செல்லிடப்பேசி செயலி' மூலம் அழைப்புகளை மேற்கொள்ளும் வசதி: பிஎஸ்என்எல் தொடக்கம்
By DIN | Published on : 12th July 2018 01:07 AM |
செல்லிடப்பேசி செயலி (ஆப்) மூலம் அழைப்புகளை மேற்கொள்ளும் புதிய வசதியை பிஎஸ்என்எல் தொடங்கியுள்ளது.
இப்புதிய வசதிக்காக விங்ஸ்' என்ற செயலியை பிஎஸ்என்எல் அறிமுகம் செய்துள்ளது. இதன் வாயிலாக, பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் இந்தியாவில் எந்த தொலைபேசி அல்லது செல்லிடப்பேசி எண்ணுக்கும் பேச முடியும். இதற்காக, பிஎஸ்என்எல் இணையச் சேவை மட்டுமல்லாது வேறெந்த நிறுவனத்தின் இணையச் சேவையையும் வாடிக்கையாளர்கள் பயன்படுத்த முடியும்.
தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் இச்சேவையை மத்திய தொலைதொடர்புத் துறை அமைச்சர் மனோஜ் சின்ஹா தொடங்கிவைத்தார். அப்போது, அவர் பேசுகையில், செல்லிடப்பேசி செயலி மூலம் தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்ளும் புதிய வசதியை தொடங்கியமைக்காக பிஎஸ்என்எல் நிர்வாகத்துக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். போட்டிகள் நிறைந்த தற்போதைய தொழில்நுட்ப உலகில், இதுபோன்ற புதிய வசதிகளை அறிமுகப்படுவது அவசியமாகும்' என்றார்.
ஐடியா-வோடஃபோன் இணைப்புக்கு ஒப்புதல்: இதனிடையே, தொலைதொடர்பு நிறுவனங்களான ஐடியா செல்லுலார்-வோடஃபோன் இணைப்புக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதாக மனோஜ் சின்ஹா தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், ஐடியா செல்லுலார் - வோடஃபோன் இணைப்புக்கு நாங்கள் ஏற்கெனவே ஒப்புதல் வழங்கிவிட்டோம். சில இறுதியான நடைமுறைகள் மட்டுமே நிலுவையில் உள்ளன' என்றார்.
முன்னதாக, வோடஃபோன் நிறுவன தலைமை செயல் அதிகாரி நிக் ரீட் உள்பட அந்நிறுவனத்தின் உயரதிகாரிகள், மனோஜ் சின்ஹாவை செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினர். இதுதொடர்பான செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த சின்ஹா, ஐடியா-வோடஃபோன் இணைப்புக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியமைக்காக, வோடஃபோன் நிறுவன உயரதிகாரிகள் தன்னை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்' என்று கூறினார்.
No comments:
Post a Comment