Monday, May 14, 2018

ராக யாத்திரை 04: அலிபாபாவும் ஆலய மணியும்

Published : 11 May 2018 10:27 IST


டாக்டர் ஜி. ராமானுஜம்




‘கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா?’ பாடல் காட்சியில் சிவாஜி, சரோஜாதேவி

சென்ற வாரம் கேட்ட கேள்வியோடு தொடங்குவோம். ‘மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்’ பாடல் அமைந்த ராகம் ‘மாயா மாளவ கௌளை’. சரியாகச் சொன்ன பலரில் முதல்வரான ஏ.சிவகுமாருக்கு வாழ்த்துகள். சென்ற வாரம் தாய் ராகங்கள் 72 எனக் கொஞ்சம் கொட்டாவிவிடும் சமாச்சாரம் பற்றி விளக்கியிருந்தேனே. அந்தப் பட்டியலில் பதினைந்தாவது ‘மாயா மாளவ கௌளை’. பழந்தமிழில் ‘இந்தளப் பண்’.

எழுத்தாளர் சுஜாதாவின் எழுத்துக்கள் பலதரப்பட்டவை. தாத்தா ஈஸிச்சேரில் சாய்ந்துகொண்டு ஆழ்வார்களைப் பற்றி சுஜாதா எழுதியதைப் படித்துக்கொண்டிருப்பார். பேரன் மெக்ஸிகோ சலவைக்காரி ஜோக்கைப் பற்றிப் படித்து ரசித்துக்கொண்டிருப்பான். அவரா இது என்று வியக்கவைக்கும். அதுபோல் சில ராகங்களையும் இசை அமைப்பாளர்கள் வேறு வேறு இடங்களில் பயன்படுத்தி இருப்பார்கள். ஒரே ராகத்தில் அமைந்த இரண்டு பாடல்களைக் கேட்கும்போது அதுவா இது என்று வியக்கவைப்பதே ஒரு இசையமைப்பாளருடைய படைப்புத்திறனின் வெளிப்பாடு.

கற்பனையும் ராகமும்

படைப்பாளியின் கற்பனையோடு ராகமும் வளைந்து கொடுக்கும் தன்மையுடையதாக இருந்தால் நமக்குக் கிடைப்பவை விதவிதமான விருந்துகள் தாம். அப்படி ஒரு ராகம்தான் மாயா மாளவ கௌளை. தமிழ் இலக்கண நூல்களில் இன்னின்ன திணைகளுக்கு இன்னின்ன பண்கள் என இலக்கணம் வகுத்திருப்பார்கள். ஒவ்வொரு ராகமும் ஒவ்வொரு விதமான உணர்வை மனத்தில் தோற்றுவிக்கக்கூடியது. சில ராகங்கள் சோகத்துக்கானவை. உதாரணம் முகாரி, சுபபந்துவராளி போன்றவை.

‘மாயா மாளவ கௌளை’ ராகம் பக்தி உணர்வுக்கும், மெல்லிய சோகத்துக்கும் ஏற்ற ராகம். மெய்மறக்கச் செய்யும் ராகம். வேகமாகவும் விறுவிறுப்பாகவும் பாடவும் ஏற்றது. ‘உடல் பொருள் ஆனந்தி’ என்றொரு நாவலில் ஜாவர் சீதாராமன் இந்த ராகம் வீணையில் வாசிக்கப்படுவது எப்படி உள்ளத்தை உருக்கும் விதமாக உள்ளது என்று விலாவாரியாக விவரித்திருப்பார்.

கர்னாடக சங்கீதம் படிப்பவர்களுக்கான பால பாடங்கள் மாயா மாளவ கௌளை ராகத்தில்தான் சொல்லிக்கொடுக்கப்படுகின்றன. இந்த இடத்தில் ஒரு சின்ன தொழில்நுட்ப சமாச்சாரம். இந்த ராகத்தின் ஏழு சுரங்களையும் மா வை மையமாக (கமல் ரசிகர்களுக்கு மய்யமாக) வைத்துக்கொண்டு இந்தப் பக்கம் மூன்று அந்தப் பக்கம் மூன்று எனப் பிரித்தால் ஸ் ரி1 க2 ம1 பத1நி2 என இரண்டு பக்கங்களிலும் சமமாக இருக்கும். அதாவது ஸ ரி க -வில் ஒவ்வொரு சுரத்துக்கும் இடையே உள்ள இடைவெளி போன்றே ப த நி-யிலும் இருக்கும். அதனாலேயே இதை ஆரம்பப் பாடங்களில் சொல்லித் தருகிறர்கள்.

மாயம் செய்யும் மாயா!

சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசுவாமி தீட்சிதர் ‘ஸ்ரீ நாதாதி குரு குஹோ’ என்று இந்த ராகத்தில் தான் தன் முதல் பாடலை இயற்றினார். தியாகய்யர் ‘துளசி தளமுலசே’ என்று ஒரு இனிமையான கீர்த்தனையை அமைத்திருக்கிறார். பக்தியும் சோகமும் கலந்த மெட்டு. முத்துத்தாண்டவரின் ‘ஆடிக் கொண்டார் அந்த வேடிக்கை காணக் கண் ஆயிரம் வேண்டாமோ?’ என்ற பாடல், இந்த ராகத்தில் அமைந்த சிறந்த செவ்வியல் பாடல்களுள் ஒன்று.

இத்தனை சிறப்புமிக்க மாயா மாளவ கௌளையில் தொடக்க காலத்தில் அமைந்த திரைப்பாடல்கள் குறைவுதான். மாயா மாளவ கௌளையை மிக வித்தியாசமாக அரேபிய இசை பாணியில் தந்தவர் தட்சிணாமூர்த்தி.(ராஜாவின் குரு அல்ல. இவர் வேறு). படம் ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’ (1956). பாடல் ‘அழகான பொண்ணுதான் அதற்கேற்ற கண்ணுதான்’. பானுமதி அருமையாகப் பாடியிருப்பர்.

‘துளசி தளமுலசே’ மெட்டிலேயே பட்டினத்தார் (1962) படத்தில் ‘நிலவே நீ இந்த சேதி சொல்லாயோ’ என்று ஜி.ராமனாதன் அற்புதமான பாடல் ஒன்றை அமைத்திருப்பார். ‘கோடிச் செல்வம் நிறைந்தாலும் என்ன அதைக் குலவிக் கொஞ்ச மனம் குளிர்ந்திடுமோ... ஓடி வந்து விளையாட இங்கு ஒரு பாலன் வேண்டுமென வேலன் தந்தையிடம் (நிலவே)’ என்று மருதகாசி உருக்கமாய் எழுதியிருப்பார்.


மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் – ராமமூர்த்தி இசையமைப்பில் ஒலித்தது ‘ஆலய மணி’ (1962). அரிதாக ஒலித்தாலும் அருமையான மாயா மாளவ கௌளையை அளித்திருப்பார்கள் இரட்டையர்கள் . அதுதான் டி.எம்.எஸ். கணீர்க் குரலில் பாடிய ‘கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா?’ என்ற பாடல். இடையில் வரும் ஹம்மிங் (ஹம்மிங் அரசி எல்.ஆர்.ஈஸ்வரிக்குக் கேட்கணுமா!) மெல்லிசையாய் ராகத்தைக் கோடிட்டுக் காட்டுவது மிக இனிமையாக இருக்கும்.

அவ்வளவாகப் பிரபலமாகாத ‘வெள்ளி ரதம்’ (1979) என்ற படத்திலும் எம்.எஸ்.வி. ஓர் அருமையான பாடலை இந்த ராகத்தில் அமைத்திருப்பார். சுசீலாவின் குரலில் ‘கலைமகள், அலைமகள், மலைமகள் மூவரும் சந்திக்கும் ராத்திரி’ என ஒரு இனிய பாடலைத் தந்திருப்பார். இவர்கள் போட்டதெல்லாம் கோடுதான். அதன்பின் இந்த ராகத்தில் தேசிய நெடுஞ்சாலையே போட்டவர் இசைஞானிதான்.

ராஜாவுக்குப் பிடித்த ராகம்

திரையிசையில் மாயா மாளவ கௌள ராகத்தை மிக அதிகமாகப் பயன்படுத்தியது இளையராஜாதான். எனக்குத் தெரிந்தே ஐம்பது பாடல்கள்வரை இந்த ராகத்தில் இசைத்திருக்கிறார். பல்வேறு விதமான உணர்வுகளுக்கும் பல்வேறு விதமான தளங்களில் இந்த ராகத்தைப் பயன்படுத்தினார். 1977-ல் வெளிவந்த ஒரு திரைப்படத்தில் இந்த ராகத்தில் ஒரு பாடலை முதன்முதலாகப் பயன்படுத்துகிறார். ராகநதி பிரவாகமாக எடுத்து ஓடப்போவதன் முதல் ஊற்று அப்பாடல். டி.எம்.எஸ் - ஜானகி குரலில் அமைந்த இப்பாடலுடன் படத்தின் பிற பாடல்களையும் கேட்டுவிட்டுத்தான் இயக்குநர் ஸ்ரீதர் தனது ‘இளமை ஊஞ்சலாடுகிறது’ என்னும் இசை ஓவியம் வரையும் தூரிகையை இளையராஜாவிடம் கொடுத்தாராம். அது என்ன படம், என்ன பாடல்?

தொடர்புக்கு: ramsych2@gmail.com
படங்கள் உதவி: ஞானம்

No comments:

Post a Comment

Asset details of government employees cannot be shielded from public: Madras HC

Asset details of government employees cannot be shielded from public: Madras HC These details, particularly the date of joining and superann...