Wednesday, July 18, 2018

விகடன்

`பணத்தைத் திருப்பித்தர முடியாது.. இதிலேயே போங்க"... தனியார் பேருந்தின் பொறுப்பற்ற சர்வீஸ்!

 இரா.வாஞ்சிநாதன்

Vikatan

அவசரத்தில் பயணம் செய்பவர்கள், `பேருந்து உரிமம் பெற்றதா, அவர்களுக்கு மாற்றுப் பேருந்து உண்டா' என்பதைப் பார்க்க நேரமிருப்பதில்லை. அதிக காசை கொடுத்துவிட்டு இரவு நிம்மதியாகத் தூங்கலாம் என அத்தனை பேரும் தங்கள் உயிர்களை அடமானம் வைக்கிறார்கள்.

`தனியார் பேருந்தைப் பிடித்தால் போகவேண்டிய இடத்துக்கு நேரத்துக்குப் போகமுடியும்' என்பதால்தான் கட்டணம் அதிகமாக இருந்தாலும் தனியார் பேருந்துகளை பலரும் தேர்ந்தெடுக்கிறார்கள். பந்தயத்தில் ஓடும் குதிரைகள் போல ஓடிக்கொண்டிருக்கும் மக்கள் தங்கள் பயணங்களை ஓட்டுநர்கள் மீதும், அவசர நேரத்தில் சிக்கும் பேருந்துகளின் மீதும் நம்பிக்கை வைத்தே செல்கின்றனர். ஆனால், பல நேரங்களில் அவசரகதியில் நாம் தேர்வு செய்யும் பேருந்துகள் சொதப்பிய அனுபவம் நம்மில் பலருக்கும் இருக்கும். கடந்த ஞாயிறு அன்று காசைக் கொட்டிக்கொடுத்து தனியார் பேருந்து ஒன்றில் மதுரையிலிருந்து சென்னைப் பயணம் செய்ய முற்பட்ட 60 பேர் திக்குத்தெரியாத பொட்டல் காட்டில் நிற்கும்நிலை ஏற்பட்டது. ஏ.சி. காற்று வரும் இடத்திலிருந்து புகை வந்ததால் பேருந்தில் பயணித்த நான்கு பேர் மயக்கம்போட்டு விழுந்துள்ளனர்.

இதுகுறித்து பேருந்தில் பயணம் செய்த சென்னையைச் சேர்ந்த சுபாஷ் என்பவர் நடந்த சம்பவத்தை விளக்கிக்கூறினார்:-     

``காமராஜரின் பிறந்தநாள் விழாவுக்காக எங்கள் வழக்கறிஞர் குழுவுடன் மதுரை சென்றிருந்தோம். விழா முடிந்து மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிறுத்தத்துக்கு வந்தபோது, `சென்னை போகணுமா?' என்று கேள்வியுடன் ஏஜென்ட்டுகள் எங்களை சுற்றி வளைத்தனர். `எந்தப் பேருந்து சீக்கிரம் கிளம்பும்?' என்று கேட்டதற்கு, `ஸ்ரீரங்கா டிராவல்ஸ்' என்கிற ஒரு பேருந்தில் ஏற்றிவிட்டார்கள். ஆளொன்றுக்கு 650/- ரூபாய் என்றுகூறி எங்கள் மூன்று பேருக்கு ரூபாய் 1950/- வாங்கினார்கள். பயணச் சீட்டுக்கு பதில் ஒரு துண்டுச்சீட்டில் எழுதிக் கொடுத்தார்கள். மாலை 5:30 மணிக்குப் பேருந்தில் ஏறியபோது `15 நிமிஷத்துல பஸ் எடுத்துருவோம்' என்று கூறினார்கள். ஆனால், முழுவதும் பயணிகளை நிரப்பிவிட்டு இரவு 7 மணிக்குதான் பேருந்தை எடுத்தார்கள். 

