Tuesday, May 1, 2018

நலம் தரும் நான்கெழுத்து 09: அவசரம் எனும் நோய்!

Published : 18 Nov 2017 12:38 IST

டாக்டர் ஜி. ராமானுஜம்




“உலகிலேயே எதையும் சாதிக்கக்கூடிய இரண்டு மாவீரர்கள்- காலமும் பொறுமையும்”

- லியோ டால்ஸ்டாய் – போரும் அமைதியும் நாவலில்...

விடாமுயற்சி, விடாது கறுப்பு போல் இந்த வாரமும் நம்மைத் தொடர்கிறது. விடாமுயற்சியின் மச்சம் வைத்த மாறுவேடம்தான் பொறுமை.

‘இந்த நூற்றாண்டின் தீர்க்க முடியாத நோய்களில் ஒன்று அவசரம்’ என்பார் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன். சென்ற நூற்றாண்டுகளிலெல்லாம் இல்லாத பல்வேறு கருவிகளும் வசதிகளும் இப்போது நம்மிடையே உள்ளன. நம்முடைய வேலையை எளிதாக்கவும் நேரத்தை மிச்சப்படுத்தவும் பல்வேறு கருவிகள் கண்டறியப்பட்டுள்ளன. ஆக முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நமக்கு நேரமும் பொறுமையும் வாய்த்திருக்க வேண்டும். ஆனால், முரண்பாடாக இப்போதுதான் நமக்கு அவசரமும் பொறுமையின்மையும் உச்சத்தில் இருக்கிறது.

யோசனையை இழக்கும் மூளை

பஞ்சாப்பைச் சேர்ந்தவர்கள் தமிழ் படிக்க மாட்டார்கள் என்கிற தைரியத்தில் ஒரு நகைச்சுவைத் துணுக்கைச் சொல்கிறேன். ஒரு சர்தார்ஜி எட்டு மாடிக் கட்டிடத்தின் உச்சியில் இருந்தாராம். அவரிடம் ஒருவர் ஓடி வந்து ‘குர்மிந்தர் சிங்! உங்கள் மகள் இறந்து விட்டாள்!’ எனச் சொன்னாராம். உடனே துக்கத்தில் மாடியிலிருந்து கீழே குதித்துவிட்டாராம் அந்த நபர். ஆறாவது மாடி வரும்போதுதான் தனக்கு மகளே கிடையாது என்பது நினைவுக்கு வந்ததாம். நான்காம் மாடி வரும்போதுதான் தனக்குக் கல்யாணமே ஆகவில்லை என்பது நினைவுக்கு வந்ததாம். தரையைத் தொடும்போதுதான் தன்பெயர் குர்மிந்தர் சிங்கே இல்லை என்பது நினைவுக்கு வந்ததாம்.

அவசரமாக ஒன்றைச் செய்யும்போது மூளை அறிவுப்பூர்வமாக யோசிக்கும் திறனை முற்றிலுமாக அடகுவைத்து விடுகிறது.

கிரிக்கெட் விளையாட்டில் எத்தனை முறை பார்த்திருக்கிறோம். இரண்டாவதாகக் களம் இறங்கும் அணி வலிமையான அணியாக இருந்தாலும் நிறைய ஓட்டங்கள் எடுக்க வேண்டும் என்கிற அவசரத்தில் விளையாடி விக்கெட்டுகளைப் பறிகொடுக்கும். ஆக அவசரப்படுவதற்கு முக்கியக் காரணம் நாம் செய்ய நினைக்கும் செயல்கள் பல இருக்கின்றன. ஆனால், செய்வதற்கான நேரம் மிகக் குறைவாக இருக்கிறது. ஆகவே, அவசரமும் பதற்றமும் வருகின்றன. இன்னொரு விதமாகச் சொன்னால் நம் எதிர்பார்ப்புகள் அதிகமாக ஆக, அவசரத்தன்மையும் அதிகரிக்கிறது. எனவே, பேராசைப்படாமல் சாத்தியமாகக்கூடிய இலக்கை வைத்துக்கொண்டாலே பொறுமையாக இருக்கலாம்.

இலக்கில்லாத ஓட்டம்

அடைய முடியாத இலக்கை நோக்கி வேகமாக ஓடுவதைவிட மோசமானது, இலக்கே இல்லாமல் ஓடுவது. எல்லா பண்புகளையும் போலவே பொறுமையும் மூளையின் சில பகுதிகளில் ரசாயன மாற்றங்களால் தீர்மானிக்கப்படுகிறது.

சிலநேரம், மூளையில் ஏற்படும் பாதிப்புகளாலும், ‘ஹைப்பர் ஆக்டிவிட்டி’ எனப்படும் அதீதப் பரபரப்பு நோய்களாலும் பொறுமையின்மையும் அவசரமும் தென்படும். ஒரே விஷயத்தில் கவனம் செலுத்த முடியாமல் மூளை கணத்துக்குக் கணம் கவனச்சிதறலில் குழம்பும். ஆக பொறுமையின்மை என்பது அதீதமானால், அதுவே ஒரு நோயின் அறிகுறியாகவும் ஆகிவிடுகிறது.

நிதானமும் சோம்பேறித்தனமும்

ஆனால், எல்லா நேரத்திலும் பொறுமையுடன் நிதானமாக முடிவெடுத்தே ஆக வேண்டும் என்பதில்லை. சில நேரம் வேகமாக முடிவெடுத்தே ஆக வேண்டும்.

வெளிநாடு ஒன்றில் அயல்நாட்டுத் தூதரகங்கள் எல்லாம் இருந்த பகுதியில் தீப்பிடித்துவிட்டதாம். அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் அவசரமாக வெளியேறித் தப்பிவிட்டனராம். ஜப்பான் அதிகாரிகள் துரிதமாகத் தீயணைப்புக் கருவிகளை வைத்துத் தீயை அணைக்கத் தொடங்கினராம். இந்திய அதிகாரிகளோ தட்டச்சு இயந்திரத்தில் ‘இங்கே தீப்பிடித்துவிட்டது. அடுத்து என்ன செய்ய வேண்டும்’ என ஆலோசனை கேட்டு இந்தியாவில் உள்ள மேலதிகாரிகளுக்குக் கடிதம் ஒன்றைத் தட்டச்சு செய்யத் தொடங்கினார்களாம்.

பொறுமை, பெருமைதான். ஆனால், எல்லை மீறிய பொறுமை எதற்கும் பயன்படாது. வேகமாகச் செயல்படுவதற்கும் அவசரமாகச் செயல்படுவதற்கும் உள்ள வேறுபாட்டையும் நிதானமாகச் செயல்படுவதற்கும் சோம்பேறித்தனத்துக்கும் உள்ள வேறுபாட்டையும் அறிந்து நடக்கும் சமநிலையே நலம்தரும் நான்கெழுத்து.

கட்டுரையாளர், மனநலத் துறைப் பேராசிரியர்
தொடர்புக்கு: ramsych2@gmail.com

No comments:

Post a Comment

PhonePe, GPay get 2 years more to cut UPI mkt share

PhonePe, GPay get 2 years more to cut UPI mkt share  NPCI Lifts 10Cr User Cap On WhatsApp Pay  Mayur.Shetty@timesofindia.com 01.01.2025 Mumb...