Saturday, July 28, 2018

மாணவர்களும் மருத்துவக் கல்வியும்

By உதயை மு. வீரையன் | Published on : 28th July 2018 02:06 AM |

மருத்துவப் படிப்புக்காக நடத்தப்படும் நீட் தேர்வு தொடர்பான குழப்பம் இன்னும் ஒரு முடிவுக்கு வந்தபாடில்லை. மருத்துவ மாணவர் சேர்க்கையில் நடைபெறும் முறைகேடுகளும், தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கொள்ளையுமே இந்தத் தகுதித் தேர்வுக்கான காரணங்களாகக் கூறப்பட்டது. எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு கடந்த இரு ஆண்டுகளாக நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான தேர்வு கடந்த மே 6 -ஆம் நாள் நாடு முழுவதும் நடத்தப்பட்டது.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) நடத்திய இந்தத் தேர்வில் தமிழ் உள்ளிட்ட 11 மாநில மொழிகளில் வினாத்தாள்கள் வழங்கப்பட்டன. மொத்தம் 180 வினாக்களுக்கு தலா 4 மதிப்பெண் வீதம் 720 மதிப்பெண்களுக்குத் தேர்வு நடந்தது. தமிழ்நாட்டில் 10 நகரங்களில் அமைக்கப்பட்டிருந்த 170 மையங்களில் நடந்த தேர்வை 1,14,602 மாணவர்கள் எழுதினர். இவர்களில் 24,720 பேர் தமிழ் வினாத்தாளைப் பெற்று தேர்வு எழுதினர்.

இந்தத் தேர்வு முடிவுகள் கடந்த ஜூன் 4 -ஆம் தேதி வெளியிடப்பட்டு தரவரிசைப் பட்டியலும் வெளியிடப்பட்டது. இந்தத் தரவரிசைப் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு, தமிழ்நாட்டில் கடந்த ஜூலை 1 முதல் 7 வரை கலந்தாய்வு நடந்து முடிந்தது. இந்த கலந்தாய்வில் 22 அரசு மருத்துவக் கல்லூரிகள், சிதம்பரம் ராஜா முத்தையா மற்றும் சென்னை கே.கே.நகர் இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரிகளில் 2,639 இடங்களும், 11 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 862 இடங்களும் ஆக 3,501 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள் நிரம்பின.

அதேபோல, சென்னை அரசு பல் மருத்துவக் கல்லூரி மற்றும் சிதம்பரம் ராஜா முத்தையா பல் மருத்துவக் கல்லூரியில் உள்ள 153 அரசு ஒதுக்கீட்டு பி.டி.எஸ். இடங்களும் மாணவர்களால் தேர்வு செய்யப்பட்டுவிட்டன. தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டுக்கான எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு ஜூன் 16, 17, 18 ஆகிய நாள்களில் நடக்க இருந்தது. உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவுப்படி இந்தக் கலந்தாய்வு ரத்து செய்யப்பட்டது. புதிய கலந்தாய்வுத் தேதிகள் இணையதளத்தில் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவுக்கு என்ன காரணம்? நீட் தேர்வுக்கு வழங்கப்பட்ட தமிழ் வினாத்தாளில் 49 வினாக்கள் தவறாக மொழிபெயர்க்கப்பட்டிருந்தன என்பது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே தவறான வினாக்களுக்கு தலா 4 மதிப்பெண்கள் வீதம் கருணை மதிப்பெண் வழங்கக்கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்குத் தொடரப்பட்ட அன்றே நீட் தேர்வு முடிவுகளை சி.பி.எஸ்.இ. வெளியிட்டது. நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் இருக்கும்போதே தமிழக அரசும் தரவரிசைப் பட்டியல் வெளியிட்டு, கலந்தாய்வும் நடத்தியது. இந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சி.பி.எஸ்.இ.-க்கும், தமிழ்நாடு அரசுக்கும் தங்கள் அதிருப்தியை தெரிவித்தனர்.
நீட் தேர்வைத் தமிழில் எழுதிய மாணவர்கள் அனைவருக்கும் 196 மதிப்பெண்கள் வழங்க வேண்டும். இந்த 196 மதிப்பெண்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டு இரண்டு வாரத்திற்குள் புதிதாக தரவரிசைப் பட்டியலை வெளியிட வேண்டும். அதன் அடிப்படையில் கலந்தாய்வை மீண்டும் நடத்த வேண்டும் என்று கடந்த ஜூலை 10 அன்று உத்தரவிட்டனர்.