பேருந்தை எடுத்தும் ஏ.சி போடவில்லை. ஜன்னல்களையும் மூடிவிட்டார்கள். `ஏ.சி ஓடவில்லை' என்று ஓட்டுநரிடம் புகார் செய்யச் சென்றோம். அவர் `ஏ.சி போடுகிறேன்' என்றார். சொல்லிவிட்டு சீட்டில் வந்து உட்காருவதற்குள் ஏ.சி. நின்றுவிட்டது. மறுபடியும் கேட்கச்சென்றபோது, ரேடியேட்டரிலிருந்து `சூடான தண்ணீர்' கொப்பளித்து பேருந்தின் உட்புறமாகப் பீறிட்டு அடித்தது. ஏ.சி. காற்று வரும் வழியாகப் பயணிகள் உட்கார்ந்திருந்த இடங்களில் புகை சூழ்ந்தது. பேருந்தை உடனே ஓரங்கட்டும்படி கத்தினோம். இன்னும் சற்று நேரம் விட்டிருந்தால் நிச்சயம் பேருந்து தீப்பிடித்திருக்கும். உள்ளே சூழ்ந்த புகையினால் சிறுவர்கள் உட்பட 4 பேர் மயங்கி விழுந்தார்கள். அவர்களை வெளியே தூக்கி வந்து, காற்றோட்டம் கிடைத்தவுடன் மயங்கியவர்கள் விழித்தனர். மிகவும் சிரமத்துக்கு உள்ளாகி மாற்றுப் பேருந்தை கொண்டுவரும்படி ஓட்டுநரிடம் முறையிட்டோம். `எங்களிடம் வேறு பேருந்தே இல்லை' என்று ஓட்டுநர் கூறியதும் அதிர்ச்சியடைந்தோம். ஓட்டுநரிடம் வாக்குவாதம் அதிகரிக்க, அங்கு பிரச்னை ஆகிவிட்டது. டிராவல்ஸ் உரிமையாளரை தொடர்புகொண்டு மாற்றுப் பேருந்து ஏற்பாடு செய்து தரக் கேட்டோம் அல்லது `எங்கள் பணத்தைத் திருப்பிக்கொடுங்கள் வேறு பேருந்து பார்த்துக்கொள்கிறோம்' என்றோம். ஆனால் அவரோ `இருப்பது ஒரு பேருந்துதான். வேறு பேருந்தெல்லாம் இல்லை. பேருந்தை சரிசெய்த பிறகு அதிலேயே பயணம் செய்யுங்கள். இதற்கு நாங்கள் என்ன செய்யமுடியும். பணத்தை நிச்சயம் திருப்பித்தர முடியாது' என்று எகத்தாளமாகப் பேசினார்.

`பொறுப்பில்லாமல் பேசுகிறீர்களே' என்றதற்கு, `எங்களைக் கேட்டா ஏறினீர்கள், உங்களை ஏற்றிவிட்ட ஏஜென்டிடம் கேளுங்கள். உங்களால் முடிந்ததைப் பார்த்துக்கொள்ளுங்கள்' என்று ஆணவமாகப் பேசி இணைப்பைத் துண்டித்துவிட்டார். பிறகு அவரை தொடர்புகொண்ட முயன்றபோது அவர் பதிலளிக்கவில்லை. அப்போதுதான் கவனித்தோம் பேருந்தின் பின்புறம் `ஸ்ரீ எஸ்.ஆர்.எம் டிராவல்ஸ்' என்று எழுதியிருந்தது. பேருந்தின் முன்புறம் `ஸ்ரீ ரங்கா டிராவல்ஸ்' என்றும், பயணச்சீட்டில் `ஸ்ரீ ராம் டிராவல்ஸ்' என்றும் இருந்தது. பேருந்தில் எங்களுடன் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் உட்பட 60 பேர் இருந்தோம். சுற்றி கும்மிருட்டாகவும், வெறிச்சோடியும் இருந்ததால் அனைவரும் அச்சத்தில் நின்றிருந்தனர். பேருந்தில் மாற்று ஓட்டுநரும் இல்லை, ஓட்டுநர் உதவியாளரும் இல்லை.

