Friday, July 6, 2018

தினமும் நெல்லிக்காய்ச் சாறு குடிக்கலாமா... மருத்துவம் சொல்வது என்ன? #AmlaJuiceAlert


மு.பிரசன்ன வெங்கடேஷ்


ஜெ.நிவேதா

தினமும் நெல்லிக்காய் சாறு குடிப்பது நல்லதா?




`ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் சாப்பிட வேண்டும்' என ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. இந்த `ஒரு நாளைக்கு ஒன்று' பழக்கம் நெல்லிக்காய்க்கும் பொருந்தும். தினம் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டால் `மலச்சிக்கல் நீங்கும், செரிமானம் சீராகும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்'... ஆனால், எந்த உணவாக, காயாக, பழமாக இருந்தாலும் குறிப்பிட்ட அளவுக்கு மீறி உட்கொள்ளக் கூடாது. `தினமும் நெல்லிக்காய்ச் சாறு அருந்துவது நல்லதல்ல' என்கிறார்கள் மருத்துவர்கள். இது குறித்து ஊட்டச்சத்து நிபுணர் அனிதா பாலமுரளியிடம் கேட்டோம்...



``அளவுக்கு மீறி எதையுமே சாப்பிடக் கூடாது. நெல்லிக்காய்ச் சாறும் அப்படித்தான். இப்படிக் குறிப்பிட்டு சொல்வதற்குக் காரணம் இருக்கிறது. வெறும் நெல்லிக்காய் என்றால், ஒன்று அல்லது இரண்டு சாப்பிடுவோம். ஆனால், அதை ஜூஸாக்க வேண்டுமென்றால், நான்கு முதல் ஐந்து நெல்லிக்காய்களாவது தேவைப்படும். நான்கு, ஐந்து நெல்லிக்காயை ஒரே நேரத்தில் உட்கொள்வது, அதையும் தினமும் ஜூஸாக அருந்துவது பிரச்னைகளை ஏற்படுத்துவதில் ஆச்சர்யமில்லை. அப்படி என்னென்ன பிரச்னைகள் ஏற்படும்? பார்க்கலாம்...

* நெல்லிக்காய் வைட்டமின் சி சத்து நிறைந்தது. பொதுவாகவே, வைட்டமின் சி அமிலத்தன்மையை அதிகப்படுத்தும் என்பதால், அதிகளவு உட்கொள்ளும்போது நெஞ்செரிச்சல் ஏற்படும். அசிடிட்டி பிரச்னை இருப்பவர்களுக்கு, இது மேலும் தொந்தரவை ஏற்படுத்தும். கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகள் இதை தவிர்ப்பதே நல்லது.
  * இதிலிருக்கும் நார்ச்சத்து, மலச்சிக்கல் மற்றும் குடல் பிரச்னைகளுக்குச் சிறந்த தீர்வாக இருக்கும். என்றாலும், அளவுக்கதிகமாக உட்கொண்டால் மலம் கடினமாகி பிரச்னையை ஏற்படும். அதிலும், தண்ணீரைக் குறைவாகக் குடிப்பவர்களுக்குப் பிரச்னையின் தீவிரம் அதிகமாக இருக்கும்.

* சிறுநீரகக் கோளாறு உள்ளவர்களும், ரத்த அழுத்தப் பிரச்னை உள்ளவர்களும் நெல்லிக்காயை ஊறுகாயாகச் சாப்பிடக் கூடாது. ஏனென்றால், அதில் பதப்படுத்துவதற்கான உப்பு பயன்படுத்தப்பட்டிருக்கும். இந்த உப்பிலிருக்கும் சோடியம், பாதிப்பைத் தீவிரப்படுத்தும்.

* இதில் டையூரிடிக் (Diuretic) தன்மை இருக்கிறது. இது, தோலிலுள்ள ஈரத் தன்மையை வற்றச் செய்யும் தன்மைகொண்டது. அதிகளவு நெல்லிக்காயை ஜூஸாக அருந்தினால், உடல் வறட்சி ஏற்படலாம். சிலருக்கு இதனால் உடல் எடையும் குறையலாம்.



* நெல்லிக்கு உடல் சூட்டைக் குறைத்து, குளிர்ச்சி ஏற்படுத்தும் ஆற்றல் உண்டு. இதை, பழம் அல்லது சாறு என எப்படி உட்கொண்டாலும் குளிர்ச்சியால் ஏற்படும் நோய்கள் தீவிரமடையும்.

* நெல்லிகாய் அதிகமாகச் சாப்பிடுபவர்கள், அதிகளவு தண்ணீர் உட்கொள்ள வேண்டும். ஒருநாளைக்குக் குறைந்தது இரண்டு லிட்டர் தண்ணீராவது அருந்துவது நல்லது. இல்லையென்றால், சருமப் பிரச்னைகள், ஒவ்வாமை, முடி உதிர்வு, முதிர்ச்சியான தோற்றம் போன்ற பிரச்னைகள் ஏற்படலாம்.

* ஏதோ ஒரு நோய் பாதிப்புக்காக சிகிச்சை எடுத்து வருபவர்கள், நெல்லிக்காய் சாப்பிட்டால் அது எதிர்வினையை ஏற்படுத்தும். குறிப்பாக, இதயப் பிரச்னை இருப்பவர்கள், நெல்லிக்காயைத் தவிர்ப்பதுதான் சிறந்தது.



* நெல்லிக்காய், லேசான தலை சுற்றலை ஏற்படுத்தும் தன்மைகொண்டது. எனினும், உடல் சார்ந்த பிரச்னைகளை ஏற்படுத்தாது. தொடர்ச்சியாக தினமும் நெல்லிக்காய்ச் சாறு அருந்துபவர்களுக்குத் தலைசுற்றல் அல்லது மயக்கம் ஏற்படலாம். எப்போதாவது நெல்லிக்காய் சாப்பிட்டு அதனால் தலைசுற்றல் ஏற்பட்டால் பிரச்னையில்லை. ஆனால், தினமும் அருந்தி, இந்தப் பாதிப்புகள் ஏற்பட்டால், மருத்துவ ஆலோசனை பெற்று பிரச்னையை முதல்நிலையிலேயே சரிசெய்துவிட வேண்டும்.

ஆக, நெல்லிக்காயின் மூலம் உடலுக்குப் பல்வேறு நன்மைகள் கிடைக்குமென்றாலும், தொடர்ச்சியாக அதை அதிகமாகவோ, சாறாகவோ உட்கொள்ளக் கூடாது. எனவே, தொடர்ச்சியாக தினமும் நெல்லிச்சாறு அருந்துவதைத் தவிர்ப்பதே சிறந்தது’’ என்கிறார் அனிதா பாலமுரளி.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024