Monday, July 9, 2018

ஏழைகள் பசியை போக்க மும்பையில், 'ரொட்டி பேங்க்'

Added : ஜூலை 09, 2018 01:56



மும்பை : ஏழைகளின் பசியை போக்கும் நோக்கில், மஹாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த, ஓய்வு பெற்ற, டி.ஜி.பி., சிவானந்தன், 'ரொட்டி பேங்க்' எனப்படும், உணவு வங்கியை, மும்பையில் துவங்கி உள்ளார்.

நாட்டில், ஒருவேளை கூட உணவு கிடைக்காமல் பலர் கஷ்டப்படுகின்றனர். மேலும், சிலர் உணவின் அருமை தெரியாமல் வீணடிக்கின்றனர். இந்நிலையில், உணவில்லாமல் தவிப்போரின் பசியை போக்கும் நோக்கில், மஹாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற, டி.ஜி.பி., சிவானந்தன், ரொட்டி பேங்க் எனப்படும், உணவு வங்கியை துவங்கி உள்ளார்.

இவர், பிரபல உணவகத்துடன் இணைந்து, 2017ல் துவங்கிய இந்த உணவு வங்கி, தற்போது பலரது பசியை போக்கி வருகிறது. மும்பையில் உள்ள உணவகங்கள், உணவு விடுதிகளில், தினந்தோறும் மீதமாகும் உணவுப் பொருட்களை சேகரித்து, பசியால் வாடுபவர்களுக்கு பகிர்ந்தளிக்கும் சேவையை, குழுவாக செய்து வருகின்றனர்.

ரொட்டி, அரிசி, சாம்பார் மற்றும் காய்கறி வகைகள் கெட்டுப் போவதை தடுக்கும் விதமாக, அவை சேகரிக்கப்பட்ட, 60 - 90 நிமிடங்களுக்குள், நடைபாதை வாசிகளுக்கு வழங்கப்படுகின்றன. மேலும், ஜி.பி.ஆர்.எஸ்., கருவி பொருத்தப்பட்ட இரு வேன்கள் மூலமும், உணவு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இது குறித்து, ஓய்வு பெற்ற, டி.ஜி.பி., சிவானந்தன் கூறியதாவது: நாட்டில், 20 கோடி ஏழைகள் பட்டினியாக உறங்குகின்றனர். பல கோடி டன் உணவு வீணாகிறது. உணவை வீணடிப்பவர்களுக்கும், உணவு தேவைப்படுபவர்களுக்கும் இடையே இணைப்பை உருவாக்கிய, சென்னையைச் சேர்ந்த, 'நோ புட் வேஸ்ட்' திட்டத்தை பார்த்த பின், உணவு வங்கி துவங்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. இதையடுத்து, ரொட்டி பேங்க் எனப்படும் உணவு வங்கி துவங்கப்பட்டது, தற்போது, மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அவர்களாகவே முன்வந்து, உணவை வழங்குகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024