Monday, July 9, 2018

கலங்காதிரு மனமே...

2018-07-05@ 16:09:43

நன்றி குங்குமம் டாக்டர்

வாழ்க்கைப் பயணம் யாருக்கும் இனிதான பயணமாக இருப்பதில்லை. எல்லா மனிதர்களுமே வாழ்வின் ஏதோ ஒரு கட்டத்தில் சுழற்றி அடிக்கும் பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டித்தான் இருக்கிறது. பலருக்கு அடிக்கடி அந்த சூறாவளி வரும். சிலருக்கோ எப்போதாவது கொந்தளிப்புமிக்க சூழலை சமாளிக்க வேண்டி வரும். வித்தியாசம் அவ்வளவே! இதுபோல் கடும் துயரங்களால் நாம் மூழ்கடிக்கப்படும்போது அவற்றை எப்படி எதிர்கொள்ளலாம் என்பதற்கு உளவியல் நிபுணர்கள் வழங்கும் ஆலோசனைகள் இவை. பின்பற்றிப் பாருங்கள்....

இதற்கு முன்பு என்ன நடந்தது?

பெரும்பாலும் இதற்கு முன்பும் இதேபோல பிரச்னைகள் உங்களுக்கு வந்திருக்கலாம். அதை வெகு எளிதில் கையாண்டு வெளியிலும் வந்திருப்பீர்கள். அதனால், அவற்றோடு நிகழ்கால பிரச்னைகளை ஒப்பிட்டுப்பார்த்து ‘அதையே கடந்து வந்திருக்கிறோம்... இது என்ன பிரமாதம்... ஈஸியா சமாளித்துவிடலாம்’ என்று உங்களை சமாதானம் செய்து கொள்வதன் மூலம் மனம் உடைந்துவிடாமல் பிரச்னைகளை எதிர்கொள்ளத் தயாராகி
விடுவீர்கள்.

கட்டுப்படுத்த முடியாதவற்றைக் கைவிடுங்கள் ‘நீங்கள் செய்ய முடியாததை கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக, உங்களால் செய்யக் கூடியவற்றில் கவனம் செலுத்துவதன் மூலம் வாழ்வில் நம்பமுடியாத மாற்றங்கள் ஏற்படும்’ என்கிறார் மனித நடத்தைகள் ஆய்வாளரான ஸ்டீவ் மரபோலி.

பிரச்னைகள் கட்டுக்கடங்காமல் கைமீறிப் போகும்போதுதான் மிகுந்த உணர்ச்சி வசப்பட நேரிடுகிறது. இந்த உணர்ச்சிகளை எதிர்த்துப் போராடுவதற்கான சிறந்த வழி. நம் கட்டுப்பாட்டை மீறிய செயல்களில் இறங்காமல் நம்மால் கட்டுப்படுத்தக்கூடிய விஷயங்களில் மட்டும் கவனம் செலுத்தும்போது வேலையும் எளிதில் முடிந்துவிடும்.

வேகம்... வேகம்... வேகம்...

சிக்கலில் இருக்கும்போது அதிலிருந்து விடுபட ஒரே வழி விரைந்து செயல்படுவது. ‘இப்படி சிக்கலில் மாட்டிக்கொண்டோமே’ என்று தலையில் கை வைத்து ஒரே இடத்தில் உட்கார்ந்து வருத்தப்பட்டுக் கொண்டிருந்தால் அங்கேயே தேங்கிவிடுவீர்கள். அதனால் எந்தப்பயனும் இல்லை. பிரச்னையிலிருந்து வெளியேறுவதற்கான முயற்சிகளில் எவ்வளவு சீக்கிரம் இறங்குகிறீர்களோ அவ்வளவு சீக்கிரம் அதிலிருந்து வெளியில் வர முடியும். உதவி கேட்பதால் தவறு இல்லைபிரச்னைகளை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாமல் ‘எனக்கு இப்படி ஆகிவிட்டதே’ என்று உங்களுக்குள்ளேயே புலம்பிக் கொண்டு இருப்பதாலும் பயனில்லை.

என்னைக் காப்பாற்ற, எனக்கு பக்கபலமாக நிற்க என் குடும்பம் இருக்கிறது. என் நண்பர்கள் இருக்கிறார்கள் என்று நினைத்துக் கொள்ளுங்கள். தன்னந்தனியாக திண்டாடாமல் குடும்பத்தாரிடமும், நண்பர்களிடமும் உதவி கேட்பதில் தவறில்லை. பிரச்னைகள் பொதுவானவைவாழ்வில் நாம் எதிர்கொள்ளும் பிரச்னைகள் நாம் மட்டும் சந்திக்கக்கூடியவை அல்ல. நீங்கள் இன்று எதிர்கொள்ளும் சவால் முன்பொரு நாளில் வேறு ஒருவர் எதிர்கொண்டதாக இருக்கலாம். அந்த ஒருவரிடம் உங்கள் நிலையை பகிர்ந்துகொண்டு அவர் மூலம் உங்களுக்கான தீர்வை கண்டறியலாம்.

