Tuesday, July 10, 2018

தலையங்கம்

ஆண்டுக்கு இருமுறை ‘நீட்’ தேர்வு





ஜேஇஇ முதன்மை தேர்வும், ‘நீட்’ தேர்வும் தற்போது ஆண்டுக்கு ஒருமுறை நடத்துவதற்கு பதிலாக, இனி ஆண்டுக்கு இருமுறை கம்ப்யூட்டர் வாயிலாக நடத்தப்படும்.

ஜூலை 10 2018, 03:00

உயர் பொறியியல் கல்வி நிலையங்கள் மற்றும் மத்திய அரசாங்க நிதி உதவியோடு நடத்தப்படும் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை இணை நுழைவுத்தேர்வு என்று அழைக்கப்படும் ஜேஇஇ என்ற மெயின்தேர்வு மூலமாகத்தான் நடக்கிறது. இந்த ஜேஇஇ மெயின்தேர்வில் தகுதிபெறும் மாணவர்கள்தான் இந்திய தொழில்நுட்பக்கல்வி நிறுவனங்களில் (ஐ.ஐ.டி.) சேர்வதற்காக நடத்தப்படும் ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வில் கலந்து கொள்ள முடியும். இதுபோல, நீட்தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில்தான் நாடு முழுவதிலும் உள்ள மருத்துவக்கல்லூரிகளில் சேரமுடியும். இந்தத்தேர்வுகள் நடைமுறையில் ஒரு பெரிய மாற்றத்தை மத்திய மனிதவள மேம்பாட்டு மந்திரி பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார். ஜேஇஇ முதன்மை தேர்வும், ‘நீட்’ தேர்வும் தற்போது ஆண்டுக்கு ஒருமுறை நடத்துவதற்கு பதிலாக, இனி ஆண்டுக்கு இருமுறை கம்ப்யூட்டர் வாயிலாக நடத்தப்படும்.

ஜேஇஇ தேர்வு முதல்முறையாக ஜனவரி 6, 20–ந்தேதிகளில் நடக்கும். இந்தத்தேர்வு முடிவுகள் பிப்ரவரி முதல் வாரத்தில் வெளியிடப்படும். இதுபோல, 2–வது முறையாக ஏப்ரல் 7, 21–ந்தேதிகளில் நடக்கும். இந்தத்தேர்வு முடிவுகள் மே முதல் வாரத்தில் வெளியிடப்படும். அதுபோல ‘நீட்’ முதல் முறையாக பிப்ரவரி 2, 17–ந்தேதிகளில் நடக்கும். தேர்வு முடிவுகள் மே முதல்வாரத்தில் வெளியிடப்படும். 2–வது முறையாக மே 12, 26–ந்தேதிகளில் நடக்கும். முடிவுகள் ஜூன் முதல் வாரத்தில் வெளியிடப்படும். இருமுறைகளிலும் எந்த தேதியில் தேர்வு எழுத விரும்புகிறோம் என்பதை மாணவர்களே தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். இந்தத்தேர்வுகளில் இருமுறையும் மாணவர்கள் கலந்துகொண்டு தேர்வை எழுதலாம். இதில் அதிக மதிப்பெண்கள் எடுத்த நுழைவுத்தேர்வு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். இந்தத்தேர்வுகள் கம்ப்யூட்டர் மூலமாக சர்வதேச தரத்திற்கு இணையாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் எந்தவித முறைகேட்டுக்கும் இடமிருக்காது என்று மூத்த அதிகாரி ஒருவர் உறுதிபட தெரிவித்துள்ளார்.

இந்தத் தேர்வுகளை நடத்தும் பொறுப்பு புதிதாக ‘தேசிய தேர்வுகள் முகமை’ என்று அழைக்கப்படும் ‘என்.டி.ஏ.’ மூலமாகவே நடத்தப்படும். இந்தத்தேர்வுகள் அனைத்தையும் இதுவரை சி.பி.எஸ்.இ. நிறுவனம்தான் நடத்திவந்தது. நுழைவுத்தேர்வை மாணவர்கள் இதுவரை ஆன்–லைனில் தேர்வு எழுதி பழகியிருக்காத நிலையில், கிராமப்புற மாணவர்களுக்கு இதில் நிச்சயமாக பயிற்சி இருக்காது. இதற்காக பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளில் உள்ள கம்ப்யூட்டர் மையங்களில் ஆகஸ்டு மாதம் 3–வது வாரத்திலிருந்து சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மாணவர்கள் இலவசமாக பயிற்சி எடுத்துக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல், அரசு அறிவிக்கும் கல்லூரிகள், பள்ளிக்கூடங்களில் அடுத்த மாதம் (ஆகஸ்டு) முதல் 4 மாதங்களுக்கு கட்டணம் எதுவும் இல்லாமல் கம்ப்யூட்டர் மூலம் மாதிரித்தேர்வை எழுதி மாணவர்கள் பயிற்சி பெற்றுக்கொள்ளலாம். உலகமே கம்ப்யூட்டர் மயமாகிவிட்ட இந்த காலக்கட்டத்தில், மாணவர்களின் ஜேஇஇ, நீட் தேர்வுகள் கம்ப்யூட்டர் வாயிலாக நடத்துவது வரவேற்புக்குரியது. இருமுறை தேர்வு நடத்துவது மாணவர்களுக்கு தேர்வு பயத்தையும் அகற்றிவிடும். எந்ததேர்வு மதிப்பெண் அதிகமாக இருக்கிறதோ, அந்த மதிப்பெண் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்பது நல்ல வாய்ப்பு அளிப்பதாகும். முதல்முறை சரியாக எழுதவில்லையென்றால், நன்றாக தயார்படுத்தி, அடுத்த முறை எழுதலாம். அந்தவகையில் கம்ப்யூட்டர் மூலம் நடத்தப்படும் இத்தகைய தேர்வுகளுக்கான பயிற்சிகளை மாணவர்களுக்கு அளிக்கும் பொறுப்பு பள்ளிக்கூடங்களுக்கு இருக்கிறது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024