Thursday, May 3, 2018

திருப்பதிக்கு பைக்கில் செல்ல ஹெல்மெட் கட்டாயம்: மீறுவோருக்கு ரூ.500 வரை அபராதம் விதிக்கும் போலீஸார்

Published : 03 May 2018 07:23 IST

என். மகேஷ்குமார் திருப்பதி



திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க, தமிழகம், கர்நாடகா ஆகிய பக்கத்து மாநிலங்களில் இருந்து பலர் பைக்குகளில் வருகின்றனர். மேலும், கடை வைத்திருப்பவர்களும் தினமும் பைக்கில் செல்கின்றனர். இந்நிலையில், மலை அடிவாரமான அலிபிரியிலிருந்து திருமலைக்கு பைக்கில் செல்வோர் ஹெல்மெட் அணிவது நேற்று முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஹெல்மெட் இல்லாமல் பயணிக்க திருப்பதி போலீஸார் ரூ.100 முதல் ரூ.500 வரை அபராதம் வசூலித்தனர். முன்னறிவிப்பின்றி திடீரென இதை நடைமுறைப்படுத்தியதால் பக்தர்களும் வர்த்தகர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெளிமாநிலங்களில் இருந்து திருமலைக்கு வந்த பக்தர்கள், தங்களிடம் அவ்வளவு பணம் இல்லை எனக் கூறிய போதிலும் அவர்களை திருமலைக்கு அனுமதிக்கவில்லை. இதனால், பலர் பைக்குகளை அலிபிரி மலையடிவாரத்தில் விட்டுவிட்டு பஸ்களில் திருமலைக்கு செல்லும் நிலை ஏற்பட்டது.


திருப்பதி மலைப்பாதையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பைக்கில் சென்ற இளைஞர் ஒருவர் விபத்துக்குள்ளாகி உயிரிழந்தார். இதன் காரணமாக, திடீரென ஹெல்மெட் கட்டாயமாக்கப்பட்டதாக தெரிகிறது.

பைக்கில் செல்பவர்கள் விபத்தில் இறந்தால் ஹெல்மெட்டை கட்டாயமாக்கும் போலீஸார், ஒரு வாரத்துக்குப் பிறகு கண்டு கொள்வதில்லை. எனவே, ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்குவதை அரசு நிரந்தரமாக அமல்படுத்த வேண்டும். அதுவரை அபராதம் வசூலிப்பதை கைவிட வேண்டும். பழகுநர் (எல்) குறியீட்டுடன் வரும் கார்களையும் திருப்பதிக்கு அனுமதிக்கக் கூடாது என பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024