பூதாகரமாக்க வேண்டாம் துயரத்தில் இருக்கும்போது உணர்வுகள் உங்களை ஆட்கொண்டுவிடும். அதனால், இயல்பைக் காட்டிலும் பிரச்னை 10 மடங்கு பெரிதாகத் தோன்றும். ஒரு கல்லை கண்ணுக்கு அருகில் வைத்துப் பார்க்கும்போது, பெரிதாகத்தான் தெரியும். அதே கல்லை ஒரு அடி தொலைவில் வைத்துப் பாருங்கள் சிறிதாகத் தெரியும். குறைந்தபட்சம் சிக்கலை நேர்மறையாக மாற்றுவதற்கான தொடக்கப் புள்ளியாவது உங்கள் மூளையில் உதிக்கும்.

இறுக்கம் வேண்டாம்...

புயலை அமைதிப்படுத்த யாராலும் முடியாது எனும்போது, நாம் அமைதியாக அதை வேடிக்கை பார்க்கலாம். அதுபோல் புயலென பிரச்னைகள் வரும்போதே கூடவே மன இறுக்கமும் அழையா விருந்தாளியாக வந்து நிற்கும். அப்போது எதுவும் சிந்திக்க முடியாது. நெருக்கடிகளைக் கண்டு பீதியடைய வேண்டியதில்லை. அதற்கு பதில், உங்களுடைய தன்னம்பிக்கையைத் தூண்டும் விஷயங்களில் கவனம் செலுத்துங்கள். தியானப்பயிற்சி, யோகா, புத்தகம் வாசித்தல் என சில மணிநேரங்களை உங்களுக்குப்பிடித்த வகையில் செலவிடலாம். உங்கள் மன இறுக்கம் குறைந்தபின் பாருங்கள்.

சிக்கலுக்கான தீர்வை எளிதில் கண்டுபிடிக்க முடியும். முடிச்சு அவிழும் பல சிக்கல்களால் பின்னப்பட்டிருக்கும் நீங்கள் உடனே எல்லாவற்றிலுமிருந்து விடுபட வேண்டும் என்று நினைப்பீர்கள். அதில் தவறில்லை. ஆனால், எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் போட்டு மண்டையை உடைத்துக் கொள்வதைத் தவிர்த்து ஒவ்வொன்றாக தீர்க்க முயலுங்கள். ஒவ்வொரு முடிச்சாக அவிழ்த்துக்கொண்டு வரும்போதுதான் முழுவதுமாக வெளிவர முடியும்.

‘நோ’ சொல்ல பழகுங்கள் ‘ஆமாம் சாமி’ போடுபவராக இருந்தால், பிரச்னைகள் எப்போதும் உங்களை தேடி வரும். உங்களுக்கென்று ஓர் எல்லை வகுத்துக் கொள்வது நல்லது. யார் எந்த வேலை சொன்னாலும் ‘சரி’ என்று அவருக்கு உடனே செய்து தருவதால் அந்த பழக்கமே நாளடைவில் அதிக வேலைப்பளுவில் உங்களை சிக்க வைத்துவிடும். சில விஷயங்களுக்கு ‘முடியாது’ என்று சொல்லப் பழகிக்கொள்ளுங்கள். ஆரோக்கியமும் முக்கியம் துயரங்கள் நம்மைப்போட்டு அழுத்தும்போது, நம்மை கவனித்துக்கொள்ள மறந்துவிடுவோம்.

சரியா சாப்பிடாமல், தூங்காமல், ஏன் சில நேரங்களில் தண்ணீர் குடிக்கக்கூட மறந்து துயரத்தில் மூழ்கி இருப்போம். சாப்பாடு எவ்வளவு முக்கியமோ, நீர் அருந்துவதும் தூங்குவதும் ஒருவரது ஆரோக்கியத்தை நிர்ணயிப்பவை என்பதால் சாப்பிடும் நேரம், தண்ணீர் அருந்தும் நேரத்தை டைமரில் ரிமைண்டராக வைத்துக் கொள்ளலாம். நிறைவாக நேர்மறையான அணுகுமுறையோடு தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டால், உங்கள் பிரச்னைகளிலிருந்து உடனடியாக வெளிவருவதோடு சவால்களை எதிர்கொள்ளவும் தயாராகிவிடுவீர்கள்!

- என்.ஹரிஹரன்

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024