Saturday, May 12, 2018

முதல் பார்வை: இரும்புத்திரை

Published : 11 May 2018 18:41 IST

உதிரன் சென்னை



டிஜிட்டல் இந்தியாவின் போதாமைகளையும், குற்றங்களையும் சொல்லும் படமே 'இரும்புத்திரை'.

சாமானிய மனிதர்களின் வங்கிக் கணக்கில் இருந்து ஆயிரக்கணக்கில் பணம் திடீர் திடீரென்று காலியாகிறது. வங்கியிடம் பாதிக்கப்பட்டவர்கள் முறையிட்டால் பதில் இல்லை. இதனால் தற்கொலை உள்ளிட்ட சில அசம்பாவிதங்கள் நிகழ்கின்றன. இந்த சூழலில் ராணுவ அதிகாரியான விஷால் வங்கிக்கடன் வாங்க படாதபாடு படுகிறார். அலைச்சல், மன உளைச்சலுடன் ஒரு போலி முகவரியில் வங்கிக் கடன் வாங்க அடுத்த நாளே அவரின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.10 லட்சம் காணாமல் போகிறது. தங்கையின் திருமணம் தடைபடுமே என கலங்கும் விஷால் அதற்குப் பிறகு என்ன செய்கிறார்? பணம் எப்படிக் காணாமல் போகிறது? அந்தக் குற்றத்தின் பின்னணி என்ன? என்பது மீதிக் கதை.

தகவல் தொழில்நுட்பத் திருட்டின் பின்புலத்தை விரிவாகப் பதிவு செய்து ஆச்சர்யத்துக்கும் அதிர்ச்சிக்கும் ஆளாக்குகிறார் இயக்குநர் மித்ரன். ஆதார் உள்ளிட்ட அடிப்படை அம்சங்களிலிருந்தும் தகவல் திருடப்படலாம் என்று எச்சரிக்கை விடுக்கும் இயக்குநரின் அக்கறைக்கு மதிப்பளித்து வரவேற்கலாம்.

'துப்பறிவாளன்' படத்தில் அதிகம் பேசாமல் அலட்டிக்கொள்ளாமல் மௌனகுருவாக இருந்து சாதித்த விஷால் 'இரும்புத்திரை' படத்தின் அறிமுகக் காட்சிகளில் காமெடி பண்ண முயற்சித்திருக்கிறார். அது எடுபடவில்லை. அப்பா மீதான கடுப்பை, கோபத்தைக் காட்டியிருக்கும் விதமும், அதற்கு தர்க்க ரீதியாகத் தரும் விளக்கமும் நம்பகத்தன்மையை வரவழைக்கின்றன. சண்டைக் காட்சிகளில் விஷால் காட்டியிருக்கும் மெனக்கெடல் கவனிக்க வைக்கிறது. ஆனால், கோபாவேசம் கொள்ள வேண்டிய சில முக்கியமான காட்சிகளில் வறட்சியான நடிப்பைத் தந்திருக்கிறார். மற்றபடி கமர்ஷியல் நாயகனுக்கான அம்சங்களை தவறாமல் பின்பற்றி இருக்கிறார்.

முகம் முழுக்க சிரிப்பைத் தூவியபடி சமந்தா எனர்ஜி ஏஞ்சலாக வலம் வருகிறார். கதையின் நீக்கு போக்கான இடங்களுக்கும், தடம் மாறும் பயணத்துக்கும் கிரியா ஊக்கியாக சமந்தா சம பங்கு வகிக்கிறார். டெல்லி கணேஷ் பிரமாதமான நடிப்பைத் தர, ரோபோ ஷங்கரும், காளி வெங்கட்டும் உள்ளேன் ஐயா அட்டெனன்ஸ் போட்டிருக்கிறார்கள்.

