Monday, May 7, 2018

மாநில செய்திகள்

ரெயில் தாமதமாக வந்ததால் ‘நீட்’ தேர்வு எழுத முடியாமல் தவித்த கேரள மாணவி



சென்னைக்கு ரெயில் தாமதமாக வந்த காரணத்தால் கேரள மாணவி ஒருவர் ‘நீட்’ தேர்வு எழுத முடியாமல் தவித்தார்.

மே 07, 2018, 04:15 AM
சென்னை,

‘நீட்’ தேர்வு நேற்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற்றது. காலை 7.30 மணி முதல் மாணவர்கள் வரலாம் என்றும் 9.30 மணிக்குள் வந்துவிட வேண்டும் என்றும் அதன்பிறகு வரும் மாணவர்கள் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால் சென்னை நகரில் உள்ள பல தேர்வு மையங்களுக்கு மாணவ-மாணவிகள் சிலர் தாமதமாக வந்தனர். தேர்வு மையத்தின் நுழைவு வாயில் 9.30 மணிக்கு பூட்டப்பட்டு விட்டதால் அதன்பிறகு வந்த மாணவ-மாணவிகள் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை. போலீசார் காலை 9.20 மணி முதல் 9.30 மணி வரை ஒலிபெருக்கி மூலம் மாணவ-மாணவிகளே விரைவாக வாருங்கள் என்று அறிவித்துக் கொண்டே இருந்தனர்.

சென்னை கோபாலபுரம் டி.ஏ.வி.பள்ளியில் நீட் தேர்வு மையம் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த மையத்திற்கு கேரளாவை சேர்ந்த மாணவி அஹியா தாமதமாக வந்தார். இதனால் அவரை தேர்வு எழுத அனுமதிக்கவில்லை. ஆனால், “காலை 10 மணிக்கு தானே தேர்வு தொடங்குகிறது. அனுமதியுங்கள்” என்று அங்கிருந்த பெற்றோர்கள் தெரிவித்தனர். 9.30 மணிக்கு தேர்வு மையத்தின் கேட் பூட்டப்பட்டு விட்டது.

இதனால் மாணவி அஹியா தேர்வு எழுத முடியால் கண் கலங்கினார். அங்கிருந்த போலீஸ் அதிகாரி உள்ளிட்ட போலீசாரும், பொதுமக்களும் அந்த மாணவிக்கு ஆறுதல் கூறினார்கள். “அடுத்த வருடம் நீட் தேர்வை எழுதலாம். ஏதாவது உதவி தேவை என்றால் தெரிவியுங்கள்” என்று போலீஸ் அதிகாரி அந்த மாணவியிடம் கூறி அனுப்பி வைத்தார். தேர்வு எழுத முடியாமல் தவித்த மாணவி அஹியாவின் தந்தை சாஜி கூறியதாவது.

நான் கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டம், தெரினல் மன்னா என்ற கிராமத்தை சேர்ந்தவன். 5-ந்தேதி மாலை 5 மணிக்கு மங்களூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் சொர்ணூர் ரெயில் நிலையத்தில் என்மகளுடன் ஏறினேன். சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்திற்கு இன்று(நேற்று) அதிகாலை 5.25 மணிக்கு வந்து சேர வேண்டும். ஆனால் காலை 9.30 மணிக்கு தான் வந்தது.

ரெயில் தாமதமாக வந்ததன் காரணமாக கோபாலபுரம் நீட் தேர்வு மையத்திற்கு சற்று கால தாமதமாகத்தான் வந்தோம். தாமதமாக வந்ததாக கூறி அஹியாவை நீட் தேர்வு எழுத அனுமதிக்கவில்லை. எனது மகளின் கனவு எல்லாம் போய்விட்டது. எனது மகளுக்கு போலீஸ் அதிகாரி ஆறுதல் கூறினார். அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

சென்னை அடையாறைச் சேர்ந்த அர்ஷத் அகமது என்ற மாணவர் அண்ணாநகரில் உள்ள எஸ்.பி.ஓ.ஏ. பள்ளி மையத்துக்கு தேர்வு எழுத சற்று தாமதமாக காலை 9.40-க்கு வந்தார். இதனால் அவர் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை. அங்கு கூடி இருந்த பெற்றோரும், போலீசாரும் தேர்வு மையத்துக்குள் செல்ல அவரை அனுமதிக்கும்படி கூறியும், விதிமுறைகளை காரணம் காட்டி அவருக்கு அனுமதி வழங்க மறுத்துவிட்டனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024