Wednesday, July 18, 2018

`கூல்டிரிங்க்ஸ் குடித்தேன்... மயங்கிவிட்டேன்’ - ரஷ்ய இளம்பெண் கண்ணீர் வாக்குமூலம்

எஸ்.மகேஷ்

கா.முரளி




`கூல்டிரிங்க்ஸ் குடித்தேன், மயங்கிவிட்டேன்' என்று திருவண்ணாமலை மாவட்ட நீதிபதி மகிழேந்தியிடம் கண்ணீர் மல்க ரஷ்ய இளம்பெண் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

திருவண்ணாமலை, செங்கம் காலனி, கஸ்தூரி நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ரத்தக் காயங்களுடன் ரஷ்ய நாட்டைச் சேர்ந்த இளம்பெண் மயங்கிக் கிடந்தார். தற்போது அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. நேற்று அவருக்கு சுய நினைவு திரும்பியது. உடனடியாகப் பெண் போலீஸார் அவரிடம் விசாரித்தனர். அப்போது அவர், கூட்டாகச் சிலர் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் குறிப்பிட்டார். அவர்கள் யார் என்று போலீஸார் விசாரித்தனர். அப்போதுதான் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது ரஷ்ய இளம்பெண்ணிடம் 5 பேர் அத்துமீறிய தகவல் போலீஸாருக்குக் கிடைத்தது. அவர்களைக் கைது செய்து தனித் தனியாகப் போலீஸார் விசாரித்தனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ரஷ்ய பெண்ணுக்குக் கூட்டாகச் சிலர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். அதுதொடர்பாக விசாரித்தபோது ரஷ்ய இளம்பெண் தங்கியிருந்த அப்பார்ட்மென்ட் விடுதியில் வேலைபார்க்கும் ஊழியர்கள் மீது எங்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டது. சம்பவத்தன்று அடுக்குமாடி குடியிருப்பில் வேலைபார்க்கும் ஊழியர் மணிகண்டன் என்பவருக்குப் பிறந்தநாள். அதை நண்பர்களுடன் சேர்ந்து அவர் கொண்டாடியுள்ளார். அந்த விழாவில் நீலகண்டன், பாரதி, சிவா, வெங்கட் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். போதை தலைக்கெறியதும் அவர்களின் மனம் மாறியுள்ளது.



ரஷ்ய இளம்பெண், தனியாக இருப்பதையறிந்த 5 பேரும் மாற்றுச் சாவி மூலம் அறையைத் திறந்துள்ளனர். பிறகு, ரஷ்ய இளம்பெண்ணிடம் பிறந்தநாள் குறித்த தகவலைத் தெரிவித்துள்ளனர். அப்போது, மயக்க மருந்து கலந்த கூல்டிரிங்ஸை இளம்பெண்ணுக்குக் கொடுத்துள்ளனர். அதைக் குடித்தவுடன் அவர் மயங்கிவிட்டார். அதன் பிறகுதான் அவர்கள் இளம்பெண்ணிடம் தவறாக நடந்துள்ளனர். மயக்கத்திலேயே ரஷ்ய இளம்பெண் இருந்ததால் அவர்களுக்கு பயம் ஏற்பட்டுள்ளது. உடனே, மருத்துவமனையில் அவரைச் சேர்த்துள்ளனர். இந்தத் தகவல் கிடைத்ததும் நீலகண்டன் அவரின் தம்பி பாரதி, மணிகண்டன், சிவா, வெங்கட் ஆகிய 5 பேரை கைதுசெய்துள்ளோம். அவர்களிடம் விசாரணை நடத்திவருகிறோம்" என்றனர்.

இதற்கிடையில் சிகிச்சை பெற்றுவரும் ரஷ்ய பெண்ணை, திருவண்ணாமலை மாவட்ட நீதிபதி மகிழேந்தி இன்று சந்தித்தார். அவரிடம், சம்பவத்தன்று இரவில் என்ன நடந்தது என்பதை அந்தப் பெண் தெரிவித்துள்ளார். பிறகு, நிருபர்களைச் சந்தித்த நீதிபதி மகிழேந்தி, ``இந்தச் சம்பவம் தமிழகத்துக்குத் தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டு கடுமையான தண்டனை வழங்கப்படும். விசா காலம் முடிந்து திருவண்ணாமலையில் தங்கியுள்ளவர்கள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அவர்களைச் சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும். திருவண்ணாமலையில் போதைப் பொருள்கள் புழக்கம் அதிகமாக உள்ளது. அதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

திருவண்ணாமலையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட ரஷ்ய பெண்ணிடம் தூதரக அதிகாரி விசாரணை நடத்தி வருகிறார். ரஷ்ய தூதரக அதிகாரி டேவிஸ், மருத்துவமனைக்குச் சென்று பெண்ணிடம் விசாரணை நடத்தி வருகிறார். இதனிடையே, ரஷ்ய பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக 15 பேரிடம் விசாரணை நடைபெற்று வருவதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பொன்னி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 14,11,2024