Monday, May 7, 2018

தேசிய செய்திகள்

வயது வந்த ஆணும், பெண்ணும் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ உரிமை உண்டு



வயது வந்த ஆணும், பெண்ணும் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ உரிமை உள்ளது என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது.

மே 07, 2018, 05:15 AM
புதுடெல்லி,

கேரள மாநிலத்தை சேர்ந்த நந்தகுமார் (வயது 20) என்ற வாலிபரும், துஷாரா (20) என்ற பெண்ணும் திருமணம் செய்து கொண்டனர். துஷாராவுக்கு திருமண வயதான 18 வயது ஆகிவிட்டது. ஆனால், நந்தகுமாருக்கு திருமண வயதான 21 வயது ஆகவில்லை.

அதனால், இந்த திருமணத்தை எதிர்த்து துஷாராவின் தந்தை கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில், இந்த திருமணம் செல்லாது என்றும், துஷாரா தனது தந்தையுடன் செல்ல வேண்டும் என்றும் கேரள ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து, நந்தகுமார், சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இம்மனு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் கூறியதாவது:-

வயது வந்த ஆணும், பெண்ணும் திருமணம் செய்து கொள்ளாமலேயே சேர்ந்து வாழ உரிமை உள்ளது. இதை சட்டம் இயற்றும் சபைகளும் அங்கீகரித்துள்ளன. குடும்ப வன்முறையில் இருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டத்தில் இதுபற்றிய சட்டப்பிரிவு இடம்பெற்றுள்ளது.

இந்த வழக்கை பொறுத்தவரை, நந்தகுமாரும், துஷாராவும் ‘மேஜர்’ வயதை எட்டியவர்கள். அவர்கள் திருமணம் செய்துகொள்வதற்கான தகுதியை எட்டாவிட்டாலும் கூட திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ உரிமை உள்ளது.

துஷாரா, தனது தந்தையுடன் செல்ல வேண்டும் என்ற கேரள ஐகோர்ட்டு உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. தான் யாருடன் சேர்ந்து வாழ்வது என்று முடிவு செய்யும் உரிமை, துஷாராவுக்கு இருக்கிறது.

கேரள மாநிலத்தை சேர்ந்த, மதம் மாறி திருமணம் செய்து கொண்ட ஹாதியா-ஷபின் ஜகான் திருமண வழக்கிலும், அவர்கள் பரஸ்பர சம்மதத்துடன் திருமணம் செய்தவர்கள் என்பதால், அவர்களின் திருமணத்தை உறுதி செய்தோம்.

இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024