Sunday, July 8, 2018

மருத்துவ கவுன்சிலிங்கில் பங்கேற்க மேற்கு வங்க மாணவிக்கு அனுமதி

Added : ஜூலை 08, 2018 01:37


சென்னை:மேற்கு வங்கத்தில் படித்த மாணவி, பொதுப்பிரிவுக்கான மருத்துவ கவுன்சிலிங்கில் கலந்து கொள்ள, சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால அனுமதி அளித்துள்ளது.

சென்னை, சூளைமேட்டை சேர்ந்தவர், கே.சுரேந்திரன். இவரது மகள், ஐஸ்வர்யா; அடிப்படை கல்வி முதல், பிளஸ் ௨ வரை, மேற்கு வங்கத்தில் படித்தார். தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லுாரிகளில், பிற்படுத்தப்பட்ட பிரிவுக்கான ஒதுக்கீட்டில் சேர்க்க, ஐஸ்வர்யாவை பரிசீலிக்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், அவரது தந்தை மனு தாக்கல் செய்தார்.

அரசு தரப்பில், கூடுதல் அட்வகேட் ஜெனரல் மணிசங்கர், ''ஐஸ்வர்யாவின் சொந்த மாநிலம், தமிழகம் என்பதற்கான சான்றிதழ் தாக்கல் செய்யப்படவில்லை. எனவே, அவரது கோரிக்கையை ஏற்க முடியாது,'' என்றார்.

மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் சி.ஏ.திவாகர் ஆஜராகி, ''ஆவணங்களை தாக்கல் செய்யாததால், அவரது கோரிக்கை தவறு என கூற முடியாது; இதே நீதிமன்றம், ஆவணங்களை வழங்காத மாணவனை, கவுன்சிலிங்கில் கலந்து கொள்ள அனுமதித்துள்ளது,'' என்றார்.

மனுவை விசாரித்த, நீதிபதி வைத்தியநாதன் பிறப்பித்த உத்தரவு:மேற்கு வங்கத்தில், பள்ளி படிப்பை முடித்துள்ளார். மருத்துவ படிப்புக்கான விளக்க குறிப்பேட்டில் குறிப்பிட்டுள்ள ஆவணங்களை சமர்பிக்கவில்லை.சொந்த மாநிலம், தமிழகம் என, விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருந்தாலும், அதற்கு ஆதாரமாக ஆவணங்களை சமர்பிக்கவில்லை.

அரசு வேலைக்காக, தொழில் செய்வதற்காக, வணிகத்துக்காக, வேறு எந்தப் பகுதியில் இருந்தாலும், சொந்த மாநிலத்தில் உள்ள நிரந்தர முகவரியை, ஒருவர் இழந்து விட மாட்டார்.இந்த வழக்கின் தன்மை, சூழ்நிலையை பார்க்கும்போது, மனுவை நிராகரிக்க வேண்டும் என்றாலும், பொதுப் பிரிவுக்கான கவுன்சிலிங்கில் கலந்து கொள்ள, மனுதாரரை அனுமதிக்கும்படி, இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.

இடஒதுக்கீட்டுக்கான பிரிவில் பரிசீலிக்க வேண்டும் என, மனுதாரர் தரப்பில் வற்புறுத்தினால், அது நிராகரிக்கப்படக் கூடியது. விசாரணை, வரும், ௩௦ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது. இதற்கிடையில், மருத்துவ கல்விக்கான தேர்வுக்குழு, பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024