பிரிவோம், சந்திப்போம்!.......டாக்டர்.ஆர்.கார்த்திகேயன்
Tue 1/6/2015,
என் மகள் பள்ளிக்குக் கிளம்புகையில் நான்
.....
தூங்கிக்கொண்டிருப்பேன். நான் வேலையை விட்டுத் திரும்புகையில் அவள் தூங்கிக்கொண்டிருப்பாள். வாரக் கடைசியில்தான் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்!” என்று கனமான வார்த்தைகள் சொல்லி விட்டு என்னை ஆழமாகப் பார்த்தார் அவர்.
“இந்த வேலையை விட முடியாது டாக்டர். அவ்வளவு கமிட்மெண்ட்ஸ் இருக்கு. எல்லாக் கடன்களையும் அடைத்து விட்டு இந்த வேலையை விடணும்னா குறைந்த பட்சம் இன்னும் 10 வருடங்கள் ஆகும். அப்போ என் மகள் படிக்கவோ வேலைக்கோ வெளியே போயிருக்கலாம். என்ன வாழ்க்கைன்னு தெரியலை சார் இது?” என்றார்.
பிரிவுகள்
இவர் பரவாயில்லை. குடும்பத்தைப் பிரிந்து வெளிநாடுகளில் பணி புரியும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை எண்ணிப் பாருங்கள். போனில் முத்தம் கொடுத்துக் கொண்டு மெயிலிலும் வாட்ஸ் அப் வீடியோவிலும் பிள்ளைகள் வளர்வதைக் கண்டு, “வரும் போது வாங்கிட்டு வர்றேன் இல்லன்னா யார் கிட்டயாவது கொடுத்து அனுப்பறேன்” என்று பொருட்களில் அன்பையும் பகிரத் துடிக்கும் துடிப்புகளை என்னவென்று சொல்ல?
வெளி நாட்டில் மட்டுமா? நம் நாட்டிலேயே பிழைக்க மாநிலம் விட்டு மாநிலம் வருபவர் கண்களில் உள்ள ஏக்கத்தைப் பார்த்திருக்கிறீர்களா? அடுத்த முறை பாருங்கள்.
கட்டிட வேலை செய்யும் பெண்கள், மேஜை துடைக்கும் பையன்கள், காவல் காக்கும் வயதான ஆட்கள் என எல்லாரும் தங்கள் சம்பளத்தில் கணிசமான தொகையைக் குடும்பத்துடன் பேசவே செலவழிக்கிறார்கள்.
வேலை நிர்ப்பந்தங்கள்
மாதத்திற்கு 20 நாட்கள் குடும்பத்தைப் பிரியும் மனிதர்களுக்கும் குடும்பத்துக்கும் உள்ள இடைவெளி எப்படி இருக்கும் தெரியுமா? பிள்ளை அடிபட்டதைக் கூடத் தாமதித்துத்தான் தெரிந்து கொள்ள முடியும். பள்ளியின் கூட்டங்களுக்கு போக முடியாது. என்றாவது வரும் பள்ளி விழாக்களில் பிள்ளை கலந்து கொள்வதைக் கூடப் பார்க்க முடியாது. முன்பு தந்தைகள் பட்ட அவஸ்தைகளை இப்பொழுது தாய்களும் படுகிறார்கள். அலுவலக வேலையில் இருந்துகொண்டு மகன் டியூஷனுக்குப் போனானா என்று விசாரிக்கும் அம்மாக்கள் எத்தனை பேர்?
“என் அப்பாவை எல்லாம் அவர் ரிடையர்ட் ஆனதுக்கு அப்புறம் தான் நிறைய தெரிஞ்சுக்கவே ஆரம்பிச்சேன்” என்று சொல்லும் பிள்ளைகள் நிறைய உண்டு.
முதலில் பிள்ளைகள் பெற்றோர்களைப் பிரிந்த வேதனையில் வாடுகின்றனர். பிறகு பெற்றோர்கள் பிள்ளைகளைப் பிரிந்து வாடுகின்றனர்.
வேலை நிர்ப்பந்தங்கள் பிரிவுகளை நிகழ்த்துகின்றன. இவை தவிர்க்க இயலாத நிதர்சனங்கள்.
தீபாவளிக்கும் கிறிஸ்மஸுக்கும் பொங்கலுக்கும் கூட வேலைக்குப் போகும் மக்கள் நிறைய இருக்கிறார்கள். பெற்றோர்களும் குழந்தைகளும் இல்லாத பண்டிகைகளில் என்ன விசேஷம்?
