Thursday, July 12, 2018

பஸ் முன்பதிவுக்கு புதிய, 'மொபைல் ஆப்'

Added : ஜூலை 11, 2018 20:20

சென்னை: அரசு தொலைதுார பஸ்களில் டிக்கெட் முன்பதிவு செய்ய, விரைவில், 'மொபைல் ஆப்' அறிமுகம் செய்யப்பட உள்ளது.தமிழக அரசு பஸ்களில், 70 சதவீதம் காலாவதி பஸ்களாக இருந்த நிலையில், தற்போது, தனியார் நிறுவன பஸ்களுக்கு சவால்விடும் வகையில், நவீன வசதிகளுடன் புதிய பஸ்கள் வந்துள்ளன. படுக்கை வசதி, கழிப்பறை வசதி பஸ்கள் மட்டுமின்றி, பயணியருக்கு, சிற்றுண்டி, உணவு தரும், 'கிளாசிக்கல்' பஸ்களும் இயக்கப்படுகின்றன.இதற்கு, பயணியர் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால், அரசு பஸ்களில் பயணிக்க முன்பதிவு செய்வோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.அரசு பஸ்களில் முன்பதிவு செய்ய, 'ஆன்லைன்' வசதி செய்யப்பட்டுள்ள போதிலும், பெரும்பாலான பயணியர், முன்பதிவு மையங்களை நாடுகின்றனர். பண்டிகை காலங்களில், முன்பதிவு மையங்களில் நீண்ட வரிசையில் பயணியர் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பயணியர் எளிதாக டிக்கெட் முன்பதிவு செய்யும் வகையில், புதிய, 'மொபைல் ஆப்' அறிமுகம் செய்யப்பட உள்ளது.இதுகுறித்து, அரசு விரைவு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறுகையில், 'வெளியூர் செல்லும் பயணியர் எளிதாக டிக்கெட் முன்பதிவு செய்யும் வகையில், ஆன்லைன் முன்பதிவு வசதி மேம்படுத்தப்பட உள்ளது. விரைவில், மொபைல் ஆப் அறிமுகம் செய்யப்படும்' என்றனர்.
நவீன பஸ்கள் எங்கே? : தனியார் நிறுவன பஸ்களை மிஞ்சும் வகையில், அரசு போக்குவரத்து கழகத்தில், அதிநவீன பஸ்கள் இயக்கத்திற்கு வந்துள்ளன. இந்த பஸ்களின் இயக்கம் குறித்து, போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது: சென்னையில் இருந்து, மதுரை, போடி, சேலம், கோபி, ஈரோடு, கீழக்கரை, துாத்துக்குடி ஆகிய இடங்களுக்கு, தலா, படுக்கை வசதியுடைய, இரண்டு 'ஏசி' பஸ்கள் இயக்கப்படுகின்றன கோவையில் இருந்து, பெங்களூருக்கு, இரண்டு படுக்கை வசதி பஸ்களும், சென்னையில் இருந்து, மதுரைக்கு, சாதாரண படுக்கை வசதியுடைய பஸ்களும் இயக்கப்படுகின்றன சென்னையில் இருந்து, கரூருக்கு, 'ஏசி' படுக்கை வசதி மற்றும் இருக்கை வசதியுடைய இரண்டு பஸ்கள், சென்னையில் இருந்து, ஈரோடு மற்றும் திண்டுக்கல்லுக்கு, தலா இரண்டு, அல்ட்ரா டீலக்ஸ் பஸ்கள் இயக்கப்படுகின்றன சென்னையில் இருந்து, திண்டுக்கல்லுக்கு, 'கிளாசிக்' பஸ் இயக்கப்படுகிறது. சென்னையில் இருந்து, பெங்களூருக்கு, படுக்கை வசதியுடைய இரண்டு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இந்த பஸ்களுக்கு, மக்களிடம் உள்ள வரவேற்பு குறித்து, இரண்டு வாரங்களில் ஆய்வு செய்யப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 20.09.2024