Friday, July 27, 2018

மாநில செய்திகள்

மருத்துவ மாணவர்களுக்கு ஊக்கத்தொகை உயர்வு தமிழக அரசு அறிவிப்பு




மருத்துவ கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஊக்கத் தொகையை உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது.

பதிவு: ஜூலை 27, 2018 03:35 AM
சென்னை,

தமிழக அரசு வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவம் பயிலும் இறுதியாண்டு கட்டாய சுழற்சி முறை உள்ளிருப்பு பயிற்சி மருத்துவ மாணவர்கள் (சிஆர்ஆர்ஐ) மற்றும் அரசு மருத்துவரல்லாத முதுநிலை பட்டம் அல்லது பட்டயம் மற்றும் உயர்சிறப்பு மருத்துவம் பயிலும் மாணவர்களுக்கு அவர்கள் பயிலும் காலத்திற்கு ஊக்கத் தொகையை அரசு வழங்கி வருகிறது.

இந்த ஊக்கத்தொகை கடந்த 2014-ம் ஆண்டு உயர்த்தி வழங்கப்பட்டது. தற்போது அரசு மருத்துவக் கல்லூரிகளில் பயிலும் இந்த மருத்துவ மாணவர்கள் தங்களுக்கு வழங்கப்படும் ஊக்கத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை அளித்தனர்.

அவர்களின் கோரிக்கையை பரிவுடன் பரிசீலித்து அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர ஊக்கத் தொகையை 1.4.2018 முதல் உயர்த்தி வழங்க முதல்-அமைச்சர் ஆணையிட்டுள்ளார். அதன்படி, உள்ளிருப்பு பயிற்சி மருத்துவ மாணவர்களுக்கு ரூ.13 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரமாக ஊக்கத் தொகை உயர்த்தி வழங்கப்படும்.

மேலும், முதுநிலை பட்ட மருத்துவ மாணவர்களுக்கு முதல் ஆண்டில் (பழைய தொகை ரூ.25 ஆயிரம்) ரூ.35 ஆயிரமாகவும், இரண்டாம் ஆண்டில் (ரூ.26 ஆயிரம்) ரூ.37 ஆயிரத்து 500 ஆகவும், மூன்றாம் ஆண்டில் (ரூ.27 ஆயிரம்) ரூ.40 ஆயிரமாகவும்; முதுநிலை பட்டய மருத்துவ மாணவர்களுக்கு முதல் ஆண்டு (ரூ.25 ஆயிரம்) ரூ.35 ஆயிரமாகவும், இரண்டாம் ஆண்டு (ரூ.26 ஆயிரம்) ரூ.37,500 ஆகவும்;

உயர் சிறப்பு மருத்துவ மாணவர்களுக்கு முதல் ஆண்டு (ரூ.30 ஆயிரம்) ரூ.40 ஆயிரம் ஆகவும், இரண்டாம் ஆண்டு (ரூ.30 ஆயிரம்) ரூ.43,500 ஆகவும், மூன்றாம் ஆண்டு (ரூ.30 ஆயிரம்) ரூ.45 ஆயிரமாகவும், நான்காம் ஆண்டு (ரூ.30 ஆயிரம்) ரூ.45 ஆயிரமாகவும், ஐந்தாம் ஆண்டு (ரூ.30 ஆயிரம்) ரூ.45 ஆயிரமாகவும், ஆறாம் ஆண்டு (ரூ.30 ஆயிரம்) ரூ.45 ஆயிரம் ஆகவும் உயர்த்தி வழங்கப்படுகிறது.

இந்த ஊக்கத்தொகையுடன், உள்ளிருப்பு பயிற்சி மருத்துவ மாணவர்களுக்கு ஆண்டுதோறும் 600 ரூபாய் உயர்த்தி வழங்கவும், அரசு மருத்துவரல்லாத முதுநிலை பட்டம், பட்டயம் மற்றும் உயர்சிறப்பு மருத்துவம் பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் ஆயிரம் ரூபாய் உயர்த்தி வழங்கவும் முதல்-அமைச்சர் ஆணையிட்டுள்ளார். இதனால் அரசுக்கு ஆண்டுதோறும் 44 கோடியே 17 லட்சம் ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 20.09.2024