கல்வி வளாகத்தில் அத்துமீறினால்... - உயர்கல்வித் துறை கொண்டுவரும் கடுமையான அரசாணை
ஞா. சக்திவேல் முருகன்உதவிப் பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தைத் தொடர்ந்து, கல்வி நிறுவனங்களில் அத்துமீறுபவர்களுக்குத் தகுந்த பாடம் கற்பிக்கும் வகையில் புதிய விதிமுறைகளை வகுத்திருக்கிறது உயர்கல்வித் துறை.
உதவிப் பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தைத் தொடர்ந்து, கல்வி நிறுவனங்களில் அத்துமீறுபவர்களுக்குத் தகுந்த பாடம் கற்பிக்கும் வகையில், புதிய விதிமுறைகளை வகுத்திருக்கிறது உயர்கல்வித் துறை.
கடந்த ஏப்ரல் மாதத்தில், விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரியின் உதவிப் பேராசிரியை நிர்மலா தேவி, இளநிலைப் பட்டப்படிப்பு மாணவிகளிடம் மதுரை பல்கலைக்கழகப் பேராசிரியர்களுக்காகப் பரிந்துபேசிய விவகாரம், உயர்கல்வி நிறுவனங்களை அதிரவைத்தது. இதையடுத்து, கல்வித்துறையில் இருப்பவர்கள் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி மாணவர்கள், உடன் பணியாற்றும் பேராசிரியர்கள், பேராசிரியைகள் அல்லது இதர பணியாளர்களிடம் அத்துமீறினால், தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு அறிவித்திருந்தது.
அத்துமீறுபவர்கள்மீது தகுந்த நடவடிக்கை எடுப்பதற்கான அரசாணையை, தமிழக உயர்கல்வித் துறை தற்போது வெளியிட்டுள்ளது. இதில், `கல்வி வளாகங்களில் எந்தவிதமான பயமும் இல்லாமல் செயல்படவேண்டியது அவசியம். கல்வி வளாகத்தில் மற்றவர்களுக்குரிய மதிப்பும் மரியாதையும் வழங்க வேண்டும். எந்த வகையான அத்துமீறலும் இருக்கக் கூடாது. கல்வி வளாகங்களில் பாதிக்கப்படுபவர்களுக்கு உதவவும், பாதிப்பை ஏற்படுத்துபவர்களுக்கு சட்டப்படியான தண்டனை வழங்கவும் உரிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புதிய வரைமுறையை தமிழகப் பல்கலைக்கழகங்கள், பல்கலைக்கழகத்தின் இணைப்புக் கல்லூரிகள், சுயநிதிக் கல்லூரிகள், அனைத்து தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள், தன்னாட்சிக் கல்வி நிறுவனங்கள், ஆராய்ச்சி மையங்கள், பயிற்சி மையங்கள், படிப்பு மையங்கள், தொலைதூரக் கல்வி நிறுவனங்கள் என அனைத்தும் கடைப்பிடிக்க வேண்டும்.
அத்துமீறல்கள் என்னென்ன?
ஏற்றுக்கொள்ள முடியாத அல்லது கண்ணியத்துக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் தவறான நடத்தைகள் அனைத்தையுமே அத்துமீறல்களாகவே எடுத்துக்கொள்ளப்படும். தரம் தாழ்த்தல், சிறுமைப்படுத்தல், அவமானப்படுத்தல், ஒருவரைத் தாக்கும் வகையில் தொடர்ந்து கருத்து தெரிவித்தல் போன்றவையும் அத்துமீறல்களாகவே கருதப்படும். இவை தவிர மிரட்டல், வெளிப்படையான மற்றும் மறைமுக அச்சுறுத்தல்கள், உடல்ரீதியான துஷ்பிரயோகம், கடிதம், மின்னணு மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் ஆட்சேபிக்கக்கூடிய வகையில் கருத்துகளைப் பரப்புதல் போன்ற செயல்களும் கண்டிக்கத்தவை.
