Saturday, May 12, 2018

முதல் பார்வை: ‘நடிகையர் திலகம்’

சாதாரண கிராமத்தில் பிறந்த சாவித்ரி, மேடை நாடகங்களில் நடிக்கத் தொடங்கி, சினிமாவில் நடிகையானார். அவருக்கும் ஜெமினி கணேசனுக்குமான காதல், கல்யாணம், பிரிவு, இறுதி வாழ்க்கை என சாவித்ரியின் ஒட்டுமொத்த வாழ்க்கைதான் ‘நடிகையர் திலகம்’ படத்தின் கதை.

சாவித்ரி குழந்தையாக இருக்கும்போதே அவர் அப்பா இறந்துவிடுகிறார். இதனால், சிறு வயதிலேயே தன் பெரியம்மா வீட்டில் அம்மாவுடன் தஞ்சம் புகுகிறார் சாவித்ரி. அவரின் சுட்டித்தனத்தைப் பார்த்து, ‘சாவித்ரியை நாட்டியத்தில் சேர்த்து விட்டால் நன்றாக சம்பாதிக்கலாம்’ என்று ஒருவர் சொல்ல, சாவித்ரியின் பெரியப்பா அவரை நாட்டியம் கற்றுக் கொடுக்கும் இடத்துக்கு அழைத்துச் செல்கிறார். அவரின் குறும்புகளைப் பார்த்து, ‘உன்னால் நாட்டியம் கற்றுக்கொள்ள முடியாது’ என்கிறார் வாத்தியார். அவர் ‘முடியாது’ என்ற சொன்ன ஒரு வார்த்தைக்காகவே தூரத்தில் இருந்தே அவர் கற்றுக் கொடுப்பதைப் பார்த்தும், தன் தோழி சுசீலாவிடம் இருந்தும் நாட்டியம் கற்றுக் கொள்கிறார் சாவித்ரி.
சாவித்ரியை சினிமாவில் நடிக்க வைப்பதற்காக சென்னை அழைத்து வருகிறார் அவருடைய பெரியப்பா. ஆனால், முதல் படத்தில் அவருக்கு ஒழுங்காக டயலாக் பேசி நடிக்கத் தெரியவில்லை. ‘உனக்கு நடிப்பே வராது’ எனத் திட்டுகிறார் அந்தப் படத்தின் இயக்குநர். ‘உன்னால் முடியாது’ என்று யாராவது சொன்னால், உடனே அதை செய்து காட்டுவதுதான் சாவித்ரியின் பிடிவாதமாயிற்றே... அதே ஸ்டுடியோவில் வேறொரு படத்தில் நடைபெற்ற ஆடிஷனில் செலக்ட் ஆகி, சிறிய வேடத்தில் நடிக்கிறார். அவரின் நடிப்பைப் பார்த்து அசந்து, எந்த இயக்குநர் ‘உனக்கு நடிப்பு வராது என்று திட்டினாரோ, அதே இயக்குநரே ஹீரோயினாக அறிமுகப்படுத்துகிறார். ஜெமினி கணேசனும் ஹீரோவாகிவிடுகிறார். தெலுங்கு மட்டுமே தெரிந்த சாவித்ரி, தமிழ் வசனங்களைப் பேச சிரமப்படுகிறார். ‘தெலுங்கு - தமிழ் புத்தகத்தைப் படிப்பதைவிட, மனிதர்களிடம் இருந்து மொழியை கற்றுக்கொள்’ என்று அவரைப் பல இடங்களுக்கும் அழைத்துப் போகிறார் ஜெமினி கணேசன்.
நாளடைவில் இருவருக்கும் இடையில் காதல் மலர்கிறது. அந்தக் காதல், கல்யாணத்திலும் முடிகிறது. ஆனால், நாளடைவில் அவர்கள் இருவருக்குள்ளும் இடைவெளி விழுகிறது. இந்த இடைவெளி எப்படி அதிகமானது? ஜெமினியை விட்டு சாவித்ரி பிரிந்ததற்கு என்ன காரணம்? குடிக்கு அடிமையாகி, தன் சொத்துக்களை எல்லாம் சாவித்ரி இழந்தது எப்படி? என்பதெல்லாம் மீதிக்கதை. இந்தக் கதை, சாவித்ரி கோமாவில் விழுந்தபிறகு ரிப்போர்ட்டரான சமந்தா, தேடித்தேடி சேகரித்தது.

