Thursday, July 19, 2018

சிறுமி வல்லுறவு வழக்கில் சிக்கியுள்ள 17 பேர் மட்டும் குற்றவாளிகள் அல்ல!


தமிழ்ப்பிரபா

இந்த விஷயத்தில் ரொம்ப ஆபத்தான ஒரு தரப்பினர் யார் என்றால் அந்தச் சிறுமியின் விருப்பத்தோடுதான் இது நிகழ்ந்திருக்கிறது என்கிற கருத்தை முன்வைப்பவர்கள். குறிப்பாக இவர்களிடமிருந்துதான் நம் பிள்ளைகளை காப்பாற்ற வேண்டும்.




ஒரு சிறுமியிடம் பதினேழு பேருக்கும் மேற்பட்டோர் வல்லுறவு கொண்டிருக்கும் செய்தி பல உண்மைகளை மீண்டும் நமக்கு நினைவுக்குக் கொண்டுவருகின்றன. குற்றம் செய்தவர்களுக்குத் தண்டனை கொடுக்க காவல்துறையும், சட்டமும் இருக்கிறது. அவர்கள் இச்சமூகத்திலிருந்து அப்புறப்படுத்த வேண்டியவர்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அது ஒன்றைச் செய்வதில் மட்டுமே நாம் இந்த விஷயத்தில் தன்னிறைவு அடைந்துவிடப் போகிறோமா? இனி பெண் இனத்துக்குக் கொடுமை இழப்பவர்கள் யாரும் இல்லாமல் ஆகி விடுவார்களா?



தவறு செய்து மாட்டிக்கொண்டவர்களுக்கு மட்டும்தான் குற்றவாளி என்று பெயர். ஆனால், இன்னும் மாட்டிக்கொள்ளாமல் சராசரி மனிதன் என்கிற போர்வையில் விதவிதமான துன்புறுத்தல்களை பலபேர் செய்து கொண்டுதானிருக்கிறார்கள். இப்போது சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் இந்தப் பதினேழுபேரும் ஓரிரு தினங்களுக்கு முன்பு அன்பான அப்பாவாக, தோழனாக, தாத்தாவாக நடமாடிக் கொண்டிருந்தவர்கள்தானே? இவ்வளவு வக்கிரமான மனப்போக்கு ஆணுக்கு எங்கிருந்து உருவானது, அவர்களுக்குள் அந்த எண்ணத்தை எது வலுப்படுத்துகிறது எனச் சிந்திக்கிறபோது பல்வேறு வகையான சமூகக் காரணிகள் நமக்குக் கிடைக்கின்றன. எல்லா ஆண்களையும் பொதுமைப்படுத்தவில்லை எனினும் இதற்கு நாம் எல்லோரும் கூட்டுப் பொறுப்பு ஏற்றே ஆக வேண்டும். அந்தக் குழந்தையை வல்லுறவுக்கு உட்படுத்திய அனைவர்க்கும் உள்ள ஒற்றுமை, அவர்களனைவரும் போதைக்கு அடிமையானவர்கள் என்கிற தகவல் உணர்த்துவதை சாதாரணமாகக் கடந்து போய்விட முடியாது.

தன் இச்சையைத் தீர்த்துக்கொள்வதற்கு உடலோ, வயதோ, பாலினமோ, உறவுமுறையோ முக்கியமில்லை என்பதை ஆணாதிக்கச் சமூகம் திரும்பத் திரும்ப நிரூபித்துக்கொண்டே இருக்கிறது. பல ஆண்டுகளாகவே நீடிக்கும் இந்தக் கசப்பான உண்மையை நம்மிடையே வைத்துக்கொண்டு பிறகு எதன் அடிப்படையிலும் நாம் நாகரிகமடைந்துவிட்டோம் எனச் சொல்ல முடியாது.

