Saturday, May 12, 2018

எனது பெயரையோ, புகைப்படத்தையோ பயன்படுத்தக் கூடாது: திவாகரனுக்கு சசிகலா தரப்பு நோட்டீஸ்

Published : 11 May 2018 20:57 IST

சென்னை

 

திவாகரன், சசிகலா | கோப்புப் படம்.

எனது பெயரையோ, புகைப்படத்தையோ திவகாரன் பயன்படுத்தக்கூடாது என்று சசிகலா தரப்பிடமிருந்து திவாகரனுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இன்று சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் திவாகரனுக்கு அனுப்பிய நோட்டீஸில் தெரிவித்துள்ளதாவது:

''தாங்கள் சசிகலாவின் உடன் பிறந்த சகோதரர். உங்கள் மீது சசிகலா அதிக பாசம் கொண்டவர் என்பது தாங்கள் அறிந்ததே. ஆனாலும், தங்களின் முரண்பட்ட செயல்பாடுகளும் வெளிப்பாடுகளும் சசிகலாவை கனத்த மனதுடன் இந்த அறிவிப்பை தங்களுக்கு அனுப்பும் சூழலுக்கு தள்ளியுள்ளது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோரைப் புகழ்ந்தும் அவர்களது துரோகச் செயல்களை மறைக்கும் வண்ணமாக தாங்கள் கடந்த ஏப்ரல் 24-ம் தேதி முதலாக தொடர்ந்து பத்திரிகைகள், காணொளிகள், சமூக வலைதளங்களில் தவறான விஷயங்களை பேட்டிகள் கொடுத்து வருகிறீர்கள்.

அதிமுகவில் உள்ள தற்போதைய பிரச்சினைகள் தொடர்பாக சசிகலா பல வழக்குகளை சென்னை மற்றும் டெல்லி உயர் நீதிமன்றங்களில் வழக்குகளாக தொடுத்துள்ளார். மேலும், அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளையும் மேற்படி நீதிமன்றங்களில் எதிர்கொண்டு வருகிறார். அவை அனைத்தும் தற்போதும் நிலுவையில் இருந்து வருகிறது. வழக்குகளின் அனைத்து விவரங்களும் வழக்காடும் தன்மையும் சசிகலாவின் ஆலோசனையின்படியே நடந்து வருகின்றன. அதே போல சசிகலாவால் அதிமுகவின் துணைப் பொதுச் செயலாளராய் நியமிக்கப்பட்ட டிடிவி தினகரனும் என் கட்சிக்காரரிடம் அவ்வப்போது உரிய ஆலோசனைகளைப் பெற்று கட்சிப் பணிகளில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

தினகரன் கடும் இன்னல்களுக்கிடையே அதிமுகவின் பெருவாரியான உண்மைத் தொண்டர்களை ராணுவம் போன்று கட்டுக்கோப்புடன், கட்சியை அனுதினமும் பலப்படுத்தி வருகிறார். நிலவரங்கள் இவ்வாறு இருக்க, உண்மைக்கு மாறாக காழ்ப்புணர்வுடனும், இல்லாததையும் பொல்லாததையும் தாங்கள் பொதுவெளியில் பேசி வருவது சசிகலாவுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி வருகிறது. அதிமுகவின் அடிப்படை உறுப்பினராகக் கூட இல்லாத தாங்கள், அதிமுகவின் பொதுச் செயலாளராகிய சசிகலா பற்றி அவதூறாகப் பேசி வருவது சட்டத்தின் பார்வையில் சரியானதல்ல. எனது கட்சிக்காரர் சசிகலாவின் நிர்வாகத் திறமை, தலைமை சார்ந்த பண்பு, கட்சிப் பணி மற்றும் அவருக்கும் அதிமுகவின் தொண்டர்களுக்கும் இடையே இருக்கும் பாசப் பிணைப்புக்கு எதிராக தாங்கள் உள்நோக்கத்துடன் பேட்டிகள் கொடுத்து வருவதை சசிகலா இந்த சட்ட அறிவிப்பின் வாயிலாக கண்டிக்கிறார்.

தினகரன் குறித்து தாங்கள் பொதுவெளியில் உண்மைக்கு மாறாகப் பேசி வரும் விஷயங்கள் தங்கள் காழ்ப்புணர்ச்சி, பழிவாங்குதல் உணர்வை வெளிப்படுத்துகின்றன. தங்களின் பேட்டிகள் சசிகலாவின் தலைமை மாண்புக்கும் ஆளுமைக்கும் குற்றம் கற்பிக்க, யாரையோ திருப்திப்படுத்த முயன்று வருகிறீர்கள் என்பதையும் வெளிப்படுத்துவதாக அவரே தெரிவிக்கிறார்.

