Sunday, May 6, 2018

இதயம் 25 ஆண்டுகள்: சொல்லாத சொற்களின் சுமை!

Published : 09 Sep 2016 10:43 IST

ந.வினோத்குமார்
 



நான் சென்னைக்கு வந்து ஆறு ஆண்டுகள் ஆகின்றன. சென்ட்ரல் செல்லும்போதெல்லாம், சென்னை மருத்துவக் கல்லூரிக்குச் சென்று வருவது வழக்கம். அங்கிருக்கும் மரங்கள், படிப்படியாக மேஜைகள் அடுக்கப்பட்டிருக்கும் வகுப்பறைகள், வெள்ளை கோட்டும் ஸ்டெதஸ்கோப்புமாக அங்குமிங்கும் நடந்துகொண்டிருக்கும் மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள்... இந்தக் காட்சிகளை எல்லாம் பார்க்கப் பார்க்க, இனம் புரியாத சோகம் இதயத்தை மெல்ல அழுத்தும்.

‘இந்த இடத்தில்தானே ஹீராவுக்காக முரளி காத்திருப்பார்’, ‘இந்த வகுப்பறையில்தான் ஹீராவைப் பார்க்க, முரளி சிவப்பு கலர் இங்க் பாட்டிலைக் கீழே போட்டாரோ?’, ‘இதோ இந்த லிஃப்டில்தானே அவர்கள் இருவரும் பயணம் செய்திருப்பார்கள்?’ என்று பல கேள்விகளை எனக்குள்ளேயே கேட்டுக்கொண்டு சில நிமிடங்கள் சிலாகித்திருப்பேன்.

இன்று முரளி நம்மிடையே இல்லை. ஆனால் அவர் நடித்த சிறந்த படங்களுள் ஒன்றான ‘இதயம்’ இன்றும் நம்மிடையே இருக்கிறது. 1991-ம் ஆண்டு செப்டம்பர் 6-ம் தேதி வெளியான அந்தப் படத்துக்கு இந்த ஆண்டு 25 வயது!

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு பத்தாண்டுக்கும் நான்கைந்து புதிய இயக்குநர்கள் வந்து சுணங்கிக் கிடக்கும் சினிமாவைக் கொஞ்சம் நிமிர வைப்பார்கள். அப்படி 90-களில் வந்த மிக முக்கியமான இயக்குநர் கதிர். ஓவியக் கல்லூரியில் முதுநிலை படித்துவிட்டு, டைட்டில் டிசைனராகப் பணியாற்றிய அவரின் இயக்கத்தில் வெளிவந்தது ‘இதயம்’.

கதை இதுதான். கிராமத்திலிருந்து சென்னைக்கு மருத்துவம் படிக்க வரும் ஒருவன், தன் காதலைச் சொல்ல முடியாமல், இதய நோயாளியாகிறான். அவன் நோயாளியான சமயத்தில்தான் நாயகிக்கு அவன் மேல் காதல் வருகிறது. ஆனால், அவன் குணமாகி வரும்வரை அவள் காத்திருக்க வேண்டும். மிகவும் எளிமையான இந்தக் கதையை, கவித்துவமான திரைக்கதையின் மூலம் நகர்த்திச் சென்றதில் கதிர் கவனம் ஈர்த்தார்.

கல்லூரியின் முதல் நாள், வகுப்பறையில் ஹீராவின் கவனத்தைத் திருப்புவதற்காக இங்க் பாட்டிலைக் கீழே போடுவது, பேருந்தில் பயணம் செய்யும்போது தன் பாக்கெட்டிலிருந்து ஹீராவின் காலடியில் விழும் சில்லறைகளை எடுக்க யோசிப்பது, ஹீராவின் கூந்தலிலிருந்து விழுந்த பூவை ‘டைரி’யில் சேகரித்து வைப்பது எனக் காதலில் கசிந்துருகிய ‘ராஜா’வாகவே முரளி மாறியிருந்திருந்தார். ‘இந்தப் பாதங்கள் மண்மீது நடக்க வேண்டியவை இல்லை... மலர்கள் மீது’ என்று அவர் சொல்லும்போது ரசிகர்களும் கூடவே ‘கோரஸ்’ பாடினார்கள்..!

படத்தின் இன்னொரு மிகப் பெரிய பலம் இளையராஜாவின் இசை. அன்றைக்கொல்லாம் இளைஞர்களிடம் கைபேசி இருந்திருந்தால், படத்தின் ‘டைட்டில்’ இசைதான் பலரின் ‘ரிங் டோன்’ ஆகியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

சின்ன‌ ப்ளாஸ்டிக் பொட்டும், காட்டன் புடவையும், போனிடெய்ல் கூந்தலும், ஒற்றை ரோஜாவுமாக வரும் ஹீரா, ஆர்ப்பாட்டமில்லாத அழகு! தான் ஓவியக் கல்லூரியில் படிக்கும்போது அங்கு படித்த ஒரு பெண்ணை மனதில் வைத்துத்தான் இந்த கேரக்டரை உருவாக்கியதாக கதிர் ஏதோ ஒரு பேட்டியில் சொன்னதாக நினைவு.

இந்தப் படத்தைக் கொஞ்சம் உன்னிப்பாகப் பார்த்தால், முரளிக்கும் ஹீராவுக்கும் இடையில் நடக்கும் உரையாடல்களை ஒரு ஏ4 பக்கத் தாளின் ஒரு பக்கத்தில் எழுதிவிட முடியும். அவ்வளவு குறைவான வசனங்கள். ஆனால் காட்சியமைப்பில் அந்த வசனங்களுக்குக் கனம் ஏற்றியிருந்தார் கதிர்.

ஹீராவிடம் தன் காதலைச் சொல்ல முடியாமல் முரளி தவித்து உருகும்போது நமக்கே கொஞ்சம் இதயம் வலிப்பது போன்ற உணர்வு ஏற்பட்டுவிடும். மார்க்ஸுக்கு ஜென்னி, லெனினுக்கு க்ரூப்ஸ்கயா, பாரதிக்குச் செல்லம்மா போன்று அந்த ராஜாவுக்கும் கீதா கிடைத்திருந்தால் அவனும் ஒரு கீட்ஸ், ஒரு ஷெல்லி ஆகியிருப்பான் இல்லையா?

‘மறுக்கப்படலாம்’என்கிற பயத்தில் ஊசலாடும் காதல்கள்தான் எத்தனை? காதலின் அழகு புரிந்துகொள்ளப்படுவதில் உள்ளது. அந்தப் புரிதலுக்கு மவுனம் சில நேரம் பயன்படும். சில நேரம் உரையாடல் உதவி செய்யும். சொல்லிய பிறகு நிராகரிக்கப்படும் காதல்களின் வலியை விட, சொல்லாத காதல்கள் தரும் சுமை மிகவும் அதிகம். தங்கள் காதலைச் சொல்லாமல் விட்ட அனைத்து ஆண்களுக்குள்ளும் ஒரு ‘ராஜா’இருக்கவே செய்கிறான். நிலைமை கைமீறிய பின் ஒருவர் மீது அன்பு பிறக்கிற பெண்களுக்குள் ஒரு ‘கீதா’வும் இருக்கவே செய்கிறாள். கொஞ்சம் தேடிப் பாருங்கள்... உங்களுக்குள்ளும் ராஜாவோ கீதாவோ இருக்கலாம்!

No comments:

Post a Comment

C’garh HC: Pension is earned property right, not a bounty

C’garh HC: Pension is earned property right, not a bounty  Orders Govt To Refund Pension Deducted To Heirs Within 45 Days Partha.Behera@time...