07.05.2018
மாணவர்களுக்கு ஆதரவு என்ற போர்வையில், கபட நாடகம் ஆடிய கட்சியினரின் மூக்கு உடையும்படி, 'நீட்' தேர்வு, நாடு முழுவதும் வெற்றிகரமாக நடந்து முடிந்தது.
தேர்வில் வினாத்தாள் எளிதாக இருந்ததாக, மாணவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனாலும், நீட் தேர்வை தொடர்ந்து எதிர்க்க, கட்சித் தலைவர்கள் வீண் பிடிவாதமாக போராட்டம் அறிவித்துள்ளனர்.
இந்திய மருத்துவ கவுன்சில் விதிகளின்படி, நீட் நுழைவுத்தேர்வை நடத்தியே, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த ஆண்டு முதல், சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி உள்ளிட்ட, இந்திய மருத்துவ படிப்புகளுக்கும், நீட் தேர்வு கட்டாயம் ஆகியுள்ளது.
நீட் தேர்வில் இருந்து, தமிழக மாணவர்களுக்கு விலக்கு கேட்டு, நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. ஆனால், அனைத்து மாநிலங்களுக்கும் உத்தரவு பொருந்தும் என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
எனவே, தமிழகத்திலும், அரசு, அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி பல்கலை மற்றும் கல்லுாரிகளில், நீட் நுழைவு தேர்வு அடிப்படையில், மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான, நீட் நுழைவு தேர்வு, நாடு முழுவதும் நேற்று நடந்தது. யூனியன் பிரதேசம் உட்பட, 36 மாநிலங்களில், 136 நகரங்களில், மொத்தம், 2,255 மையங்களில், தேர்வு நடந்தது. இதில் பங்கேற்க அனுமதிக்கப்பட்ட, 13.27 லட்சம் பேரில், 96 சதவீதத்தினர், தேர்வு எழுதினர்.
காலை, 10:00 மணிக்கு, தேர்வு துவங்கியது. இதற்காக, அனைத்து மாநிலங்களிலும் உள்ள தேர்வு மையங்களுக்கு, தேர்வு எழுதுவோர், காலை, 6:30 மணிக்கே குடும்பத்துடன் வந்திருந்தனர். அவர்களில், 'ஏ' பிரிவினர், 7:30 மணி முதலும், 'பி' பிரிவினர், 8:30 மணி முதலும் தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப் பட்டனர்.
பெரும்பாலானோர், தேர்வுக்கான கட்டுப்பாடுகளை பின்பற்றி, உடை அணிந்து வந்தனர். பல மாணவியர், கொலுசு மற்றும் செயின் மட்டும் அணிந்து வந்தனர். சில மாணவர்கள், கோவில்களில் வழங்கப்படும் கயிறுகளை கட்டி வந்தனர். அவை அனைத்தும், தேர்வு மைய வளாகத்தின் வாயிலில் அகற்றப்பட்டன.
தேர்வு மைய வளாகத்தில், போலீசாரும் சோதனையிட்டனர். சி.பி.எஸ்.இ.,யால் பயிற்சி அளிக்கப்பட்ட ஊழியர்கள், 'மெட்டல் டிடெக்டர்' கருவியால் சோதனையிட்டு, மாணவர்களை தேர்வு மையத்திற்குள் அனுமதித்தனர். பெரும்பாலான இடங்களில், மாணவர்கள் முழு ஒத்துழைப்பு அளித்ததாக, போலீசாரும், சி.பி.எஸ்.இ., ஊழியர்களும் கூறினர்.
பிற்பகல், 1:00 மணிக்கு, தேர்வு முடிந்த பின், அனைத்து மாணவர்களும் உற்சாகத்துடன் வெளியே வந்தனர். தேர்வில் வினாக்கள் எளிதாக இருந்ததாகவும், எந்த பதற்றமும் இன்றி தேர்வை, ஆர்வத்துடன் எழுதியதாகவும் மாணவர்கள் தெரிவித்தனர். மாணவர்களின் உற்சாகத்தால், பெற்றோரும் நிம்மதி அடைந்துள்ளனர்.
இதன்மூலம், மாணவர்களுக்கு ஆதரவு என்ற போர்வையில், நீட் தேர்வுக்கு எதிராக, கபட நாடகம் ஆடிய கட்சித் தலைவர்களின் மூக்கு உடைபட்டுள்ளது. அரசியல் ரீதியாக, நீட் தேர்வு விவகாரத்தில் கட்சியினர் நடத்திய போலி போராட்டங்கள், 'புஸ்' ஆன நிலையிலும், வீண் பிடிவாதமாக மீண்டும் போராட்டங்களை அறிவித்துள்ளனர்.
கட்டுப்பாடு விதித்தது யார்?
நீட் தேர்வு, 2015ல் நடந்தபோது, மாணவர்கள் சிலர் உள்ளாடைகளிலும், ஆபரணங்களிலும், உலோக வகையான நுண்ணிய மின்னணு சாதனங்களை பொருத்தி வந்து, தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டனர். இதனால், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, நாடு முழுவதும் மறு தேர்வு நடத்தப்பட்டது. இது போன்ற பிரச்னைகளால், பல்வேறு கட்டுப்பாடுகளை உச்ச நீதிமன்றம் விதித்தது. இதன்படியே, சி.பி.எஸ்.இ., தரப்பில் முறைகேடுகளை களையும் வகையில், கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
கைக்குட்டை அனுமதியில்லை :
சென்னை, ஆவடியில் உள்ள, கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கு வந்த மாணவி ஒருவர், கைக்குட்டை எடுத்து சென்றார். அவருக்கு, கைக்குட்டை எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டது. அவர், 'ஜலதோஷம் இருப்பதால், முகம் துடைக்க, கைக்குட்டை தேவை' என்றார். அதற்கு, 'தேர்வறையில் உள்ள ஊழியர்களிடம் துணி பெற்றுக் கொள்ளலாம்' என, பணியில் இருந்தோர் தெரிவித்தனர். சிலர், பாட்டிலில் சுடுதண்ணீர் எடுத்து வந்தனர். அதை எடுத்து செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டது. தேர்வு மையங்களுக்கு வெளியில், மாணவர்களின் பெற்றோர் காத்திருந்தனர். தேர்வு முடிந்து வந்த பிள்ளைகளிடம், 'நன்றாக எழுதினீர்களா' என, ஆர்வமுடன் கேட்டு தெரிந்து கொண்டனர்.
பிரார்த்தனையும், வாழ்த்தும்!
பெரும்பாலான மாணவர்கள், அதிகாலையிலேயே குளித்து, தங்கள் வீட்டிலும், அருகில் உள்ள கோவில்களுக்கும் சென்று, சிறப்பு பிரார்த்தனை மேற்கொண்டனர். சில பள்ளிகளும், பயிற்சி மையங்களும் தாங்களே பிரார்த்தனை கூட்டங்களை நடத்தி, மாணவ -- மாணவியரை தேர்வு மையங்களுக்கு அழைத்து வந்தன. தேர்வு மையத்திற்குள் நுழையும் தங்கள் பிள்ளைகளுக்கு, பெற்றோர் கைகுலுக்கியும், நெற்றியில் முத்தமிட்டும் வாழ்த்து கூறி, அனுப்பி வைத்தனர்.
- நமது நிருபர் -
No comments:
Post a Comment