இந்த உத்தரவை அமலாக்க வேண்டும் என்று தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளும் வலியுறுத்தி வந்தன. இந்நிலையில், சி.பி.எஸ்.இ. இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
மேல்முறையீட்டு மனுவை கடந்த ஜூலை 20 அன்று விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் இது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தனர். மேலும், இந்த பிரச்னையை எப்படி சுமுகமாக தீர்ப்பது என்பது பற்றி இரு தரப்பும் பதில் அளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், இது தொடர்பாக மனுதாரருக்கு நோட்டீஸ் பிறப்பித்து, விசாரணையை 2 வாரங்களுக்குத் தள்ளி வைத்தனர்.

வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருப்பதால் சி.பி.எஸ்.இ.-யும், தமிழ்நாடு அரசும் எந்த முடிவும் எடுக்க இயலாமல் தடுமாற்றத்தில் உள்ளன. இதனால் கலந்தாய்வில் பங்குபெற வேண்டிய மாணவர்களும், பெற்றோர்களும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர், மாநிலங்களவையில் பேசுகையில், இந்த விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதால் இதுபற்றி அதிகம் பேச விரும்பவில்லை. அடுத்த ஆண்டு முதல் ஒவ்வொரு மாநில அரசிடம் இருந்தும் வினாத்தாள் மொழிபெயர்ப்பு சரியாக உள்ளது என்பதற்கான உறுதிமொழியைப் பெற நடவடிக்கை எடுக்கப்படும்' என்று கூறியுள்ளார்.

மாணவர்கள் இத்தேர்வு விவகாரத்தில் சொல்ல முடியாத துன்பங்களை எதிர்கொண்டனர். தேர்வு மையங்களை தமிழ்நாட்டில் அமைக்காததால் தமிழ்நாட்டு மாணவர்கள் அண்டை மாநிலங்களுக்கு அலைக்கழிக்கப்பட்டனர். அவர்களுடன் அவர்களின் பெற்றோரும் துணையாகச் செல்ல நேரிட்டது.
போக்குவரத்துப் பயணக் களைப்பு, தங்குமிடம் மற்றும் தேர்வு மையங்களைத் தேடி அலையும் சூழலில் தேர்வை எப்படி மாணவர்கள் நன்றாக எழுத முடியும்? இந்தக் குழப்பங்களுக்கெல்லாம் யாரும் பொறுப்பேற்கப் போவதில்லை.

இந்நிலையில், தமிழ்நாட்டு அரசுக்குப் பெரும் பொறுப்பு இருக்கிறது. அரசாங்கம் இந்த விவகாரத்தில் தலையிட்டு மாணவர்களுக்கு நீதி கிடைக்க ஆவன செய்ய வேண்டும். சி.பி.எஸ்.இ. எடுக்கும் முடிவின் அடிப்படையில் தமிழக அரசு செயல்படும்' என்று கருத்து தெரிவித்து வருவது தங்கள் பொறுப்பைத் தட்டிக் கழிக்கும் செயலாகும்.

கடந்த ஆண்டும் தமிழ்மொழி வினாத்தாளில் வினாக்களே மாறியிருந்தன. அதனாலும் தமிழக மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். அப்போதும் தமிழக அரசு தமிழ் வழியில் தேர்வு எழுதிய மாணவர்களின் நலன் காக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த ஆண்டும் இந்நிலை தொடர்கிறது என்று மாணவர்களும், பெற்றோரும் கவலைப்படுகின்றனர்.
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் மருத்துவ இடங்கள் மிகுதியாக உள்ளன. தமிழக அரசு கடந்த ஆண்டுகளில் அதிக நிதியை ஒதுக்கி மருத்துவக் கல்லூரிகளை ஏற்படுத்தியுள்ளது. தனியாரும் போட்டி போட்டுக் கொண்டு மருத்துவக் கல்லூரிகளை உருவாக்கி நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தமிழக மாணவர்கள் அதிகம் பேர் பயனடைய வாய்ப்புகளை ஏற்படுத்தித் தர வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது.

