்கும் மா மட்டுமே வித்தியாசம். இப்படித்தான் 72 வகையான தாய் ராகங்கள் அமைகின்றன. வேதியியலில் பீரியாடிக் டேபிள் எனப்படும் தனிம அட்டவணை போன்றது இது.

தமிழிசைப் பண்களே அடிப்படை!

முதல் கட்டுரையில் சொன்னதுபோல் இசைத் தமிழில் ஏராளமான பண்கள் இருந்திருக்கின்றன. பரிபாடல். சிலப்பதிகாரம் போன்ற இலக்கியங்களில் ஏராளமான சான்றுகள், இலக்கணங்கள் உள்ளன. தேவாரம், திருவாசகம், நாலாயிர திவ்யபிரந்தங்களும் குறிப்பிட்ட பண்ணோடு இசைக்கப்பட்டன. பண்களே பின்னர் ராகமாயின. அப்படி வழங்கப்பட்ட ராகங்களையெல்லாம் வேங்கிடமகி என்பவர் 16-ம் நூற்றாண்டில் தொகுத்து 72 மேளகர்த்தா ராகங்கள் என்னும் அட்டவணை வகுத்ததே கர்னாடக இசை வரலாற்றில் முக்கிய நிகழ்வு.

அப்படி வந்த ராக வரிசையில் பதினைந்தாவதைத்தான் நாம் பார்க்கப் போகிறோம். தமிழ்ப் பண் மரபில் இந்தளப் பண் என அழைப்பார்கள். (இந்தோளம் என்னும் ராகத்துக்கும் இதற்கும் சம்பந்தமில்லை). கர்னாடக இசையில் தொடக்கப் பாடங்களை இந்த ராகத்தில்தான் சொல்லித் தருவார்கள். இதன் சுரங்கள் ஸ,ரி1,க2,ம1,ப,த1,நி2. ஸாவும் பாவும் எல்லா ராகங்களுக்கும் ஒன்றுதான் என்பது நினைவிருக்கிறதா?

தமிழிசை மூவருள் மூத்தவர், தற்கால பல்லவி- அனுபல்லவி- சரணம் எனப்படும் கீர்த்தனை வடிவத்தின் முன்னோடியான முத்துத்தாண்டவர். அவர் எழுதிய ‘ஆடிக் கொண்டார் அந்த வேடிக்கை காண’ என்ற பாடல் அமைந்த ராகம் இது. திரையிசையில் இளையராஜா ஒரு சாம்ராஜ்ஜியமே இந்த ராகத்தில் நடத்தியிருக்கிறார். உதாரணம் ‘முதல் இரவு’ (1979) திரைப்படத்தில் இடம்பெற்ற ‘மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்’ என்னும் அருமையான பாடல். அந்த ராகம்?

தொடர்புக்கு: ramsych2@gmail.com

No comments:

Post a Comment

HC orders govt to appoint 292 auxiliary nurses

HC orders govt to appoint 292 auxiliary nurses  TIMES NEWS NETWORK  6.11.2024  Bhopal/Jabalpur : In a significant judgement, a division benc...