எந்தவித பில்டப் கொடுத்தாலும் அது அர்ஜூனுக்கு மிகச் சரியாகப் பொருந்துகிறது. அதற்கான நியாயத்தையும் அவர் செய்திருக்கிறார். நுணுக்கமான அசைவுகளில், பேச்சில் சவாலான நடிப்பைக் கொடுத்திருக்கிறார். 'என்னைப் பொறுத்தவரைக்கும் நீ ஒரு நம்பர்தான், ஆளாகணும்னு நினைக்காதே' என்று பஞ்ச் வசனம் பேசி மிரள வைக்கிறார்.

கமர்ஷியல் படத்தில் தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்கு அளப்பரியது. அதன் வலிமை உணர்ந்து ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவில் தனித்துவம் கடைபிடித்து காட்சிகளுக்கு வண்ணம் சேர்த்திருக்கிறார். சேஸிங் காட்சிகளில் கேமரா நம் தோள்களில் பயணிப்பதைப் போல பரபரப்பை ஏற்படுத்துகிறார். யுவன் பின்னணி இசையில் விரும்பித் திரும்பிப் பார்க்க வைக்கிறார். ரூபன் கச்சிதமாக கத்தரி போட்டிருக்கிறார்.

ஒரு காட்சியில் ஓரிடத்தில் பேசிக்கொண்டிருப்பவரின் புகைப்படமே அவர் தொடர்பான தகவல்களைத் திருடும்போது திரையில் தெரிகிறது. அடிவாங்கிய விஷாலுக்கு காயம் ஆறிய நிலையில், அடிகொடுத்த மற்ற ராணுவ வீரர்கள் மட்டும் காயங்களோடு இருப்பது லாஜிக் மீறல். சமந்தாவும்- விஷாலும் நடந்துகொண்டே பேசுவது விடியும் வரை பேசுவதாக கன்வே செய்யவில்லை. இதுபோன்ற சின்னச் சின்னக் குறைகள் உள்ளன. முதல் பாதி சுற்றி வளைத்து ஆரம்பித்த இடத்துக்கே வந்ததைப் போன்ற ஓர் உணர்வை ஏற்படுத்துகிறது. படத்தின் நிதானமான போக்கும் அதற்கான காரணம்.

ஆனால், இவை எல்லாவற்றையும் மறந்து நேரத்தைப் பற்றி எல்லாம் யோசிக்க விடாமல் இரண்டாம் பாதி முழுக்க நம்மை முழுவதுமாக இழுத்துக்கொள்வது திரைக்கதையின் பலம் என்று சொல்லலாம். அர்ஜூனும் விஷாலும் ஒருவருக்கொருவர் பதிலடி கொடுக்கும் விதத்தில் நாங்கள் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை என்று நிரூபிக்கிறார்கள். இந்த இணையர்களின் திரை ஆக்கிரமிப்பு சுவாரஸ்யமாக உள்ளது. அதுவும் குருநாதா, பிக் பாஸ் என்று போகிற போக்கில் விஷால் அர்ஜூனை கலாய்ப்பதெல்லாம் ரசிகர்களிடம் நன்றாகவே எடுபடுகிறது.

தகவல் தான் அறிவு, தகவல்தான் வியாபாரம், தகவல்தான் பணம் பண்ணும் வழி என்று அதன் பாதகங்களை பக்குவமாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் மித்ரன் செல்போனில் ஊடுருவது முதல் கணினியில் நுழைவது வரை நடக்கும் முறைகேடுகளை, அதன் இருட்டுப் பக்கங்களை சொன்ன விதத்தில் 'இரும்புத்திரை' முக்கியமான சினிமாவாக உருமாறுகிறது.

ஷங்கர், முருகதாஸ் போன்ற இயக்குநர்கள் ஊழல், கறுப்புப் பணம் குறித்து படம் எடுத்திருக்கிறார்கள். ஆனால், அவர்களைத் தாண்டி சமகாலப் பிரச்சினையை பக்குவமாக அலசிய விதத்திலும், விழிப்புணர்வை விதைத்த விதத்திலும் 'இரும்புத்திரை' தவிர்க்க முடியாத படமாகிறது.

No comments:

Post a Comment

NEWS TODAY 23 AND 24.12.2024