உறவின் அருமை
உள்ளூரில் தொழில் செய்து பதினெட்டு பட்டிக்குள் பெண்ணெடுத்து வாழ்ந்த கூட்டுக் குடும்பத்தில் பிரிவுகள் இந்த அளவுக்குப் பாதித்ததில்லை. படிப்புக்காகவும் வேலைக்காகவும் பயணம் செய்வது இன்றைய காலக் கட்டத்தின் இயல்பு. அதனால் இந்தப் பிரிவுகளை ஏற்றுக் கொள்ளுதல்தான் பக்குவம்.
“ஒ.கே. என்ன கருத்து சொல்றீங்க பாஸ்?” என்றால் என் விண்ணப்பம் ஒரு வரிதான். சேர்ந்து இருக்கும் அருமையை உணருங்கள்.
ஆரோக்கியத்தின் மதிப்பு நோயில் தெரியும். உறவின் அருமை பிரிவில் தான் தெரியும்.
மலிவாகக் கிடைக்கும் எதன் மதிப்பும் நமக்கு விளங்காது. நுரையீரல் செயல்படாமல் செயற்கை உறுப்பிற்கு அலையும்போதுதான் வாழ் நாள் முழுதும் சரியாய் பணி செய்த நுரையீரலின் அருமையை உணர்கிறோம்.
வந்து போகும் நண்பர்களின் அருமை யாருமில்லாமல் தனிமையில் இருப்போருக்குத் தான் தெரியும். வீட்டில் இருக்கும் போது தெரியாத மதிப்பு அதை விற்ற பிறகுதான் உணர்கிறோம்.
அது போலத்தான் சேர்ந்து வாழும் குடும்பங்களின் நிலையும். பெற்றோர்களும் குழந்தைகளும் சேர்ந்து வாழும்போது ஒருவர் மதிப்பு மற்றொருவருக்குப் புரிவதில்லை.
சதா அலுவல் எரிச்சலில் உள்ள அம்மாவாலோ அப்பாவாலோ தங்கள் குழந்தைகள் மேல் நியாயமான அன்பை வெளிக்காட்ட முடிவதில்லை. அதே போலப் பெற்றோர்களின் மதிப்பையும் பிள்ளைகள் அவர்கள் மறைந்த பிறகுதான் உணர்கிறார்கள்.
ரசனையே ஆரோக்கியம்
அதனால் கிடைத்த பொழுதைக் குடும்பத்துடன் குதூகலமாகக் கொண்டாடக் கற்றுக்கொள்ளுங்கள். அலுவல் வேலை, வீட்டுப் பிரச்சினைகள், இயந்திர வாழ்வின் அவசரங்கள் என்றும் இருக்கும். ஒரு பரிபூரண நாள் வந்த பின்தான் வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என்று காத்திருக்காதீர்கள். நீங்கள் வாழ்க்கையை அனுபவிக்கும் நாள் தான் பரிபூரணமான நாள்.
வாழ்க்கைத் துணை உயிருடன் இருப்பது, உடன் இருப்பது எல்லாம் கடவுள் கொடுப்பினை. இல்லாதவரைக் கேளுங்கள். புரியும்.
நீங்கள் விரும்பும் துணை உங்களுக்குக் கிடைக்காமல் இருந்திருக்கலாம். நீங்கள் நினைத்ததை உங்கள் பிள்ளைகள் செய்யாமல் இருக்கலாம். நீங்கள் விரும்பிய வேலையை நீங்கள் செய்யாமல் போகலாம். ஆனால் கிடைத்ததை ஏற்று ரசிக்கத் தெரிந்தவர்தான் ஆரோக்கியமாக வாழ்கிறார்.
வாழ்க்கையின் சின்னச் சின்னத் தருணங்கள்தான் பெரிய சந்தோஷங்களைக் கொடுக்கின்றன. அதைச் சேர்ந்து கொண்டாடுங்கள்.
பிரிவுகள் உறவுகளின் உறுதியைச் சோதித்துப் பார்க்க வைப்பவை. மனிதர்களின் மதிப்பைப் புரிய வைப்பவை.
சேர்ந்து வாழும் காலத்தில் சேமித்த அன்புதான் பிரிவு காலத்தில் நிலை குலையாமல் இருக்கச் செய்யும்.
வேலை மனிதர்களைப் பயணிக்க வைக்கிறது. வாழ்க்கையைப் படிக்க வைக்கிறது. நம் வாழ்வுக்குப் பொருள் உணர்த்தும் வேலையைக் காதலிப்போம். அதன் மூலம் வாழ்வையே காதலிப்போம்.
பிரிவோம்
வேலையையும் வாழ்க்கையும் ஆற அமர விவாதித்த நாம் பிரியும் காலம் வந்துவிட்டது. நேரிலும், தொலைபேசியிலும் தொடர்புகொண்டு கருத்து சொல்லி, கேள்வி கேட்டு, அன்பு காட்டி, ஆதரவு சொன்ன அத்தனை உள்ளங்களுக்கும் நன்றி.
பிரிவோம். சந்திப்போம்!
No comments:
Post a Comment