Sunday, May 6, 2018

நீட் தேர்வுக்கு நெடிய பயணம்; உதவிக்கரம் நீட்டும் தன்னார்வலர்கள்

Published : 06 May 2018 07:55 IST
 



திருநெல்வேலியில் இருந்து நீட் தேர்வு எழுதுவதற்காக சிறப்பு பேருந்து மூலம் எர்ணாகுளம் சென்ற மாணவ, மாணவியரை, மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வழியனுப்பினார்.

மருத்துவ கல்விக்கான 'நீட்' நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் இன்று நடைபெறுகிறது. தமிழகத்திலிருந்து இந்த நுழைவுத் தேர்வை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் எழுதுகின்றனர். இவர்களில் சிலருக்கு தமிழகத்தில் தாங்கள் விண்ணப்பித்த ஊர்களில் தேர்வு மையங்கள் கிடைக்காமல் வெளி மாநிலங்களில் தேர்வு எழுத ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளனர்.

கேரளா, ஆந்திரா, ராஜஸ்தான், கர்நாடகாவில் பெங்களூரு என்று பல வெளி மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.


இந்த திடீர் அறிவிப்பால் மாணவர்கள் பலரும் குழப்பத்துக்கு ஆளாகினர். புது இடங்களுக்குச் சென்று தேர்வு எழுதுவதில் உள்ள சிரமம் குறித்து அவர்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

இவ்வாறு வெளிமாநிலங்களுக்கு செல்லும் மாணவர்களுக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும் உதவ தமிழக அரசு சில சலுகைகளை அறிவித்தது. அதேசமயம் பெரும் பங்களிப்பாக தன்னார்வலர்கள் பலர் தங்களால் ஆன உதவிகளை மாணவர்களுக்கு செய்துள்ளனர்.

வாகன ஏற்பாடு, வெளி ஊர்களில் தங்குவதற்கு வசதி என தங்களால் முடிந்த உதவிகளை செய்துள்ளனர். இந்த உதவி வெளியூர் செல்லும் தமிழக மாணவர்களுக்கு பெரிய ஆறுதலைத் தந்துள்ளது.

சிறப்பு பேருந்துகளில் மாணவர்கள் கேரளா பயணம்

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள தேர்வு மையங்களில் நீட் தேர்வு எழுதும் , தூத்துக்குடி, கோவில்பட்டி மாணவ, மாணவியர் தங்கள் பெற்றோருடன் சிறப்பு பேருந்துகளில் நேற்று புறப்பட்டு சென்றனர்.

திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து 800 முதல் ஆயிரம் மாணவ, மாணவியருக்கு கேரள மாநிலத்தில் எர்ணாகுளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

சிறப்பு பேருந்துகள் இயக்கம்

திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் சார்பில் எர்ணாகுளம் செல்வதற்கு சிறப்பு பேருந்து வசதிகள் செய்யப்பட்டிருந்தன. திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்திலிருந்து நேற்று காலை 7.30, 8.30, 9 மணிக்கும், இரவு 8.05, 8.30, 8.45, 9, 10.05 மணிக்கும் சிறப்பு பேருந்துகள் அரசு விரைவு போக்குவரத்து கழகத்தால் இயக்கப்பட்டன. மேலும், திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து ஆலப்புழா செல்லும் பேருந்துகளும் எர்ணாகுளம் வரை செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

திருநெல்வேலியில் இருந்து சிறப்பு பேருந்துகளில் நீட் தேர்வுக்கு சென்ற மாணவ, மாணவியருக்கு மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வாழ்த்து தெரிவித்து வழியனுப்பி வைத்தார். ராதாபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் ஐ.எஸ்.இன்பதுரை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலா, அரசு போக்குவரத்து கழக நிர் வாக இயக்குநர் மோனி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

