Thursday, May 24, 2018


தவிர்த்திருக்கலாம்!

By ஆசிரியர் | Published on : 24th May 2018 02:52 AM |

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடக்கும் போராட்டம் கடந்த இரண்டு நாட்களாக உச்சக்கட்டத்தை அடைந்திருக்கிறது. துப்பாக்கிச் சூட்டிலும் முடிந்திருக்கிறது. செவ்வாய், புதன் இரண்டு நாட்களிலும் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கிறார்கள். இந்தப் போராட்டமும் சரி, போராட்டக்காரர்கள் நடத்திய வன்முறையும் சரி, அதை எதிர்கொள்ள காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூடும் சரி இவையனைத்துமே தவிர்க்கப்பட்டிருக்கலாம்.

கடந்த மார்ச் 24-ஆம் தேதி தூத்துக்குடியில் 20,000-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து பராமரிப்பைக் காரணம் காட்டி ஸ்டெர்லைட் நிறுவனம் தனது ஆலையை தற்காலிகமாக மூடியது. அந்த ஆலையிலிருந்து தயாரிக்கப்பட்ட தாமிரத்தை வெளியில் கொண்டு செல்ல அனுமதிக்கவில்லை என்பது மட்டுமல்ல, ஸ்டெர்லைட் ஊழியர்களை ஏற்றிச்செல்லும் வாகனங்கள் மீது கடந்த ஏப்ரல் மாதம் முதல் போராட்டக்காரர்கள் கல்வீச்சில் ஈடுபட்டு வருகிறார்கள். ஸ்டெர்லைட் ஆலையின் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டிருக்கின்றன. முன்னெச்சரிக்கையாக 144 தடையுத்தரவு பிறப்பித்த மாவட்ட நிர்வாகம், போதிய அளவில் காவலர்களை தயார் நிலையில் வைக்காமல் இருந்தது ஆச்சரியமாக இருக்கிறது.

குமாரரெட்டியாபுரம், மடத்தூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து காலையிலிருந்து ஆட்சியர் அலுவலகம் நோக்கி நகர்ந்த ஊர்வலத்தில் தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தில் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லாமல் திரண்டிருந்த மீனவர்களும் சேர்ந்தபோது மிகப்பெரிய பேரணியாக அது மாறியது. ஊர்வலத்தில் வந்தவர்களை காவல்துறையினர் கட்டுப்படுத்த முயன்றபோது அவர்கள் கல்வீச்சில் ஈடுபட்டனர். ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் அங்கிருந்த வாகனங்களை தீக்கிரையாக்கி இருக்கிறார்கள். ஸ்டெர்லைட் ஊழியர் குடியிருப்பு வளாகத்திற்கு நுழைந்து 40-க்கும் மேற்பட்ட வாகனங்களை மட்டுமல்லாமல், ஜெனரேட்டருக்கும் தீ வைத்திருக்கிறார்கள். போராட்டம் வன்முறையாக மாறியிருக்கக் கூடாதுதான். ஆனால், அதை எதிர்பார்க்கவும், எதிர்கொள்ளவும் காவல்துறையும், நிர்வாகமும் தவறியதன் விளைவுதான் துப்பாக்கிச் சூடும், அதன் விளைவாக ஏற்பட்டிருக்கும் உயிர்ப்பலிகளும்.

ஆரம்பம் முதலே லண்டனைத் தலைமையகமாகக் கொண்ட வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் எனப்படும் தாமிரம் தயாரிப்பு நிறுவனம் பிரச்னைக்குரியதாகவே இருந்து வந்திருக்கிறது. இவர்கள் 1991-இல் மகாராஷ்டிர மாநிலம் ரத்தினகிரியில் இந்தத் தொழிற்சாலையைத் தொடங்க முற்பட்டு 1993-இல் கட்டடப் பணியும் முழுவீச்சில் நடந்தது. அப்போது 30,000-க்கும் அதிகமான பொதுமக்கள் இந்தத் தொழிற்சாலையால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என்பதை கேள்விப்பட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 1994-இல் மாவட்ட ஆட்சியரும், அரசும் தலையிட்டு ரத்தினகிரியில் இந்த ஆலைக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

