Tuesday, July 17, 2018

வாட்ஸ் ஆப்’ வதந்தியால் ஐடி ஊழியர் அடித்துக் கொலை: ‘குரூப் அட்மின்’ உள்ளிட்ட 27 பேர் கைது

Published : 16 Jul 2018 11:17 IST

பெலகாவி




குழந்தை கடத்துவோர் என நினைத்து கர்நாடகாவில் ஐடி ஊழியர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு முழுக்க முழுக்க ‘வாட்ஸ் ஆப்’ மூலம் பரப்பப்பட்ட வதந்தியே காரணம் என தெரிய வந்துள்ளது. இதையடுத்து வாட்ஸ் ஆப் குழுவை நிர்வகிக்கும் ‘அட்மின்’ எனப்படும் பொறுப்பாளர் மற்றும் ‘வாட்ஸ் ஆப்’பில் ‘பார்வர்டு’ செய்து வதந்தியை வேகமாக பரப்பியவர்கள் உள்ளிட்ட 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் முகம்மது ஆசம் உஸ்மான்சாப்(வயது 28). இவர் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவரின் நண்பர்கள் 3 பேருடன் சேர்ந்து, கர்நாடக மாநிலம், பிதார் அருகே ஹந்தேகேரா கிராமத்தில் உள்ள நண்பர் முகம்மது பஷீர் அப்ரோஸை சந்திக்க வெள்ளிக்கிழமை சென்றனர். மேலும் அங்கு சில இடங்களையும் சுற்றப் பார்க்கச் சென்றனர்.

பஷீரைச் சந்தித்துச் சென்றுவிட்டு, முகம்மது ஆசமும், அவரின் நண்பர்களும் காரில் ஹைதராபாத்துக்கு திரும்பினர். அப்போது முர்கி எனும் கிராமத்தில் முகம்மது ஆசமும் அவரின் நண்பர்களும் தங்களின் காரை நிறுத்தி சிறிதுநேரம் இளைப்பாறினார்கள். அப்போது, அந்தக் கிராமத்தில் இருந்த குழந்தைகளுக்கு சாக்லெட்டுகளைக் கொடுத்தனர்.

இதைப் பார்த்த அந்தக் கிராமத்துக்கு மக்கள் குழந்தைகளைக் கடத்த வந்திருக்கிறார்கள் என நினைத்துள்ளனர். அதற்கு ஏற்றார்போல், முகம்மது ஆசம் வந்த காரும் புதிய கார் என்பதால், நம்பர் பிளேட் இல்லாமல் இருந்தது.

இதனால், கூடுதல் சந்தேகமடைந்த கிராம மக்கள் அவர்களைக் குழந்தை கடத்துவோர் என நினைத்து தாக்கத் தொடங்கினார்கள். அவர்கள் அங்கிருந்து தப்பித்து காரில் செல்ல முயன்றபோது அவர்களைப் புகைப்படம் எடுத்து அடுத்தடுத்த கிராமத்தில் உள்ளவர்களுக்கு வாட்ஸ் அப்பில் பரப்பியுள்ளனர்.

இதனால், அடுத்த கிராமத்தைக் காரில் கடக்கும்போது, அந்தக் கிராமத்துக்கு மக்கள் முகம்மது ஆசிமின் காரை வழிமறித்து கல்லாலும், கட்டையாலும் தாக்கினார்கள். இது குறித்து தகவல் அறிந்த போலீஸார் அங்கு விரைந்து வந்து, முகம்மது ஆசிமையும் அவரின் நண்பர்களையும் தாக்கியவர்களை விரட்டியடித்தனர்.

காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால், சிகிச்சைக்கு கொண்டு செல்லும் வழியில் முகம்மது ஆசிம் உயிரிழந்தார். இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த தாக்குதலுக்கு முழுக்க முழுக்க ‘வாட்ஸ் ஆப்’பில் பரப்பப்பட்ட வதந்தியே காரணம் என தெரிய வந்துள்ளது. முகம்மது ஆசமை குழந்தை கடத்த வந்தவர் என நினைத்து ஒரு கும்பல் தாக்கியபோது, அவர்களை புகைப்படம் எடுத்து வாட்ஸ் ஆப்பில் குழந்தை கடத்துவோர் எனக் கூறி வதந்தி பரப்பியுள்ளனர்.

அக்கம் பக்கத்தில் உள்ள கிராம மக்கள் அனைவரையும் சிறிது நேரத்தில் திரட்டி பெரிய தாக்குதல் நடத்த வாட்ஸ் ஆப் வதந்தியே காரணம் என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்தத் தாக்குதல் தொடர்பாக 30-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் வதந்தியை பலருக்கும் பரப்புவதற்கு காரணமாக இருந்த வாட்ஸ் ஆப் குழுவின் ‘குரூப் ஆட்மின்’ மற்றும் தங்களுக்கு வந்த தகவல்களை வேகமாக திட்டமிட்டு வாட்ஸ் ஆப் மூலம் பரப்பியவர்களும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரிடமும் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 20.09.2024