Saturday, July 28, 2018

மனைவியை கைவிட்டு தலைமறைவாகும் வெளிநாடுவாழ் கணவர்களை தண்டிக்க இணையதளம்

By DIN | Published on : 28th July 2018 01:54 AM


வெளிநாடுவாழ் இந்தியர்கள் திருமணம் செய்து கொண்ட பிறகு, மனைவியை கைவிட்டு கணவர்கள் தலைமறைவாவது, மனைவியை உடல் ரீதியாக அல்லது மன ரீதியாக துன்புறுத்துவது போன்ற குற்றங்களை தடுக்க புதிய முயற்சியை இந்திய வெளியுறவுத் துறை மேற்கொண்டுள்ளது.

அதன்படி, தவறிழைக்கும் வெளிநாடுவாழ் கணவர்களுக்கு எதிராக சம்மன் மற்றும் வாரண்ட் உத்தரவுகளை பிறப்பிப்பதற்கு ஏதுவாக இணையதளம் ஒன்று உருவாக்கப்பட உள்ளதாகவும், அதற்கு விளக்கம் அளிக்கத் தவறுபவர்களை தலைமறைவு மோசடியாளர் என அறிவித்து அவர்களது சொத்துக்களை பறிமுதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும், வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்தார்.

இந்தப் புதிய திட்டத்துக்கு, மத்திய சட்டத் துறை அமைச்சகம், உள்துறை அமைச்சகம், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சகம் மற்றும் மாநில சட்டப்பேரவைகள் ஆகியவை ஒப்புதல் அளித்துள்ளதாக அவர் கூறினார்.

கடந்த 2015 ஜனவரி முதல் 2017 நவம்பர் வரையில், வெளிநாடுவாழ் கணவர்களால் பாதிக்கப்பட்டதாக இந்தியப் பெண்கள் அளித்திருக்கும் மொத்த புகார்களின் எண்ணிக்கை 3,328 என்பது வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் புள்ளி விவரங்கள் அடிப்படையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், திருமணத்துக்கு பின் தலைமறைவாகுவது, உடல் ரீதியாக அல்லது மன ரீதியாக மனைவியை துன்புறுத்துவது போன்ற குற்றங்களை தடுக்க இந்தப் புதிய முயற்சி உதவும் என்று சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட பெண்கள், முறைகேட்டில் ஈடுபட்ட நபரின் குறிப்பிட்ட சொத்தை தமக்கு சொந்தமாக்கித் தர வேண்டும் அல்லது அதே சொத்தை விற்று தமக்கு நிதியுதவி அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கும் பட்சத்தில், அதனை அரசு செயல்படுத்த வழிவகை செய்யப்படவுள்ளது.
புதிய திட்டத்தை செயல்படுத்தும் வகையிலான சட்டத் திருத்தங்களுக்கு மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் கோரப்படும் என்றும், அதன் பின்னர் அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அந்த மசோதா தாக்கலாகும் என்றும் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்தார்.

முன்னதாக, வெளிநாடுவாழ் இந்தியர்களின் திருமணங்களில் நடைபெறும் முறைகேட்டை தடுப்பது தொடர்பாக, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகத்தின் தலைமையில் அமைச்சரவைக் குழு ஒன்று செயல்பட்டு வருகிறது. மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் அதிகாரிகளும் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
இந்த அமைச்சரவைக் குழு பரிந்துரை செய்ததன் அடிப்படையில், தலைமறைவான 8 கணவர்களுக்கு எதிராக, தேடப்படும் குற்றவாளி என அறிவிப்பதற்கான நோட்டீஸ் வெளியிடப்பட்டுள்ளதுடன், அவர்களது கடவுச்சீட்டுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன என மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 20.09.2024