Saturday, July 28, 2018

ஐ.ஆர்.சி.டி.சி., ஊழல் வழக்கு லாலு குடும்பத்தினருக்கு, 'சம்மன்'

Added : ஜூலை 27, 2018 20:39

புதுடில்லி, : ஐ.ஆர்.சி.டி.சி., எனப்படும், இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் தொடர்பான வழக்கில், பீஹார் முன்னாள் முதல்வர், லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு, 'சம்மன்' அனுப்ப வேண்டுமா என்பது குறித்து, 30ல், டில்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க உள்ளது.

புகார்

ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர், லாலு பிரசாத் யாதவ், ரயில்வே அமைச்சராக இருந்தபோது, ஐ.ஆர்.சி.டி.சி.,யின் இரண்டு ஓட்டல்களை நடத்துவதற்கான ஒப்பந்தத்தை, தனியார் நிறுவனத்துக்கு அளித்ததில், முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்தது.இதுகுறித்து வழக்கு பதிவு செய்த, சி.பி.ஐ., பாட்னா, ராஞ்சி, புவனேஸ்வர், குருகிராம் உள்ளிட்ட நகரங்களில், 12 இடங்களில் அதிரடி சோதனை நடத்தியது.இந்த வழக்கு தொடர்பாக, ஏப்., 16ல், சி.பி.ஐ., குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில், லாலு மற்றும் அவர் குடும்பத்தினருக்கு எதிரான சாட்சியங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.இந்த வழக்கு, டில்லி சிறப்பு நீதிமன்றத்தில், நீதிபதி அரவிந்த் குமார் முன்னிலையில், நேற்று விசாரணைக்கு வந்தது.

குற்றச்சாட்டு

அப்போது, லாலுவின் குடும்பத்தினர் உட்பட, குற்றஞ்சாட்டப்பட்டோருக்கு எதிராக போதிய சாட்சியங்கள் இருப்பதாக, சி.பி.ஐ., வழக்கறிஞர் தெரிவித்தார்.இதையடுத்து, 'லாலு, அவரது மனைவி ராப்ரி தேவி, மகன் தேஜஸ்வி யாதவ் ஆகியோரை, குற்றஞ்சாட்டப்பட்டோராக கருதி, 'சம்மன்' அனுப்புவது குறித்து, 30ல் அறிவிக்கப்படும்' என, நீதிபதி கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 28.11.2024