Thursday, May 17, 2018


‘ஜூன் 7-ம் தேதி ‘காலா’ ரிலீஸாவது உறுதி; வதந்திகளை நம்ப வேண்டாம்’ - தயாரிப்பு நிறுவனம்

Published : 16 May 2018 19:28 IST

 

ஜூன் 7-ம் தேதி ‘காலா’ படம் ரிலீஸாவது உறுதி என்றும், வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

பா.இரஞ்சித் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘காலா’. தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தை, லைகா புரொடக்‌ஷன்ஸ் வெளியிடுகிறது. இதன் இசை வெளியீட்டு விழா கடந்த 7-ம் தேதி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்றது.

நானா படேகர், சமுத்திரக்கனி, ஹுமா குரேஷி, ஈஸ்வரி ராவ், அருள்தாஸ், மணிகண்டன், அஞ்சலி பாட்டீல், சாக்‌ஷி அகர்வால் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜி.முரளி ஒளிப்பதிவு செய்ய, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். படத்தில் மொத்தம் 9 பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

‘காலா’, ஏப்ரல் 27-ம் தேதி ரிலீஸாகும் என முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் வேலை நிறுத்தம் காரணமாக ஜூன் 7-ம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், அதிலும் ஒரு சிக்கல் எனத் தகவல் பரவியது.



அதாவது, ‘ஜுராஸிக் பார்க்’ ஹாலிவுட் படத்தின் அடுத்த பாகமான ‘ஜுராஸிக் வேர்ல்டு : ஃபாலன் கிங்டம்’ ஜூன் 8-ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸாவதாகவும், இந்தியாவிலும் நிறைய திரையரங்குகளில் வெளியாவதால் ‘காலா’ படத்துக்குப் போதுமான திரையரங்குகள் கிடைக்காததால் ரிலீஸ் தள்ளிப் போகிறது என்றும் கூறப்பட்டது.

இதுகுறித்து தயாரிப்பு நிறுவனத்திடம் கேட்டபோது, ‘எந்த வதந்திகளையும் நம்பாதீர்கள். திட்டமிட்டபடி ஜூன் 7-ம் தேதி ‘காலா’ ரிலீஸாவது உறுதி. அதற்கான வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன’ என்று பதில் அளித்துள்ளனர். ‘ஜுராஸிக் வேர்ல்டு : ஃபாலன் கிங்டம்’ ஜூன் 22-ம் தேதி தான் ரிலீஸாகிறது. அப்படியிருக்கும்போது யார் இந்த வதந்தியைக் கிளப்பிவிட்டது என விசாரித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 02.01.2026