செவித்திறனற்ற, தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்று சரியாகச் சொல்லக் கூடத் தெரியாத ஒரு சிறுமியை, தன் பேத்தி வயதுடைய குழந்தையைத் தடவிப்பார்க்க வேண்டுமென 66 வயதுள்ள ஒரு பெரியவருக்கு எப்படித் தோன்றுகிறது? அந்தப் பதினேழு பேரில் ஏழுபேர் ஐம்பது வயதுக்கு மேற்போட்டோர் என்கிற அதிர்ச்சி நம் வீட்டுப் பிள்ளைகளின் மீது இன்னும் அதிக கவனம் செலுத்தத் தோன்றுகிறது. தன் காமத்தைத் தீர்த்துக் கொள்வதற்கு எந்தவொரு வடிகாலும் தெரியாமல் இறுகிப்போன ஒரு சூழலில் காமவெறியுடன் வாழ்பவர்களை எப்படி இணங்காணுவது.

அந்தச் சிறுமி வசித்த அப்பார்ட்மென்ட்டில் முந்நூறுக்கும் மேற்பட்ட வீடுகள் இருந்திருக்கின்றன. அதில் 30 சதவிகிதம் குடும்பங்களால் நிரம்பியிருக்கிறது. என்ன இருந்து என்ன பயன்? ஏழுமாதமாக ஒரு சிறுமியை இத்தனை பேர் அதே வளாகத்தில் வைத்தே வல்லுறவு கொண்டிருக்கிறார்கள். மட்டுமன்றி, செய்கின்ற தவறை வீடியோ எடுத்து ரசிக்கும் அளவுக்கு குரூரமான மனம் கொண்டவர்களாக இருந்திருக்கிறார்கள். அந்த அளவுக்கு அந்தச் சூழல் அவர்களுக்கு சுதந்திரத்தைக் கொடுத்திருக்கிறது.



அக்கம் பக்கம் என்ன நடக்கிறது என்றுகூட தெரியாமல் இருக்கும் அப்பார்ட்மென்ட் கலாசாரத்துக்கு இன்னும் எத்தனை பேரை பலிக்கொடுக்கப் போகிறோம்?

அந்தச் சிறுமி, தனக்கு நடந்ததைக் கூறுவதற்கு ஊரிலிருந்து தன் அக்கா வரும்வரை ஐந்து மாதம் காத்திருந்திருக்கிறாள். வீட்டிலுள்ள மற்றவர்களிடம் அவள் அதைப் பகிர்ந்துகொள்ள முடியாத அளவுக்கு அவளை தடுத்தது எது என்பதையும் யோசிக்க வேண்டியிருக்கிறது.

`குட் டச் பேட் டச்' என்கிற தொடு உணர்வுகள் பற்றிய புரிதல் எல்லா வகையான குடும்பங்களிலும் பரவலாகத் தெரிய வர வேண்டும். தனக்கு எது நடந்தாலும் வெளிப்படையாக அதைச் சொல்லுகிற தைரியத்தை குழந்தைகளிடம் நாம் ஏற்படுத்த வேண்டும். இந்த விஷயத்தில் குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் பெரிய வித்தியாசமில்லை. தன்னையொரு ஒரு பாலியல் பண்டமாக மட்டுமே ஒருவன் பார்க்கிறான் என்றும், பல வகையான பாலியல் வன்முறைகளுக்கு உட்படுத்துகிறான் என்றும் பெண்களுக்குத் தெரியும். அதை வெளியே சொல்லாமல் பெண் சமூகம் தயங்குவது எதனால் என யோசிப்பதிலிருந்துதான் இதற்கான நிரந்தரத் தீர்வை நோக்கி நாம் நகர முடியும்.

மாறாக, குற்றம் புரிந்தவர்களுக்கு உடனடியாக தூக்குத் தண்டனை கொடுக்க வேண்டுமென நாம் உணர்ச்சிவயப்படுவதும், இவர்களுக்காக யாரும் வாதாடக் கூடாது என வழக்கறிஞர் சங்கர் அறிக்கை விட்டிருப்பதும் தற்காலிகமாக இதைக் கடந்துபோகும் எதிர்வினைகள் மட்டுமே. இந்த விஷயத்தில் ரொம்ப ஆபத்தான ஒரு தரப்பினர் யார் என்றால் அந்தச் சிறுமியின் விருப்பத்தோடுதான் இது நிகழ்ந்திருக்கிறது என்கிற கருத்தை முன்வைப்பவர்கள். குறிப்பாக இவர்களிடமிருந்துதான் நம் பிள்ளைகளைக் காப்பாற்ற வேண்டும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 20.09.2024