Thursday, May 3, 2018

தந்தையின் குடிப்பழக்கத்தால் நெல்லை மாணவன் தற்கொலை

Added : மே 03, 2018 03:10



திருநெல்வேலி:டாக்டராகும் லட்சியத்துடன், 'நீட்' தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த மாணவர், தந்தையின் குடிப்பழக்கத்தால் விரக்தியடைந்து, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 'மதுக்கடைகளை இனியாவது மூடவேண்டும்' என, அவர் எழுதிய கடிதத்தில் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம், கே.ரெட்டியபட்டியைச் சேர்ந்த விவசாய கூலி தொழிலாளி மாடசாமி. இவரது மகன், தினேஷ் நல்லசிவன், 18. பிளஸ் 2 தேர்வு முடித்து, 'நீட்' தேர்வுக்காக பயிற்சி பெற்றார்.தினேஷின் தாய், இசக்கி யம்மாள் சில ஆண்டுக்கு முன் இறந்தார். பின், மாடசாமி இரண்டாவதுதிருமணம் செய்து கொண்டார்.

தினேஷ், மதுரையிலுள்ள பெரியப்பா வீட்டில் தங்கி, 10ம் வகுப்பு படித்தார். பின், நாமக்கல்மாவட்டம் தனியார் பள்ளியில், பிளஸ் 2 தேர்வு எழுதினார்.தினேஷின் தம்பி இசக்கிராஜா 13, தங்கை தனுஸ்ரீ, 11, ஆகியோர் சொந்த ஊரில் வசிக்கின்றனர். கூலி வேலைக்காக மாடசாமி கேரளா சென்று விட்டார்.தந்தையின் குடிப்பழக்கத்தால் தினேஷ் விரக்தியில் இருந்தார்.மதுரையில் தங்கி இருந்த அவர், நேற்று முன்தினம் நெல்லையில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்தார்.

இந்நிலையில், நேற்று காலை திருநெல்வேலி வண்ணாரப்பேட்டை தெற்கு புறவழிச்சாலையில் உள்ள டாஸ்மாக் கடைக்கு அருகே ரயில்வே மேம்பாலத்தில், இளைஞர் ஒருவர் துாக்கில் தொங்கிய நிலையில் இருந்தார். உடலை மீட்ட போலீசார் சோதனை செய்த போது, சட்டைப்பையில் இருந்து கடிதத்தை எடுத்தனர். அதை வைத்து அவர், தினேஷ் என தெரிந்தது.
கடிதத்தில், 'அப்பா, நான் தினேஷ் எழுதுவது. நான் செத்து போனதற்கு அப்புறமாவது நீ குடிக்காமல் இரு. நீ குடிப்பதால், எனக்கு கொள்ளி வைக்காதே. இதுதான், என் ஆசை. அப்போதுதான், என் ஆத்மா சாந்தியடையும்.இனியாவது பிரதமரும், முதல்வரும் மதுக்கடைகளை அடைக்கிறார்களா என்று பார்ப்போம். இல்லையென்றால், நான் ஆவியாக வந்து மதுக்கடைகளை ஒழிப்பேன்' என, எழுதியுள்ளார். தினேஷ் உடல் கே.ரெட்டியபட்டிக்கு கொண்டு செல்லப்பட்டது.

மதுக்கடைக்கு விதி விலக்கா
நெடுஞ்சாலை அருகே, 500 மீட்டருக்குள் உள்ள மதுக் கடையை மூட நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி, பல கடைகள் அடைக்கப்பட்டன. ஆனால், தினேஷ் தற்கொலை செய்துகொண்ட பாலத்தின் அருகே உள்ள, மதுக்கடை மூடப்படவில்லை.இந்த கடையில், ஆளுங்கட்சி பிரமுகர் ஒருவர், 'பார்' நடத்துகிறார். இதனால், விதிவிலக்கு கொடுக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது. இந்நிலையில், மாணவன் இறப்புக்கு பிறகும் மதுக்கடை அடைக்கப்படவில்லை; விற்பனை கனஜோராக நடந்தது.

No comments:

Post a Comment

Playing cricket witha cork ball not a criminal offence: HC

Playing cricket with a cork ball not a criminal offence: HC A scheme for compensating such eventualities could be framed, says judge. Mohame...