Thursday, May 24, 2018

கடும் போட்டிக்கு மத்தியில், சந்தை பங்களிப்பை தக்க வைத்துள்ள நிறுவனங்கள்..!
 
விகடன் 
 


ரிலையன்ஸ் ஜியோ நிறுவன வருகையால் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கடும் போட்டியை எதிர் கொண்டுள்ளன. இதில் குறி்ப்பாக ஜியோவின் அதிரடி கட்டண சலுகைகளால் வாடிக்கையாளர்களை தக்க வைக்க முடியாமல் திணறி வருகின்றன. இந்த நிலையில், கடும் கட்டண போட்டிக்கு மத்தியிலும் பார்தி ஏர்டெல், வோடபோன் இந்தியா, ஐடியா செல்லூலார் ஆகிய நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை இழக்காமல் சந்தை பங்களிப்பை தக்க வைத்து கொண்டுள்ளன.

கடந்த மார்ச் மாதத்தில் பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் சந்தை பங்களிப்பு 25.57 சதவிகிதத்திலிருந்து 25.77 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இதே போன்று வோடபோன், ஐடியா ஆகிய நிறுவனங்களின் சந்தை பங்களிப்பு முறையே 18.82, 17.85 சதவிகிதமாக வளர்ச்சி கண்டுள்ளது. இது கடந்த ஃபிப்ரவரி மாதத்தில் முறையே 18.76, 17.47 சதவிகிதமாக இருந்தது. ஏர்செல், டாடா டெலி சர்வீசஸ், டெலிநார் இந்தியா மற்றும் ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் ஆகிய நிறுவனங்களில் இருந்து வாடிக்கையாளர்கள் வெளியேறி இந்த நிறுவனங்களில் இணைந்ததால், சந்தை பங்களிப்பு அதிகளவில் உயர்ந்துள்ளது.

அதேசமயம், ரிலையன்ஸ் ஜியோ கடந்த மார்ச் மாதத்தில் அதிகபட்சமாக 94.30 லட்சம் வாடிக்கையாளர்களை இணைத்து கொண்டுள்ளது. இதன் மூலம் இந்நிறுவனத்தின் சந்தை பங்களிப்பு 13.08 சதவிகிதத்திலிருந்து 15.76 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. பார்தி ஏர்டெல், வோடபோன், ஐடியா ஆகிய நிறுவனங்கள் 84 லட்சம்,56.30 லட்சம், 90.10 லட்சம் வாடிக்கையாளர்கள் சேர்ந்துள்ளனர்.

பார்தி ஏர்டெல் நிறுவனம் 30.41 கோடி வாடிக்கையாளர்களுடன் முதலிடத்தில் உள்ளது. ஜியோ 18.65 கோடி வாடிக்கையாளர்களுடன் இருக்கிறது. வோடபோன் 22.26 கோடி வாடிக்கையாளர்களுடன் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. ஐடியா நிறுவனம் 21.12 கோடி வாடிக்கையாளர்களுடன் 3ம் இடத்தை தக்க வைத்து கொண்டுள்ளது. பி.எஸ்.என்.எல். 25.60 லட்சம் வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. இதனால், இந்நிறுவனத்தின் சந்தை பங்களிப்பு 9.43 சதவிகிதத்திலிருந்து 9.44 சதவிகிதமாக வளர்ச்சி கண்டுள்ளது.

ஏர்செல் மற்றும் டெலிநார், டாடா டெலி சர்வீசஸ் ஆகிய நிறுவனங்கள் முறையே 47.70 லட்சம், 20 .49 லட்சம், 10.30 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளன. பார்தி ஏர்டெல் டெலிநார் இந்தியா நிறுவனத்தை கையகப்படுத்தி உள்ளது. மேலும், டாடா டெலி சர்வீசஸ் நிறுவனத்தையும் வாங்க திட்டமிட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 7.11.2024