Monday, July 9, 2018


டாக்டர்கள் 3 ஆண்டுகள் கிராமங்களில் பணிபுரிய வேண்டும்
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வலியுறுத்தல்


dinamalar 09.07.2018 

சென்னை : ''டாக்டர்கள், குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகளாவது, கிராமங்களில் பணியாற்றுவதை கட்டாயமாக்க வேண்டும்,'' என, துணை ஜனாதிபதி, வெங்கையா நாயுடு வலியுறுத்தினார்.



தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையின், 30வது பட்டமளிப்பு விழா, சென்னையில் நேற்று நடந்தது.

தங்கப் பதக்கம் :

மருத்துவம், பல் மருத்துவம், ஆயுஷ் மருத்துவம் மற்றும் இதர மருத்துவம் சார்ந்த படிப்புகளில் தேர்ச்சி பெற்ற, 20 ஆயிரத்து, 372 பேர் பட்டங்கள் பெற்றனர். அவர்களில், சிறந்த மாணவ - மாணவியர், 76 பேருக்கு தங்கப் பதக்கம், 25 பேருக்கு வெள்ளிப் பதக்கம், 63 பேருக்கு, பல்கலையின் வெற்றிப் பதக்கங்களை வழங்கி, துணை ஜனாதிபதி, வெங்கையா நாயுடு பேசியதாவது:

மக்கள் நலன் காப்பதில், தமிழகம் முன்னோடியான மாநிலமாக உள்ளது. மாணவர்கள் ஆழமாக சிந்திக்க, ஆசிரியர்கள் துாண்டுகோலாக இருக்க வேண்டும். நல்லவை அனைத்தையும் கவனிப்பவர்களாகவும், வாழ்நாள் முழுவதும் கற்றுக் கொள்பவர்களாகவும் ஆசிரியர்கள் இருக்க வேண்டும்.

அரசின் திட்டம்:

மக்கள் தொகை பெருக்கம் மற்றும் நோய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், மருத்துவப் படிப்புகளில், மாணவர் சேர்க்கையை இரட்டிப்பாக்க வேண்டும். மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லுாரி துவங்க வேண்டும் என்பதே, அரசின் திட்டம். மருத்துவப் பணி புனிதமானது. நவீன மருத்துவ வசதிகள் மட்டுமின்றி, தரமான மருத்துவ சேவைகள், கிராமங்களுக்கு கிடைக்க வேண்டும்.

எனவே, டாக்டர்களுக்கு முதலாவது பதவி உயர்வை வழங்கும் முன், கிராமங்களில், மூன்று ஆண்டுகள் பணியாற்றுவதை கட்டாயமாக்க வேண்டும். எல்லாருக்கும் தரமான, செலவு குறைந்த மருத்துவ வசதிகள் வழங்க, மத்திய அரசு, 'ஆயுஷ்மான் பாரத்' என்ற திட்டத்தைஅறிவித்துள்ளது.

உடற்பயிற்சி :

இத்திட்டத்தால், 50 கோடி பேர் பயன் பெறுவர். ஒருவர் ஐந்து லட்சம் ரூபாய் வரை சிகிச்சை பெற முடியும் என்பதால், நலிந்த பிரிவினர் அதிகம் பயன் பெறுவர். 'ரோபோ' பயன்படுத்தி, அறுவை சிகிச்சை செய்வது உட்பட, பல வகையிலும், மருத்துவத் துறையில் உலகம் முன்னேறி வருகிறது. டாக்டர்களாக உருவாகியிருக்கும் நீங்கள் தொடர்ந்து படித்து, உங்கள் அறிவை மேம்படுத்தி கொள்ள வேண்டும்.

நவீன மருத்துவ வசதிகளை தெரிந்து கொள்ள வேண்டும். கடவுளுக்கு அடுத்தபடியாக டாக்டரையே மக்கள் நம்புகின்றனர். ஏழைகளுக்கு செய்யும் சேவை, கடவுளுக்கு செய்யும் சேவை. எனவே, இவற்றை நன்றாக

உணர்ந்து, டாக்டர்கள் மிகுந்த பொறுப்புணர்வுடன் பணியாற்ற வேண்டும். சாதாரண டாக்டர்களாக இல்லாமல், மிகச் சிறந்த டாக்டராக ஒவ்வொருவரும் உருவாக வேண்டும்.

நீரிழிவு உள்ளிட்ட நோய்களுக்கு, வாழ்க்கை முறையே முக்கிய காரணம். நோயாளிகள் பாரம்பரிய உணவு பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும். நடைபயிற்சி, உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

பூப்பந்து :

இது தொடர்பாக, டாக்டர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். நான் தினமும், ஒரு மணி நேரம் பூப்பந்து விளையாடுகிறேன். அதனால் தான், மாநிலம் மாநிலமாக சென்று, சுறுசுறுப்பாக, திடகாத்திரமாக பணியாற்றி வருகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மருத்துவப் பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார், சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024