வருமானவரி பிடிக்கக் கூடாது' - குமரியிலிருந்து பிரதமருக்குச் சென்ற கடிதம்
சிந்து ஆர்
vikatan 23.05.2018
அரசு ஊழியர்களுக்கான பென்சன் தொகையில் வருமானவரி பிடித்தம் செய்யக் கூடாது எனக் குமரி மகாசபா தலைவர் ராவின்சன் பிரதமருக்குக் கடிதம் அனுப்பியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தின் வளர்ச்சிக்காகச் செயல்படும் குமரி மகாசபா அமைப்பின் கூட்டம் இன்று நடந்தது. அதன் தலைவர் ராவின்சன் பேசுகையில், "குமரி மாவட்ட வளர்ச்சிக்காக என்னென்ன திட்டங்கள் செயல்படுத்த முடியும் என்பது குறித்து ஆலோசிக்கும் விதமாக `உலகளாவிய குமரி மக்கள் சந்திப்பு' நிகழ்ச்சி 2019-ம் ஆண்டு டிசம்பர் 28-ம் தேதி நடத்த முடிவு செய்துள்ளோம். சாமித்தோப்பில் விமான நிலையம் அமைப்பது தொடர்பாக 2012-ம் ஆண்டிலிருந்து குமரி மகாசபா முயன்று வருகிறது. விமான நிலையம் குறித்து குமரி மகாசபா ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா அமைப்புக்கு கடிதம் எழுதியிருந்தோம். அவர்கள் அனுப்பிய பதில் கடிதத்தில் ஏர்ப்போட்டுக்காக நிதி ஒதுக்கி இடத்தைப் பார்வையிட்டு சர்வே செய்யப்பட்டுள்ளது. இப்போது விரிவான திட்ட செயலாக்க அறிக்கை தயாரிக்கும் பணி நடந்து வருவதாகக் கூறப்பட்டுள்ளது.
மத்திய, மாநில அரசுப்பணியில் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கான பென்சன் தொகைக்கு அரசு வருமானவரி வாங்குகிறது. வாகன விபத்துக்காக வழங்கும் இழப்பீட்டுக்கு இதுவரை வருமான வரி செலுத்தப்பட்டு வந்தது. அதை சுப்ரீம் கோர்ட் ஓர் ஆண்டுக்கு முன் ரத்து செய்துள்ளது. அதுபோல பென்சன் தொகைக்கு வருமான வரி பெறுவதை அரசு நிறுத்த வேண்டும். இது குறித்து மாவட்டக் கலெக்டர் தொடங்கி பிரதமர் வரை கடிதம் அனுப்பியுள்ளோம். சரியான தீர்வு கிடைக்காவிட்டால் அடுத்தகட்டமாக வழக்கு தொடர முடிவு செய்துள்ளோம்" என்றார்.
No comments:
Post a Comment