Monday, July 9, 2018

பள்ளி மாணவர்களுக்காக பஸ் வாங்கி ஓட்டும் ஆசிரியர்

Added : ஜூலை 09, 2018 05:26



பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் அரசு பள்ளி மாணவர்களை பள்ளிக்கு அழைத்து வருவதற்காக தனது சொந்த செலவில் பஸ் வாங்கி, மாணவர்களை ஏற்றிக்கொண்டு தானே ஓட்டிக்கொண்டு பள்ளிக்கு வருகிறார் ஆசிரியர்.உடுப்பி மாவட்டம், பராலி கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் ராஜாராம். இவர் கணிதம், அறிவியல் பாடங்களையும்நடத்துகிறார்.இந்த பள்ளிக்கு வரும் கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் வருவதற்கு போதுமான பஸ் வசதி இல்லை என்பதால், ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்தது. ஏறக்குறைய ஒவ்வொரு கிராமத்திலும் இருந்து இந்த பள்ளிக்கு வந்து மாணவர்கள் படிக்க சராசரியாக 5 முதல் 10 கி.மீ., வரை பயணிக்க வேண்டும். ஆனால், சாலை வசதி இல்லாததால், பஸ் போக்குவரத்தும் முடக்கப்பட்டது.இதனால், பாதுகாப்பின்றி பள்ளிக்கு அனுப்ப முடியாது எனக்கூறிப் பெற்றோர் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புவதை நிறுத்தத் தொடங்கினர். இதனால் மாணவர்கள் எண்ணிக்கை 60 ஆக குறைந்தது. பஸ் வசதி செய்துகொடுத்தால் மாணவர்கள் வருவார்கள் என ராஜாராம் எண்ணினார்.இந்தப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் இருவர் பெங்களூருவில் பெரிய நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகின்றனர். அவர்களிடமும், முன்னாள் மாணவர்கள் சங்கத்திடமும், தன்னிடம் இருக்கும் பணத்தையும் முதலீடாக வைத்து பள்ளிக்கு மினி பஸ் ஒன்றை ராஜாராம் வாங்கினார்.தானே ஓட்டுனர் உரிமத்தைப் பெற்று, மாணவர்களைக் கிராமங்களில் இருந்து அழைத்துவரும் ஓட்டுனர் பொறுப்பையும் ராஜாராம் ஏற்றார்.பள்ளிக்கு அருகே வசிக்கும் ராஜாராம் காலை 8:00 மணிக்குப் பஸ்சை எடுத்துக்கொண்டு மாணவர்களை அழைக்கச் செல்வார். 9:30 மணிக்குள்ளாக 4 முறை சென்று மாணவர்களைக் கிராமங்களில் இருந்து அழைத்து வந்து விடுகிறார்.பள்ளிக்குச் செல்ல இலவசமாகப் பஸ் வசதி கிடைத்தவுடன் பெற்றோர் குழந்தைகளை நம்பிக்கையாகப் பள்ளிக்கு அனுப்ப முன்வந்தனர். தற்போது மாணவர்கள் எண்ணிக்கை 90 ஆக உயர்ந்துள்ளது.இது குறித்து ஆசிரியர் ராஜாராம் கூறியதாவது:முன்னாள் மாணவர்கள் சங்கத்தையும், குறிப்பாக விஜய் ஹெக்டே, கணேஷ் ஷெட்டி ஆகிய இரு மாணவர்களிடம் உதவிகேட்டேன். அவர்கள் அளித்த ஆலோசனையின் பேரில் பள்ளிக்கு மாணவர்களை அழைத்துவர புதிய மினி பஸ் வாங்கினோம். பஸ்சை பராமரிப்பது, ஓட்டுவதற்கு ஆள் தேவைப்பட்டது.நான் வாங்கும் சம்பளத்தில் ஓட்டுனர் வைத்துக்கொள்ள முடியாது என்பதால், நானே ஓட்டுனராக மாறினேன். மாணவர்களைப் பாதுகாப்பாக வீட்டில் இருந்து அழைத்து வருவதும், திரும்பக் கொண்டுவந்து சேர்ப்பதையும் வழக்கமாக்கினேன்.பஸ் வசதி இல்லாததால், பள்ளியில் இருந்து ஆண்டுக்கு 10 மாணவர்கள் வரை நின்றனர். இதனால், 60 ஆக மாணவர்கள் எண்ணிக்கை குறைந்தது. ஆனால், பஸ் வசதி கிடைத்தவுடன் மாணவர்கள் பள்ளிக்கு வரத் தொடங்கி 90-க்கு மேல் அதிகரித்தது. தனியார் பள்ளிக்கு இணையாக அரசுப்பள்ளிகள் போட்டிபோடுவது என்பது கடினமானதுதான். ஆனால், 60 மாணவர்களுக்கும் குறைவாகச் செல்லும் போது தலைமை ஆசிரியர் பதவி பறிக்கப்படும். ஆதலால், இந்த முடிவு எடுத்தோம்.ஏறக்குறையக் காலையில் 30 கி.மீ., மாலையில் 30.கி.மீ., பயணிக்கிறேன். பெரும்பாலான மாணவர்கள் சாலை வசதி இல்லாத கிராமத்தில்தான் வசிக்கிறார்கள்.பஸ்சுக்கான டீசல், பராமரிப்பு செலவு அனைத்தையும் என்னுடைய சம்பளத்தில் இருந்துதான் செலவு செய்கிறேன். முன்னாள் மாணவர்கள் சங்கமும் உதவி செய்வதாக உறுதியளித்துள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.தலைமை ஆசிரியை குஷ்மா கூறுகையில், “இந்த பள்ளியில் மொத்தம் 4 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். இதில் ஆசிரியர் ராஜா ராம் அர்ப்பணிப்புடன் பணியாற்றக்கூடியவர். அறிவியல், கணிதம் பாடங்களையும் நடத்தி வருகிறார். இரண்டா-வது ஆண்டாக ஆசிரியராகவும், பஸ் ஓட்டுனராகவும்

ராஜாராம் செயல்பட்டு வருகிறார்,” என்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024