Monday, July 23, 2018

சேலம், தர்மபுரியில் நில அதிர்வு

Added : ஜூலை 22, 2018 23:43



சேலம்: சேலம் மாவட்டத்தில் ஏற்பட்ட நில அதிர்வால், வீடுகளிலிருந்து பொதுமக்கள் வெளியே ஓடி வந்தனர். 3.3 ரிக்டர் அளவு மட்டும் பதிவானதால், பாதிப்பு எதுவுமில்லை.

சேலம் மாவட்டத்தில், நேற்று காலை, 7:40 மணியளவில், லேசான நில அதிர்வு ஏற்பட்டது. ஐந்து முதல் எட்டு வினாடிகள் வரை நீடித்த அதிர்வை, ஆங்காங்கே, உணர முடிந்தது.

பரபரப்பு : இதனால், வீட்டுக்குள் இருந்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, வெளியே ஓடிவந்தனர். அச்சத்துடன் கும்பலாக கூடி நின்று, நில அதிர்வு குறித்து பேசியதால், பரபரப்பு ஏற்பட்டது.தர்மபுரி மாவட்டத்திலும், சில பகுதிகளில், நேற்று நில அதிர்வு உணரப்பட்டது. நேற்று காலை, 7:47 மணிக்கு, மூன்று வினாடிகள், நில அதிர்வு ஏற்பட்டது.
சேலம் வானிலை ஆய்வாளர் மருதமுத்து கூறியதாவது:பூமி மேற்பரப்பிலிருந்து, 15 கி.மீ., ஆழத்தில், நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. சேலத்திலிருந்து, 12.11 கி.மீ., நாமக்கல், 42.35; ஈரோடு, 49.32; தர்மபுரி, 59.73; கரூரிலிருந்து, 66.35 கி.மீ., தொலைவில், நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.பூமி மேற்பரப்பு மகர ரேகை வடக்கே, 11.6 கோணம்; தீர்க்க ரேகையில் கிழக்கில், 78.1 கோணத்தில், அதிர்வு பதிவாகியுள்ளது.

கலெக்டர் அலுவலகத்தில், நில அதிர்வை கணக்கிடும், 'சீஸ்மோ கிராப்' கருவி ஒன்றரை மாதங்களுக்கு முன் பழுதாகி செயலிழந்துவிட்டது.இதுகுறித்து, டில்லியிலுள்ள தலைமையகத்துக்கு, ஜூன், 12ல் எழுத்துப்பூர்வ புகார் செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
3.3 ரிக்டர் : கலெக்டர் ரோகிணி வெளியிட்டுள்ள அறிக்கை:காலை, 7:47 மணிக்கு, 3.3 ரிக்டர் அளவில், நில அதிர்வு பதிவாகியுள்ளது. மாவட்டத்தில், எங்கும் பாதிப்பில்லை. அதிர்வு உணரப்படும் நேரங்களில், ஜன்னல், கண்ணாடி, கதவுகள், அலமாரிகள் பக்கத்தில் நிற்கக்கூடாது.குறிப்பாக, மின்துாக்கியை பயன்படுத்தக்கூடாது. பாதுகாப்பான வெட்டவெளி பகுதிக்கு வந்துவிட வேண்டும். பாதிப்பிருந்தால், 1077 கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தகவல் தரலாம்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 20.09.2024