Saturday, July 28, 2018

மீன் விற்கும் கல்லூரி மாணவி குறித்து கேலி: விமர்சகர்களை கண்டித்த மத்திய அமைச்சர்

By DIN | Published on : 28th July 2018 01:52 AM

 கேரளத்தில் ஏழ்மையில் வாடும் கல்லூரி மாணவி ஒருவர் மீன் விற்பனை செய்வதை சமூக வலைதளங்களில் கேலியாக விமர்சித்தவர்களை மத்திய இணையமைச்சர் அல்போன்ஸ் கண்ணந்தானம் கடுமையாகக் கண்டித்தார்.
கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்த ஹானன் என்ற மாணவி, தொடுபுழாவில் உள்ள தனியார் கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பு பயின்று வருகிறார். ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த ஹானன், கல்லூரி நேரம் போக மீதி நேரத்தில் மீன் விற்பனை செய்து வருகிறார்.
இந்நிலையில், அவர் குறித்த செய்தி மலையாள பத்திரிகையான மாத்ருபூமியில் வெளியானது. அந்த செய்தி சமூக வலைதளங்களில் திரைத்துறையினர் மற்றும் அரசியல்வாதிகள் என பல தரப்பினரால் பரவலாக பகிரப்பட்டது.

எனினும், சமூக வலைதளங்களில் ஒரு சிலர் ஹானன் குறித்த அந்த செய்தி போலியானது எனக் கூறி, அவரை கேலி செய்தனர். ஹானன் பயிலும் கல்லூரியின் முதல்வரும், ஹானனின் அண்டை வீட்டினரும் அந்தச் செய்தி உண்மையானது எனக் கூறினர்.

இந்நிலையில், ஹானன் குறித்த விமர்சனங்களுக்கு பதிலடியாக அல்போன்ஸ் கண்ணந்தானம் தனது முகநூல் பதிவில் கூறியதாவது:
ஹானனை தாக்கிப் பேசுவதை கேரள மக்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும். அவரை கேலி செய்தவர்களுக்காக நான் வெட்கப்படுகிறேன். தனது ஏழ்மை நிலையிலிருந்து மீண்டுவர அந்தப் பெண் கடுமையாக உழைக்கிறார். அதை நீங்கள் (விமர்சகர்கள்) கேலிக்குள்ளாக்குகிறீர்கள்.
அந்தப் பெண்ணின் முயற்சி பாராட்டுக்குறியது. பிரதமர் நரேந்திர மோடியும் தனது இளமைக் காலத்தில் இதுபோன்று கடினமான தருணங்களை சந்தித்து, அதிலிருந்து போராடி மீண்டு தற்போது நாட்டின் பிரதமராக உயர்ந்துள்ளார் என்று அல்போன்ஸ் அந்தப் பதிவில் கூறியிருந்தார்.

இதனிடையே, இந்த விமர்சனங்களுக்கு பதிலளித்துள்ள ஹானன், தனக்கு எந்தவொரு உதவியும் தேவையில்லை என்றும், தனது பணியை தான் தொடர
விரும்புவதாகவும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 20.09.2024