மனஉளைச்சல் ஏற்பட்டுள்ளது

சிறப்பு பேருந்தில் பயணம் செய்த மாணவி நர்மதா கூறும்போது, “தமிழ்நாட்டுக்கு உள்ளேயே தேர்வு மையத்தை ஒதுக்கியிருந்தால் இவ்வளவு சிரமப்பட வேண்டியிருக்காது. அரசு உதவித் தொகை கொடுத்தாலும், தேர்வு மையங்களை இங்கேயே ஒதுக்க நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். எங்களுக்கு மட்டுமல்ல, எங்களது பெற்றோருக்கும் பெரும் அலைச்சல். வெளிமாநிலத்துக்கு செல்வதால் மனஉளைச்சல் ஏற்பட்டிருக்கிறது. மொழிப்பிரச்சினையும் இருக்கிறது” என்று தெரிவித்தார்.

சொந்த செலவில் சென்றனர்

திருநெல்வேலியில் இருந்து நேற்று காலை எர்ணாகுளத்துக்கு புறப்பட்டு சென்ற பேருந்துகளில் திருநெல்வேலி, தூத்துக்குடி, கோவில்பட்டி பகுதிகளைச் சேர்ந்த 110 மாணவ, மாணவியரும், அவர்களது பெற்றோரும் புறப்பட்டுச் சென்றனர்.

இதுபோல் இரவில் சென்ற பேருந்துகள், திருநெல்வேலியில் இருந்து சென்ற குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில், நாகர்கோவிலில் இருந்து சென்ற எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில் ஆகியவற்றிலும் மாணவ, மாணவிகள் சென்றனர். பலர் நேற்று முன்தினமே ரயில்களிலும், பேருந்துகளிலும் தங்கள் சொந்த செலவில் எர்ணாகுளத்துக்கு புறப்பட்டுச் சென்றனர். இதுபோல் திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து ராஜஸ்தான் மாநிலத்தில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தவர்களில் ஒருசிலர் கடந்த சில நாட்களுக்கு முன்னரே ஜெய்பூருக்கு விமானத்தில் சென்றதாகத் தெரிகிறது.

எர்ணாகுளத்தில் உதவி மையம்

கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து கேரளத்தில் திருவனந்தபுரம், எர்ணாகுளம் போன்ற பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களுக்கு 66 மாணவ, மாணவியர் பேருந்துகள், ரயில்களில் அவர்களாகவே நேற்று அதிகாலையிலேயே புறப்பட்டுச் சென்ற னர். எர்ணாகுளத்தில் அங்குள்ள மாவட்ட நிர்வாகம் சார்பில் ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு மையம் மற்றும் தங்குமிடம், போக்குவரத்து வசதிகள் குறித்து உதவி வேண்டுவோருக்கு இந்த மையங்களில் உள்ளவர்கள் உதவிகள் செய்தனர்.

‘அனிதாவின் கனவை நனவாக்குவோம்’

புதுக்கோட்டை, ஆலங்குடி, கல்லாலங்குடி, அறந்தாங்கி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 21 மாணவர்கள் உட்பட 25 பேர் புதுக்கோட்டை பொது அலுவலக வளாகத்தில் இருந்து சமூக ஆர்வலர்கள் ஏற்பாடு செய்த வேனில் எர்ணாகுளம் தேர்வு மையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இவர்கள் 'அனிதாவின் கனவை நனவாக்குவோகும்' என்ற பேனரை ஏந்தியவாறு புறப்பட்டனர்.

இது குறித்து ராயவரத்தைச் சேர்ந்த கணேசன் கூறியபோது, 'ராயவரத்தில் படித்த எனது மகள் அபிநயாவுக்கு தமிழகத்தில் உள்ள திருச்சி, மதுரை, கோயம்புத்தூர் ஆகிய தேர்வு மையங்களில் ஏதாவது ஒன்றை ஒதுக்கித் தருமாறு கேட்டிருந்தோம். ஆனால், கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டது. தமிழகத்துக்கு மாற்றித் தருமாறு ஆட்சியர் சு.கணேஷிடம் கோரிக்கை மனு அளித்தேன். அவர் மனுவை நிராகரித்துவிட்டார்' என்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024