அடுத்த ஓர் ஆண்டில் தூத்துக்குடியில் இந்த ஆலை அமைவதற்கு அன்றைய ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு அனுமதி வழங்கியது. மன்னார் வளைகுடாவிலிருந்து 14 கி.மீ. தொலைவில் இப்படியொரு ஆலை அமைவது பல்லூயிர்ப் பெருக்கத்துக்கு ஆபத்து என்பதையும் மீறி தொடர்ந்து நடைபெற்ற போராட்டங்களை சட்ட செய்யாமல் ஸ்டெர்லைட் காப்பர் என்கிற இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. 1995-இல் ஆஸ்திரேலியாவிலிருந்தும் அமெரிக்காவிலிருந்தும் நிராகரிக்கப்பட்ட இயந்திரங்கள் இறக்குமதி செய்யப்பட்டு 1996-இல் ஆண்டொண்றுக்கு 40,000 டன் தாமிர உற்பத்தித் தயாரானது இந்த நிறுவனம்.

1997-இல் இதிலிருந்து வெளியான நச்சப் புகையால் பாதிக்கப்பட்ட 100-க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதற்குக் காரணம், இந்த ஆலையிலிருந்து வெளியான சல்பர் டை ஆக்ûஸடு வாயு என்று உறுதிபடுத்தப்பட்டது. மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கருணாநிதி தலைமையிலான அன்றைய திமுக அரசு அந்த போராட்டத்தை தடுக்க முற்பட்டது என்பதுமட்டுமல்ல, ஸ்டெர்லைட் நிறுவனம் தனது உற்பத்தியை 70,000 டன்னாக அதிகரிக்க அனுமதியும் வழங்கியது.
தொடர்ந்து அதிமுக, திமுக மாநில அரசுகளும், காங்கிரஸ், பாஜக மத்திய அரசுகளும் இந்த நிறுவனத்திற்கு சாதகமாக இருந்திருக்கின்றன என்பதுதான் உண்மையான பின்னணி. இடதுசாரிகளின் துணையோடு மத்தியில் அமைந்த ஐக்கிய முன்னணி அரசின் ஆட்சியின்போது ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. ஆகவே, இந்த போராட்டக்காரர்களுக்காக அனுதாபம் தெரிவிக்கும் தார்மிக உரிமை ஆட்சியிலிருந்த எந்த ஓர் அரசியல் கட்சிக்கும் கிடையாது.

தமிழகத்தில் கருணாநிதி, ஜெயலலிதா போன்ற ஒற்றைச் சர்வாதிகார தலைமை ஆட்சியில் இல்லாமல் இருப்பதால் அதைத் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள, பல்வேறு சக்திகளும் களமிறங்கியிருக்கின்றன. முந்தைய அரசுகள் செய்த தவறுகளுக்கெல்லாம் இன்றைய தமிழக அரசு பழியைச் சுமக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.
இத்தனை உயிர்கள் பலியாகி இருப்பது வேதனை அளிக்கிறது. துப்பாக்கிச் சூடு தவிர்க்கப்பட்டிருக்கலாம்தான். ஆனால், இப்படியொரு கலவரம் நடக்க வேண்டும், துப்பாக்கிச் சூட்டில் முடிய வேண்டும் என்று சில சமூகவிரோத சக்திகள் திட்டமிட்டிருக்கவும் கூடும் என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். கடந்த 20 ஆண்டுகளாக ஸ்டெர்லைட் நிறுவனத்தைத் தூத்துக்குடியில் தொடரவிட்டவர்களின் தவறுக்கு அப்பாவிப் பொதுமக்கள் பலியாகியிருக்கிறார்கள்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!

No comments:

Post a Comment

NEWS TODAY 7.11.2024