நடை, உடை, பாவனை என அச்சு அசல் சாவித்ரியாகவே வாழ்ந்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ். அவருடைய சினிமா வாழ்க்கையில் இந்த ஒரு படமே போதும் என்று சொல்லும் அளவுக்கு, ஒவ்வொரு அசைவிலும் சாவித்ரியை நினைவுபடுத்துகிறார் கீர்த்தி. இதற்காக அவர் செய்த ஹோம்வொர்க் ஏராளம். குறிப்பாக, கீர்த்தியின் மேக்கப்மேனுக்கு மிகப்பெரிய பாராட்டு. இளமை சாவித்ரி, உடல் எடை கூடி பெருத்த கொஞ்சம் வயதான சாவித்ரி என கொஞ்சம் கூட குறைசொல்ல முடியாத அளவிற்கு கீர்த்தியை சாவித்ரியாகவே மாற்றியிருக்கிறார்.

ஜெமினி கணேசன் எப்போது இவ்வளவு ஒல்லியாக இருந்தார் என்ற கேள்வி எழுந்தாலும், தன் நடிப்பில் கொஞ்சமும் குறை வைக்காமல் அவரைப் போலவே நடித்திருக்கிறார் துல்கர் சல்மான். ஆரம்பத்தில் வரும் சமந்தா காட்சிகள் கொஞ்சம் எரிச்சலாக இருந்தாலும், க்ளைமாக்ஸில் ஸ்கோர் செய்திருக்கிறார். சின்னச் சின்ன வேடங்களில் நடித்துள்ள விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே, பானுப்ரியா, பிரகாஷ் ராஜ், நாக சைதன்யா என எல்லாருமே அருமையாக நடித்திருக்கின்றனர்.
மிக்கி ஜெ மெயர் இசையில், பின்னணி இசை அருமை. தமிழில் ‘தந்தாய்... தந்தாய்...’ பாடல் கேட்க கேட்க இதமாக இருக்கிறது. டேனி சஞ்செஸ் - லோபெஸ் ஒளிப்பதிவில் அத்தனை பிரம்மாண்டம். குறிப்பாக, கீர்த்தி சுரேஷ் கோபத்துடன் வந்து மது குடிக்கிற காட்சியில், பின்னால் இருந்து தலைக்கு மேலே வந்து முன்புறம் கேமரா வரும் ஷாட், சிறப்போ சிறப்பு. அந்தக் காலத்தை அப்படியே செட்டில் கொண்டுவந்த கலை இயக்குநருக்கும், அவருடைய குழுவினருக்கும் ஹேட்ஸ் ஆஃப்!

ஒருவருடைய வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுத்தாலும், பெரும்பாலும் அது போரடிக்கும் டாக்குமென்ட்ரி போல இருக்கும். ஆனால், ஒரு இடத்தில் கூட அப்படித் தோன்றாதபடி இயல்பாக எடுத்திருக்கிறார் நாக் அஸ்வின். குறிப்பாக, சாவித்ரியின் உதவும் உள்ளத்தைப் பல இடங்களில் காட்சிப்படுத்தியிருக்கிறார். சாவித்ரியைப் பற்றி பல விஷயங்களையும் தெரிந்துகொள்ள வேண்டும் எனப் பலரிடம் பேசி இந்தக் கதையை உருவாக்கிய இயக்குநரின் உழைப்பு, நிச்சயம் பாராட்டப்பட வேண்டியது.
‘என் அம்மாவின் உண்மைக்கதை முதன்முதலில் வெளியாகியுள்ளது’ என சாவித்ரியின் மகள் விஜய சாமுண்டீஸ்வரி கூறியிருப்பதில் இருந்தே, உண்மைக்கு நெருக்கமாக இந்தப் படம் இருக்கிறது எனத் தெரிகிறது. எப்போதுமே உண்மைக்கு மிகப்பெரிய வலிமை இருக்கிறது. அந்த வலிமை, இந்தப் படத்தில் இருக்கிறது.

No comments:

Post a Comment

HC orders govt to appoint 292 auxiliary nurses

HC orders govt to appoint 292 auxiliary nurses  TIMES NEWS NETWORK  6.11.2024  Bhopal/Jabalpur : In a significant judgement, a division benc...