Sunday, July 15, 2018

ஹஜ் யாத்திரை முதல் குழு பயணம்

Added : ஜூலை 15, 2018 03:54

புதுடில்லி:ஹஜ் யாத்திரை செல்லும் முதல் குழு, டில்லி விமான நிலையத்தில் இருந்து, நேற்று புறப்பட்டது. மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர், முக்தர் அப்பாஸ் நக்வி, கொடி அசைத்து, பயணத்தை துவங்கி வைத்தார்.
இஸ்லாமியர்களின் புனிதப் பயணமான ஹஜ் யாத்திரைக்கு, மத்திய அரசு ஆண்டு தோறும், ஏற்பாடு செய்து வருகிறது. இந்த ஆண்டுக்கான யாத்திரை நேற்று துவங்கியது.டில்லி விமான நிலையத்தில் இருந்து, 1,200 பயணியர் அடங்கிய முதல் குழு, மூன்று விமானங்களில், வளைகுடா நாடான, சவுதி அரேபியாவுக்கு புறப்பட்டது. இந்த யாத்திரையை, மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர், முக்தர் அப்பாஸ் நக்வி, கொடி அசைத்து துவங்கி வைத்தார்.

மேலும், பீஹாரில் இருந்து, 450 பேர், அசாமில் இருந்து, 269 பேர், உ.பி.,யில் இருந்து, 900 பேர், ஜம்மு - காஷ்மீரில் இருந்து, 1,020 பேர், நேற்று ஹஜ் யாத்திரை புறப்பட்டனர்.இது குறித்து, மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி, செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்திய ஹஜ் கமிட்டி மற்றும் சவுதி அரேபிய துாதரகத்தின் ஒத்துழைப்புடன், இந்த ஆண்டுக்கான ஹஜ் யாத்திரை, சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.நாடு சுதந்திரம் அடைந்த பின், முதல் முறையாக, இந்த ஆண்டு தான், 1.75 லட்சம் பேர், ஹஜ் பயணம் செல்கின்றனர். இதில், 47 சதவீதத்துக்கும் அதிகமான பெண்கள் உள்ளனர்; 1,300 பெண்கள், ஆண் துணையின்றி தனியாக செல்கின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 20.09.2024