Saturday, May 12, 2018

இன்று கர்நாடகா தேர்தல்: மும்முனை போட்டி நிலவுகிறது

Updated : மே 12, 2018 06:29 | Added : மே 12, 2018 04:41



 
பெங்களூரு : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே, கர்நாடக மாநில சட்டசபை தேர்தல், இன்று நடக்கிறது.. மாநிலம் முழுவதும், ஒரு மாதத்துக்கு மேலாக நடந்து வந்த அனல் பறக்கும் பிரசாரம், முடிவடைந்தது. கர்நாடக முதல்வரும், காங்., மூத்த தலைவருமான, சித்தராமையா, ஆட்சியை தக்க வைப்பாரா அல்லது பா.ஜ.,வின் எடியூரப்பாவிடம், முதல்வர் நாற்காலியை பறிகொடுப்பாரா என்பது, வரும், 15 ல் தெரிந்து விடும்.

கர்நாடகாவில் சித்தராமையா அரசின் பதவிக் காலம், இம்மாதம், 28ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, சட்டசபை தேர்தலுக்கான அட்டவணை, மார்ச், 27ல், வெளியிடப்பட்டது.ஜெயநகர் தொகுதி, பா.ஜ., வேட்பாளர் விஜயகுமார், மாரடைப்பால் இறந்தார். அந்த தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

மீதமுள்ள, 223 தொகுதிகளிலும் இன்று ஓட்டுப்பதிவு நடக்கிறது. பா.ஜ., சார்பில், 223 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். காங்., சார்பில், 221 பேரும், மதச் சார்பற்ற ஜனதா தளம் சார்பில், 200 பேரும் போட்டியிடுகின்றனர். சுயேச்சைகள் உட்பட, மொத்தம், 2,636 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.பா.ஜ., சார்பில், பிரதமர் நரேந்திர மோடி, கட்சியின் தேசிய தலைவர், அமித் ஷா, மத்திய அமைச்சர்கள், ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், உ.பி., முதல்வர், யோகி ஆதித்யநாத், ம.பி., முதல்வர், சிவ்ராஜ் சிங் சவுகான் காங்கிரஸ் சார்பில், கட்சி தலைவர், ராகுல், மூத்த தலைவர், சோனியா மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர்கள் தீவிர பிரசாரம் செய்தனர். மதச் சார்பற்ற ஜனதா தளம் சார்பில், முன்னாள் பிரதமர் தேவகவுடா பிரசாரத்தில் ஈடுபட்டார்

அனைத்து தொகுதிகளுக்கும், இன்று காலை, 7:00 மணி முதல், மாலை, 6:00 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்கிறது. மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மூலம் மாநிலம் முழுவதும், 56 ஆயிரத்து 995 சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்தலில், ஐந்து கோடி வாக்காளர்கள், ஓட்டளிக்க தகுதி பெற்று உள்ளனர்.

இத்தேர்தலில் காங்., பா.ஜ. மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் என மூன்று கட்சிகள் தனிததனியே போட்டியிடுவதால் மும்முனை போட்டி நிலவுகிறது. கர்நாடக மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள், அடுத்தாண்டு நடக்கும் லோக்சபா தேர்தலில் எதிரொலிக்கும் என, எதிர்பார்க்கப்படுவதால் வெற்றி யாருக்கு என்பது குறித்து மே 15-ல் நடக்க உள்ள ஓட்டு எண்ணிக்கையின் போது தெரிவரும்.தேர்தல் பாதுகாப்புக்காக மாநில முழுவதும் 1 லட்சத்து 40 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024