Monday, May 7, 2018

பூதாகரம்!

ரூபாய் நோட்டு பற்றாக்குறை பிரச்னை..அழுக்கான ரூ.100 நோட்டுகளால் அவதி 
07.05.2018

புதுடில்லி : நாடு முழுவதும் ரூபாய் நோட்டு பற்றாக்குறை, மக்களை அலைக்கழித்து வரும் நிலையில், அழுக்கான, 100 ரூபாய் நோட்டுகள் அதிகரித்திருப்பது, பிரச்னையை மேலும் சிக்கலாக்கும் சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.



பிரதமர் நரேந்திர மோடி, 2016, நவ., 8ல், செல்லாத ரூபாய் நோட்டு திட்டத்தை அறிவித்தார். செல்லாத, 500 - 1,000 ரூபாய் நோட்டுகளை, வங்கிகளில் கொடுத்து, வேறு நோட்டுகளை பெற்றுக் கொள்ள அவகாசம் அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, புதிய, 500 - 2,000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு, புழக்கத்தில் விடப்பட்டன. சில மாதங்களில், ரூபாய் நோட்டு பிரச்னை தீர்க்கப்பட்டு, இயல்பு நிலை திரும்பியது.

திண்டாட்டம் :

இந்நிலையில், சமீப காலமாக, 2,000 ரூபாய் நோட்டுகளுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. பல வட மாநிலங்களில், ஏ.டி.எம்.,களில், 2,000 ரூபாய் நோட்டுகள் கிடைக்காமல் மக்கள் திண்டாடி வருகின்றனர். உயர் மதிப்புடைய, 2,000 ரூபாய் நோட்டுகளை, ஊழல்வாதிகளும், பணக்காரர்களும், சட்டவிரோதமாக பதுக்கி வைத்துள்ளதாக யூகங்கள் உலவின.

இந்நிலையில், சமீப காலமாக, எங்கு பார்த்தாலும், பழைய, அழுக்கடைந்த, 100 ரூபாய் நோட்டுகளையே காண முடிவதாக, மக்கள் புகார் கூறுகின்றனர். 100 ரூபாய் நோட்டுகள், மிகவும் பழையதாக, அழுக்கடைந்து காணப்படுவதால், அவற்றை, ஏ.டி.எம்., இயந்திரங்களில் வைக்க முடியவில்லை என, வங்கியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

அச்சம் :

'எல்லா தரப்பு மக்களும் அதிகம் வைத்திருக்கும், 100 ரூபாய் நோட்டுகளில், புதிய நோட்டுகளை எங்கும் பார்க்க முடியவில்லை' என, மக்களும் அதிருப்தி தெரிவித்து உள்ளனர். இதனால், ரூபாய் நோட்டு பற்றாக்குறை, பூதாகரமானதாக உருவெடுக்கும் என அஞ்சப்படுகிறது.

செல்லாத ரூபாய் நோட்டு திட்டம் அமலான பின், 100 ரூபாய் நோட்டுகளை, அதிகளவில், ரிசர்வ் வங்கி அச்சிட்டு புழக்கத்தில் விட்டது. ஆனால், 2,000 ரூபாய் நோட்டை மாற்ற, 500 ரூபாய் நோட்டுகள் எளிதில் கிடைக்காத பட்சத்தில், 100 ரூபாய் நோட்டுகள் அதிகளவில் தேவைப்படுவதாகவும், எனவே, தற்போது புழக்கத்தில் உள்ள, 100 ரூபாய் நோட்டுகள் போதாது என்றும், வங்கியாளர்கள் கூறுகின்றனர்.

தேவை:

இது தொடர்பாக, பொதுத்துறை வங்கி மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், 'தற்போதுள்ள பிரச்னைக்கு தீர்வாக, 100 ரூபாய் நோட்டுகளை புதிதாக, அதிகளவில் அச்சிட்டு, ரிசர்வ் வங்கி புழக்கத்தில் விட வேண்டும்.

'இல்லாவிடில், 500 ரூபாய் நோட்டுகளுக்கு, அதிகளவில் தேவை ஏற்படும்' என்றார்.

தினசரி ரூ.3,000 கோடி!

தினசரி, 3,000 கோடி ரூபாய் மதிப்புள்ள, 500 ரூபாய் நோட்டுகள் அச்சிடப்படுவதாக, பொருளாதார விவகாரங்கள் பிரிவு செயலர், சுபாஷ் சந்திரகார்க் கூறியுள்ளார். அவர் கூறியதாவது: மக்கள், பொருட்களை எளிதில் வாங்க, 500, 200, 100 ரூபாய் நோட்டுகள் உகந்தவை. மக்கள் தேவையை கருதி, தினசரி, 3,000 கோடி ரூபாய் மதிப்புள்ள, 500 ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டு வருகின்றன. வங்கிகளில், ரூபாய் நோட்டு கையிருப்பு, போதுமானதாக உள்ளது. கூடுதல் தேவை, உடனுக்குடன் நிவர்த்தி செய்யப்படுகிறது. நாட்டில், அளவுக்கு அதிகமான உற்பத்தியும், அதிக அளவிலான பணவீக்க விகித உயர்வும் காணப்படவில்லை. எனவே, வங்கி வட்டி விகிதத்தை உயர்த்த வேண்டிய அவசியம் இல்லை. கடந்த வாரம், நாட்டின் பண இருப்பு நிலையை ஆய்வு செய்தேன். வங்கிகளில், 85 சதவீத, ஏ.டி.எம்.,கள் செயல்பாட்டில் உள்ளன. தற்போதைய சூழ்நிலையில், பணத்தட்டுப்பாடு பிரச்னை ஏற்படாது. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

C’garh HC: Pension is earned property right, not a bounty

C’garh HC: Pension is earned property right, not a bounty  Orders Govt To Refund Pension Deducted To Heirs Within 45 Days Partha.Behera@time...