Saturday, May 12, 2018

பெரம்பலூர் அருகே விபத்து : காஞ்சியை சேர்ந்த 9 பேர் பலி

Updated : மே 12, 2018 00:19 | Added : மே 12, 2018 00:18



காஞ்சிபுரம்: சின்ன காஞ்சிபுரத்திலிருந்து, கேரளாவுக்கு சுற்றுலா சென்ற குடும்பத்தினர் பயணித்த கார், பெரம்பலுார் அருகே விபத்துக்குள்ளாகி, ஒன்பது பேர் இறந்த சம்பவம், இப்பகுதியில் பயங்கர சோகத்தை ஏற்படுத்திஉள்ளது. காஞ்சிபுரத்தின் திருமால் நகர், அஸ்தகிரி தெரு, அமுதபடி தெரு, அம்மங்கார தெரு போன்ற பகுதியில் வசிப்போர், இந்த சம்பவத்தால் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். சின்ன காஞ்சிபுரம், திருமலை நகரைச் சேர்ந்தவர், எஸ்.ஆர்.மோகன்; பட்டு சேலை உற்பத்தியாளர். இவர் மனைவி லஷ்மி, 28. இந்த தம்பதிக்கு, பவித்ரா, 14; நவிதா, 8, மற்றும் வரதராஜன், 5, என, மூன்று பிள்ளைகள். குடும்பத்துடன் நிம்மதியாக வசித்து வந்த மோகன், கேரளாவிற்கு சுற்றுலா செல்ல முடிவு செய்தார். தன் குடும்பத்துடன், அக்கா கணவர் முரளி, மற்றொரு அக்காவின் மகள் சோபனா, 19, ஆகியோரை அழைத்துக்கொண்டு, நேற்று முன்தினம் மாலை புறப்பட்டனர். காஞ்சிபுரத்திலிருந்து, 'டவேரா'காரில் புறப்பட்ட இந்த ஏழு பேருடன், அம்மங்கார தெருவைச் சேர்ந்த பூபதி மற்றும் நாராயணன் என்ற பிரபாகரன் ஆகிய இரு ஓட்டுனர்களும் சென்றனர். நேற்று முன்தினம் இரவு, திருச்சி நோக்கி இவர்களின் கார் சென்று கொண்டிருந்தது. பெரம்பலுார் நான்கு வழிச்சாலையில், எதிரே வந்த காரின் டயர் வெடித்து, அந்த கார் பறந்து வந்து, மோகன் சென்ற கார் மீது விழுந்துள்ளது.இதில், படுகாயம் அடைந்த மோகன் உள்ளிட்ட ஒன்பது பேரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். விபத்து குறித்து, தகவல் தெரிந்தவுடன், காஞ்சிபுரத்தில் உள்ள மோகனின் உறவினர்கள் பெரம்பலுார் புறப்பட்டு சென்று, பிரேத பரிசோதனைக்கு பின், அவர்களின் உடலைபெற்றுள்ளனர். தகவலறிந்தவர்கள் மோகனின் வீட்டில் குழுமியுள்ளனர். மோகன் குடும்பத்தினர் வசித்த, திருமலை நகர் பகுதிவாசிகள், இந்த தகவலை கேட்டு, சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். அதுபோல், சோபனா, முரளியின் அஸ்தகிரி தெருஎன சின்ன காஞ்சிபுரம் பகுதியே சோகத்தில் ஆழ்ந்துள்ளது. மேலும், பூபதி மற்றும் நாராயணன் ஆகிய கார் ஓட்டுனர்களின் வீடுகளும் களையிழந்து காணப்பட்டன.

ஒன்பது பேரின் உடல்களுக்கும், இன்று இறுதி சடங்கு நடைபெறும் என, உறவினர்கள் தெரிவித்து உள்ளனர். \பத்தாண்டுகளாக சிரமப்பட்டு, கைத்தறி தொழிலில் உயர்ந்து வந்தார். இப்படி ஒரு விபத்து நடக்கும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. என் மாமா அனைவரிடமும் நன்றாக பழகக்கூடியவர். இறந்தவர்களின் உடல்களை கைப்பற்ற, உறவினர்கள் பெரம்பலுார் சென்றுள்ளனர். சொல்ல முடியாத துயரத்தில் ஆழ்ந்துள்ளோம்.
பி.பாலாஜி, மோகனின் மைத்துனர்

உறவினர் சுற்றுலா செல்வதால், சோபனாவும் புறப்பட்டு சென்றாள். ஆனால், அவள் இப்படி திரும்பி வருவாள் என, எதிர்பார்க்கவில்லை. கல்லுாரியில் நன்றாக படிப்பார். பி.காம்., இரண்டாமாண்டு படித்து வந்தார். எங்கள் குடும்பமே இதனால், சோகத்தில் ஆழ்ந்துள்ளோம். இதுபோன்ற துயரம் யாருக்கும் ஏற்படக் கூடாது.

ஜி.ஆர்.கீதா, சோபனாவின் சகோதரி

No comments:

Post a Comment

HC orders govt to appoint 292 auxiliary nurses

HC orders govt to appoint 292 auxiliary nurses  TIMES NEWS NETWORK  6.11.2024  Bhopal/Jabalpur : In a significant judgement, a division benc...