Saturday, May 12, 2018

10 நிமிடத்திற்கு நம்புகிறேன்: கிரண்பேடி : நிரந்தரமாக நம்புகிறேன்: நாராயணசாமி

Added : மே 12, 2018 01:56



புதுச்சேரி: புதுச்சேரி கம்பன் விழாவில், தன் ஆங்கில உரையை, முதல்வர் நாராயணசாமியை அழைத்து, கவர்னர் மொழிபெயர்க்க வைத்தார். இருவரும், ஒருவரை ஒருவர் இன்முகத்துடன் கலாய்த்துக்கொண்டது, விழாவில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.புதுச்சேரி கவர்னர் கிரண் பேடியும், முதல்வர் நாராயணசாமியும், ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றனர். இதன் உச்சகட்டமாக, நேற்று முன்தினம், முதல்வர் நாராயணசாமி கூறுகையில், 'மத்திய அரசுக்கு கவர்னர் அனுப்பிய கோப்புகள் அனைத்தையும் திருப்பி அனுப்பி, புதுச்சேரி அமைச்சரவைக்கே முடிவு எடுக்கும் அதிகாரம் உள்ளதாக கூறிவிட்டது. 'இதன் மூலம், மத்திய அரசின் நம்பிக்கையை இழந்த கவர்னர் கிரண் பேடி, பதவி விலக வேண்டும்' என்றார்.அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், கவர்னர் கிரண் பேடி, 'வேலையில் இருந்து தான் விலக முடியும். இலக்கில் இருந்து விலக முடியாது. புதுச்சேரியை வளமாக மாற்ற வேண்டும் என்ற இலக்குடன் செயல்பட்டு வருகிறேன். 'புதுச்சேரியின் மீது விருப்பம் இருந்தால், என்னுடன் இணைந்து பணியாற்ற வேண்டும்' என்று, முதல்வர் நாராயணசாமிக்கு அழைப்பு விடுத்திருந்தார்.கவர்னர், முதல்வர் இடையிலான உச்சகட்ட மோதல், நேற்று முன்தினம், தவளக்குப்பத்தில் நடந்த திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் துவக்க விழாவில் வெட்டவெளிச்சமானது. இரண்டு மணி நேரம் நடந்த விழாவில், முதல்வரும், கவர்னரும் அருகருகே அமர்ந்திருந்தும், ஒரு வார்த்தை கூட பேசிக்கொள்ளவில்லை.இந்நிலையில், கம்பன் கலையரங்கில், நேற்று காலை நடந்த கம்பன் விழா வில், கவர்னர், முதல்வர் இருவரும் பங்கேற்றனர். கவர்னர் கிரண்பேடி தொடக்க உரையாற்ற வந்தார். அப்போது, 'இங்கு எத்தனை பேருக்கு ஆங்கிலம் தெரியும் கையை உயர்த்துங்கள்' என்றார். மிகக்குறைவான எண்ணிக்கையில், கையை உயர்த்தினர். பின், 'இங்கு ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், பிரெஞ்ச் என, பன்மொழி தெரிந்த முதல்வர் உள்ளார். அவர் மொழிமாற்றம் செய்ய வேண்டும்' என, அழைத்தார்.'கவர்னர் அழைக்கிறார் என்பதை விட, கம்பன் விழாவிற்காக மொழி மாற்றம் செய்கிறேன்' என, முதல்வர் நாராயணசாமியும், அதற்கு முன்வந்தார். அப்போது, கவர்னர், தான் கூறுவதை மட்டுமே மொழிமாற்றம் செய்ய வேண்டும் என்றும், 10 நிமிடத்திற்கு முதல்வரை நம்புவதாகவும் கூறினார்.உடனே, முதல்வர் நாராயணசாமி, தான் நிரந்தரமாகவே கவர்னர் கிரண்பேடியை நம்புவதாக தெரிவித்தார். இதையடுத்து, தானும் அவ்வாறு முதல்வரை நம்புவதாகவும், இந்த நட்பு காலம் முழுக்க நீடிக்க வேண் டும் என, விரும்புவதாகவும் கிரண் பேடி கூறினார்.

அதையடுத்து, கவர்னரின் ஆங்கில உரையை முதல்வர் மொழியாக்கம் செய்தார். விழா மேடையில் கவர்னருக்கும், முதல்வருக்கும் நடந்த இந்த உரையாடல், பார்வையாளர்கள் மத்தியில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024