நெடுஞ்சாலை காவல்துறையைத் தொடர்புகொண்டோம். 45 நிமிடங்கள் கழித்து அவர்கள் வந்தார்கள். அவர்களிடம் நடந்ததைக் கூறினோம். `மெக்கானிக் சரிசெய்த பின் அதே பேருந்தில் செல்லுங்கள்' என்று அவர்கள் கூறினார்கள். ஓட்டுநர் தனது போனில் அழைத்த மெக்கானிக் ஒரு மணி நேரம் கழித்து வந்தார். அவர் பழுதை சரிசெய்துகொண்டிருந்த நேரத்தில், அந்த எல்லைக்குட்பட்ட காவல்துறையினர் வந்தார்கள். `மாற்றுப் பேருந்து இல்லாமல் உங்களுக்கு எப்படி உரிமம் அளிக்கப்பட்டது' என்று காவல்துறையினர் விசாரித்தனர். உரிமையாளரை போலீஸார் தொடர்புகொண்டபோது எந்தப் பதிலும் இல்லை. பேருந்தில் பயணம் செய்த ஒருவர் 6:30 மணிக்கு விமானம் பிடிக்கவேண்டியிருந்தது. மற்றுமொருவர் 6 மணிக்கு சென்னை சென்ட்ரலில் டெல்லிக்கு ரயில் பிடிக்கவேண்டியிருந்தது. இதனால் பழுதுபார்த்த பின்னர் அதே பேருந்தில் செல்ல வேறு வழியின்றி ஒப்புக்கொண்டோம்.

விராலிமலை வரை மெக்கானிக்கை பேருந்தில் செல்லுமாறு காவல்துறையினர் கேட்டுக்கொண்டனர். மெக்கானிக் பேருந்திலிருந்து இறங்கிய பிறகு, எதிர்பார்த்தது போலவே ஒன்றரை மணி நேரம் ஓடிய பேருந்து  திருச்சிக்கு மூன்று கிலோமீட்டருக்கு முன்பு மீண்டும் நின்றுவிட்டது. வேறொரு மெக்கானிக்கை வரச்சொல்லி பழுதைச் சரி செய்ய மேலும் ஒரு மணி நேரம் ஆனது. இரவு பெரும்பாலானோர் தூங்கவில்லை. வண்டியில் ஏற்றும்போது `இரவு 1:30 மணிக்கெல்லாம் சென்னை சென்றுவிடலாம்' என்று கூறினார்கள். ஆனால், கோயம்பேடு செல்ல காலை 6:30 ஆனது. சென்ட்ரலில் தொடர்வண்டி பிடிக்கவேண்டியவர் ரயிலை தவறவிட்டார். காலை 6:30 மணி விமானத்துக்கு, காலை 6:10 மணிக்குதான் விமான நிலையத்தில் இறக்கிவிடப்பட்டார். அனைவருமே கடும் மனஉளைச்சலுக்கு ஆளானார்கள். 

பேருந்தில் பயணித்த ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு விலை வாங்கியிருக்கிறார்கள். நாங்கள் 650 ரூபாய் கொடுத்தோம். இன்னும் சிலர் 750 ரூபாய், 800 ரூபாய், பலரிடம் 1000 ரூபாய் வரை வாங்கியுள்ளனர். இதுபோன்ற மோசமான பயணத்தை நான் சந்தித்ததில்லை. முறையான உரிமம் பெறாத, இதுபோன்ற தகுதியற்ற டிராவல்ஸின் உரிமத்தை அதிகாரிகள் ரத்து செய்யவேண்டும்." என்றார் கொந்தளிப்புடன். இந்த விவகாரம் தொடர்பாகக் கருத்து கேட்பதற்கு பேருந்தின் உரிமையாளர் செல்வம் என்ற எண்ணுக்கு மீண்டும் மீண்டும் தொடர்புகொண்டபோது, ``தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளார்", என்றே வந்தது. 

No comments:

Post a Comment

NEWS TODAY 20.09.2024