உயர் அதிகாரிகளுக்கு அல்லது உயர் நிறுவனங்களுக்கு அனுப்பப்படும் கடிதங்களை அனுப்பத் தாமதப்படுத்துவது, அனுப்ப மறுப்பது, பணம் அல்லது இதர வகையான அன்பளிப்புகளை எதிர்பார்ப்பது, ஆராய்ச்சி (எம்.ஃபில்/பி.ஹெச்டி) படிப்புக்கு மாணவர்கள் பதிவுசெய்யும்போது ஆராய்ச்சி வழிகாட்டலுக்கும், தேர்வு மற்றும் ஆராய்ச்சி முடிவுகளை மதிப்பிடுதலுக்கும் பரிசுகள் மற்றும் வெகுமதிகளைப் பெறுவது, வாய்மொழித் தேர்வுக்காக வருபவருக்கு செலவுசெய்யச் சொல்வது, பயணச் செலவுகளை ஏற்றுக்கொள்ளச் சொல்வது, கல்விசாராத பணிகளைச் செய்யச்சொல்வது, பணிநேரம் அல்லாத சமயத்தில் வேலைசெய்யச் சொல்வது, விருப்பமில்லாமல் வேலைசெய்யச் சொல்வது, மாணவர்கள், இதர ஆசிரியர்கள், குறிப்பாகப் பெண் ஆசிரியர்கள், மாணவிகளைக் கட்டாயத்தின்பேரில் களப்பணி மற்றும் இதர விழாவுக்கு அழைத்துச்செல்வது போன்றவையுமே அத்துமீறல்கள்தான்.
மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், திட்டப்பணியாளர்கள், பணியாளர்களுக்கு முறையான வழிமுறைகளைக் கடைப்பிடிக்காமல், ஒருவருக்கு சாதகமான வகையில் நடந்துகொள்ளுதலும், எதிர்காலத்தில் வளர்ச்சிக்குத் தடங்கல் ஏற்படுத்தும் வகையில் செயல்படுவதும், கௌரவத்தைப் பாதிக்கும் வகையில் பாலினம், சாதி போன்றவற்றைக் குறிப்பிடுவதும் தண்டனைக்குரியதே!
எப்படி புகார் தெரிவிப்பது?
பாதிக்கப்படுபவர்கள், எழுத்துவடிவில் குற்றச்சாட்டைப் பதிவுசெய்ய வேண்டும். குற்றச்சாட்டுக்கான ஆதாரத்தையும் இணைக்க வேண்டும். இரண்டு மாதத்துக்குள் குற்றச்சாட்டைப் பதிவுசெய்ய வேண்டும். குற்றச்சாட்டைப் பதிவுசெய்தவுடன், அதற்கான ஒப்புதலை இரண்டு வாரத்துக்குள் சம்பந்தப்பட்டவரிடம் வழங்க வேண்டும். விசாரணையை ரகசியமாக நடத்தி, விசாரணை அறிக்கையைச் சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகத் துணைவேந்தர் அல்லது இயக்குநர் அல்லது கல்லூரி முதல்வரிடம் வழங்க வேண்டும். விசாரணை அறிக்கையின்மீது இரண்டு மாதங்களுக்குள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஆறு மாதங்களுக்குள், குற்றச்சாட்டின்மீது நடவடிக்கை எடுத்து முடித்திருக்க வேண்டும்' என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
யாரிடம் தெரிவிப்பது?
`அத்துமீறல்களை விசாரிக்க, ஒவ்வொரு கல்வி நிறுவனத்திலும் குழு அமைக்க வேண்டும். இந்தக் குழுவில், மூத்த பேராசிரியர் ஒருவர் குழுத் தலைவராகவும், மூத்த பேராசிரியர், இணை அல்லது துணை பேராசிரியர் ஒருவர், பேராசிரியை ஒருவரும் உறுப்பினர்களாக இருப்பர். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி வகுப்பைச் சார்ந்தவர்களில் ஒருவர் இந்தக் குழுவில் கண்காணிப்பாளராகச் செயல்பட வேண்டும்.
என்ன நடவடிக்கை எடுக்கப்படும்?
குற்றச்சாட்டின்மீது நடவடிக்கையாக, அத்துமீறியவர்களை எச்சரிக்கைசெய்யவும், எம்.ஃபில் அல்லது பி.ஹெச்டி மாணவர்கள் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்களை மற்ற பேராசிரியரிடம் வழிகாட்டுதல் பொறுப்பை ஒப்படைக்கவும், பேராசிரியரிடமிருந்து வழிகாட்டுதல் பொறுப்பைத் திரும்பப்பெறவும், சம்பள உயர்வை நிறுத்தம்செய்யவும், தலைமைப் பொறுப்பில் இருந்தால் அந்தப் பொறுப்பிலிருந்து விடுவிக்கவும், அத்துமீறலின் அளவைப் பொறுத்து வேலையிலிருந்து வெளியேற்றவும், தற்காலிகமாக நீக்கவும் பரிந்துரைசெய்யலாம். ஒருவேளை முகாந்திரம் இல்லாமல் குற்றம் சாட்டினால், அவர்கள்மீது விசாரணைக்குப் பிறகு நடவடிக்கை எடுக்கப்படும்' என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயர்கல்வித் துறையின் அரசாணை ஏட்டில் மட்டும் இருக்காமல், அனைத்து வளாகங்களிலும் செயல்படுத்திட வேண்டும்!
No comments:
Post a Comment