Thursday, May 24, 2018

லஞ்ச வேளாண் அதிகாரி சிறையில் அடைப்பு : விடிய, விடிய விசாரணை; ஆவணங்கள் சிக்கின

Added : மே 24, 2018 04:09

கோவை: கோவையில், லஞ்சம் வாங்கி சிக்கிய வேளாண் இணை இயக்குனர் மற்றும் உதவியாளர் வீடு, அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விடிய, விடிய சோதனை நடத்தி, ரொக்கம் மற்றும் ஆவணங்களை கைப்பற்றினர்.கோவை, புலியகுளத்தைச் சேர்ந்தவர் அசோக்குமார், 45. இவருக்கு, சூலுார் பகுதியில், 10 ஏக்கர்விவசாய நிலம் உள்ளது. இதை குடியிருப்பு நிலமாக மாற்றி, ரியல் எஸ்டேட் தொழில் செய்ய திட்டமிட்டார்.இதற்காக, தடாகம் ரோட்டில் உள்ள வேளாண் இணை இயக்குனர் சுகுமார், 57, என்பவரை அணுகி, விவசாய நிலத்தை குடியிருப்பு நிலமாக மாற்ற, 'பயனற்ற நிலம்' என தடையில்லா சான்று வழங்க கோரினார்.அதற்கு, நான்கு லட்சம் ரூபாய் லஞ்சமாக சுகுமார் கேட்டுள்ளார். 'அவ்வளவு தர முடியாது' என, அசோக்குமார் தெரிவித்தார்.இதன்பின், இணை இயக்குனர் மற்றும் அவரது உதவியாளர் முருகன், 37, ஆகியோர் பேரம் பேசினர். இறுதியில், 1.50 லட்சம் ரூபாய், இணை இயக்குனருக்கும், 10 ஆயிரம் ரூபாய், உதவியாளருக்கும் கொடுப்பதாக, அசோக்குமார் தெரிவித்தார்.பின், கோவை லஞ்ச ஒழிப்பு, டி.எஸ்.பி., ராஜேஷிடம், அசோக்குமார் புகார் அளித்தார். போலீசார் அளித்த ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளுடன், நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு அசோக்குமார், இணை இயக்குனர் அலுவலகம் சென்றார்.லஞ்ச பணத்தை, இணை இயக்குனர் வாங்கியதும், மறைந்திருந்த போலீசார், அவரையும், உதவியாளரையும் பிடித்தனர்.பின், அலுவலக வளாகத்தில் உள்ள சுகுமாரின் வீட்டிலும், பொள்ளாச்சியில் உள்ள முருகனின் வீட்டிலும், போலீசார் நேற்று, அதிகாலை வரை விடிய, விடிய சோதனை நடத்தினர்.இதில், சுகுமார் வீட்டில் இருந்து, ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம், பல்வேறு ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.நேற்று காலை, இருவரையும் கைது செய்த போலீசார், கோவை லஞ்ச ஒழிப்பு சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தி, கோவை மத்திய சிறையில்அடைத்தனர்.
திண்டிவனத்திலும் சோதனைஇணை இயக்குனர் சுகுமாரின் சொந்த ஊர், விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம். கோவை லஞ்ச ஒழிப்பு போலீசார் அளித்த தகவலின்படி, திண்டிவனத்தில் உள்ள சுகுமாரின் வீட்டிலும், விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.

அங்கு கைப்பற்றப்பட்ட ஏராளமான ஆவணங்களை பறிமுதல் செய்த போலீசார், கோவை லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு அனுப்பியுள்ளனர். சுகுமார், ஆறு மாதங்களாக கோவையில் பணியாற்றி வருகிறார். உதவியாளர் முருகன், ஓராண்டாக பணியாற்றி வருகிறார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 7.11.2024