மாணவர்களின் தகுதி, திறமையைக் கண்டுபிடிப்பதற்காகவே நீட் தேர்வு கொண்டு வரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் நீட் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்தாலும், பணம் இருந்தால் நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களில் சேரலாம் என்ற நிலையே இப்போதும் நீடிக்கிறது.
இந்த ஆண்டு 13 லட்சம் பேர் நீட் தேர்வு எழுதினர். இந்தியா முழுவதும் 60 ஆயிரம் எம்.பி.பி.எஸ். இடங்கள்தாம் உள்ளன. இதற்குத் தகுதியானவர் என 7 லட்சம் பேரை தேர்ச்சியடைய வைத்துள்ளனர். அதாவது இந்த 7 லட்சம் பேரில் அதிக மதிப்பெண் எடுத்த 60 ஆயிரம் பேர் மட்டுமே ஆங்காங்கு இருக்கும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கப்படுகின்றனர்.

தனியார் மருத்துவக் கல்லூரிகளைப் பொருத்தவரை இந்த 7 லட்சம் பேரில் யார் வேண்டுமானாலும் அந்த இடத்தில் சேரலாம். அதிக மதிப்பெண் எடுத்தவர்களைவிட குறைவான மதிப்பெண் எடுத்திருந்தாலும் கல்லூரி கேட்கும் பணத்தைத் தருபவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும். இதுதான் தகுதியா? திறமையா?

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இந்த ஆண்டு இன்னும் சேர்க்கைக்கான கட்டணம் நிர்ணயிக்கப்படவில்லை. ஆனால் நீதிமன்றம் இடைக்காலமாக ஆண்டுக்கு ரூ.13 லட்சம் என்று ஒரு தொகையை நிர்ணயித்துள்ளது. இத்தொகையைக் கட்ட முடிந்தவர் எவராயினும் மருத்துவம் படிக்கலாம். அப்படியாளால், ஏழை, எளிய, நடுத்தர மக்கள் எங்கே போவது?
இதனால் பள்ளி இறுதித் தேர்வில் எடுக்கப்பட்ட மதிப்பெண்களுக்கு மரியாதை யில்லாமல் போய் விட்டது. 12 ஆண்டுகள் படித்த பள்ளிப் படிப்பை விட இந்த ஒருநாள் தேர்வு அம்மாணவர்களின் தகுதியைத் தீர்மானித்து விடுமா? இந்தக் கேள்விக்கு இதுவரை யாரும் விடை கூறவில்லை.

மருத்துவமும், பொறியியலும் தவிர வேறு படிப்பே இல்லையா? அவையெல்லாம் பணம், பதவி பெறுவதற்குத் தகுதியே இல்லையா? மருத்துவம் படிக்காவிட்டால் வாழ்க்கையே இல்லை என்பதுபோல தற்கொலை முடிவை எடுப்பது ஏன்? மற்ற படிப்புகள் பல காலமாக கற்பிக்கப்பட்டு வரவில்லையா?

மனித சமுதாயத்திற்குப் பணியாற்றுவதற்கும், பண்பாட்டை வளர்ப்பதற்கும் அவை வழிகாட்டவில்லையா? இந்த மருத்துவ மோகம் எப்படி வந்தது? நீட் என்னும் போட்டித் தேர்வு ஏற்படுத்திய தாக்கம் என்றுதான் கூற வேண்டும்.
ஒரு படிப்பு மறுக்கப்படும்போது அதனை அடைய வேண்டும் என்ற முனைப்புதான் இதற்குக் காரணமாகிறது. இது தடுக்கப்பட வேண்டும். கல்வி என்பது வாழ்வதற்குதான் வழிகாட்ட வேண்டும், வழி தவறி போவதற்கல்ல!

No comments:

Post a Comment

NEWS TODAY 28.11.2024