Saturday, May 12, 2018

ஸ்ரீதேவி மரணம் குறித்து விசாரணை கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்

Added : மே 12, 2018 00:50

புதுடில்லி: நடிகை ஸ்ரீதேவியின் மரணம் குறித்து விசாரிக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பிரபல நடிகை, ஸ்ரீதேவி, 54; தமிழில், மூன்றாம் பிறை, வறுமையின் நிறம் சிகப்பு உட்பட பல படங்களில் நடித்தவர்.

சந்தேகம் : பிப்ரவரியில், திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க, ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாய்க்கு சென்றிருந்தார். அங்கு ஒரு ஓட்டலில் தங்கியிருந்தார். அப்போது அவர், குளியல் அறையில் இறந்து கிடந்தார். 'மாரடைப்பால் அவர் இறந்தார்' என, முதலில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், பிரேத பரிசோதனை அறிக்கையில், 'மது அருந்தியதால், ஓட்டல் அறையின் குளியல் தொட்டியில் விழுந்து, ஸ்ரீதேவி இறந்துள்ளார்' என, கூறப்பட்டிருந்தது.நீண்ட விசாரணைக்கு பின், ஸ்ரீதேவியின் இறப்பில் சந்தேகம் இல்லை எனக் கூறி, அவரது உடலை, குடும்பத்தினரிடம்,, துபாய் போலீசார் ஒப்படைத்தனர். இந்நிலையில், ஸ்ரீதேவி மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி, இயக்குனர் சுனில் சிங் தாக்கல் செய்த மனுவை, டில்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில், அவர் மனு தாக்கல் செய்தார்.

இன்சூரன்ஸ் : இந்த மனு, தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விகாஸ் சிங் கூறுகையில், ''ஸ்ரீதேவி பெயரில், 240 கோடி ரூபாய்க்கு, ஓமனில் இன்சூரன்ஸ் பாலிசி உள்ளது. ''ஐக்கிய அரபு எமிரேட்சில், அவர் இறந்தால் மட்டுமே, அந்த பாலிசி தொகை கிடைக்கும்; இந்த நிலையில், துபாயில் அவர் திடீரென இறந்தது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி விசாரிக்க உத்தரவிட வேண்டும்,'' என்றார். ஆனால், 'துபாய் போலீசார் நடத்திய விசாரணையில், சந்தேகப்படுவதற்கு ஏதும் இல்லை' என கூறி, மனுவை, நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024