என் கட்சிக்காரர் சசிகலா அதிமுகவும் அதன் ஒன்றரை கோடி தொண்டர்களுமே பிரதானம் என்றும் அவரது குடும்பம் அவருக்கு இரண்டாவது பட்சம் என்பதையும் தெரிவிக்கிறார்.

தாங்கள் எந்த ஒரு பெயரிலும் அரசியல் ரீதியாக செயல்படுவது தங்களின் சொந்த விருப்பம் என்றும், ஆனால் என் கட்சிக்காரர் சசிகலாவின் பெயரையோ, புகைப்படத்தையோ எந்த வகையிலும் தாங்கள் பயன்படுத்தக் கூடாது என்பதனை இந்த சட்ட அறிவிப்பின் மூலமாக தெரிவிக்கிறார்.

அதேபோல் என் கட்சிக்காரர் உயிருக்கும் மேலாக நினைத்து வணங்கும் ஜெ.ஜெயலலிதாவை ஒருமையிலும், தரக்குறைவாகவும், அவரது நற்புகழை களங்கப்படுத்தும் வகையில் தொடர்ந்து பேசி வருவதை எள்ளளவும் என் கட்சிக்காரரும், கட்சித் தொண்டர்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆகவே, அதை மனதில் கொண்டு அதுபோன்ற சட்டத்துக்கு புறம்பான செயல்களில் தாங்கள் இனிமேல் எவ்வகையிலும் நேரடியாகவோ மறைமுகமாகவோ செய்யக்கூடாது, பேசக்கூடாது.

எனது அக்கா, என் உடன் பிறந்த சகோதரி எனும் உரிமையைக் கோரி தாங்கள் எனது கட்சிக்காரரைப் பற்றி ஊடங்களில் பேசி வருவதை உடனடியாக நிறுத்த வேண்டும். இந்த சட்ட அறிவிப்பினை அனுப்புவதன் நோக்கமே, உண்மைக்கு மாறாக தவறாக தொடர்ந்து ஊடகங்களில் பேசி வருவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்பதற்காகத்தான்.

இந்த சட்ட அறிவிப்பைனைப் பெற்ற பிறகும் தாங்கள் தொடர்ந்து பொய்யான விஷயங்களைப் பேசும் சூழலில் ரத்த சம்பந்த உறவு என்பதை ஒதுக்கிவைத்துவிட்டு தங்கள் மீது உரிய சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுவீர்கள்.''

இவ்வாறு ராஜா செந்தூர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, சசிகலா சிறைக்குச் செல்லும்போது தனக்கு அடுத்த நிலையில் தினகரனை நியமித்தார். அதற்கேற்ப ஆர்.கே.நகரில் சுயேச்சையாகப் போட்டியிட்டு அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தினகரன் தனது அரசியல் திறமையை நிரூபித்தார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வான தினகரன், அமமுக என்ற கட்சியைத் தொடங்கினார். பி.வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் அக்கட்சியில் உள்ளனர்.

ஆனாலும், சசிகலா குடும்பத்தில் திவாகரன் உள்ளிட்டோருக்கும் தினகரனுக்கும் இடையே பனிப்போர் நீடித்து வந்தது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வெற்றிக்குப் பிறகு தினகரனின் கை ஓங்கியதால் திவாகரனால் கட்சியில் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. தனது கணவர் ம.நடராஜன் இறந்தபோது 15 நாட்கள் பரோலில் வந்த சசிகலா, தினகரன் - திவாகரன் இடையே சமாதானம் செய்து வைத்ததாகக் கூறப்படுகிறது.

அரசியலில் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டு வரும் இந்த நேரத்தில் குடும்பத்துக்குள் மோதல் என்பது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். எனவே, எதிர்காலம் கருதி அமைதியாக இருக்குமாறு சசிகலா எச்சரித்ததாகக் கூறப்படுகிறது. ஆனாலும் மோதல் ஓய்ந்த பாடில்லை.

இந்நிலையில் எனது பெயரையோ, புகைப்படத்தையோ திவகாரன் பயன்படுத்தக்கூடாது என்று சசிகலா தரப்பிடமிருந்து திவாகரனுக்கு நோட்டீஸ் அனுப்பியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024