Friday, July 6, 2018


கல்விக் கடன் வாராக்கடனாகலாமா?

By எஸ். ரவி | Published on : 06th July 2018 02:26 AM |


வங்கிகள் கல்விக்கடனை அள்ளிவீசும் காலம் இது. "கடன் வாங்கலையோ கடன்' என்று தெருவில் கூவி விற்காத குறையாக வங்கிகள் நம்மை அழைக்கின்றன. பத்தாம் வகுப்பு தேர்வானவர்கள் ஐ.டி.ஐ. மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளில் சேர கல்விக்கடன் பெறலாம். அதே போன்று, நான்கு ஆண்டு கால பொறியியல்/ தொழில்நுட்பம் (பி.ஈ/ பி.டெக்.), ஐந்து ஆண்டு கால மருத்துவப் படிப்பு (எம்.பி.பி.எஸ்.) படிக்கவும் கல்விக்கடன் வழங்கப்படும். மூன்று ஆண்டு கால பி.ஏ., பி.எஸ்சி. பட்டப் படிப்புகள், பட்டயக் கணக்காளர் படிப்பு (சி.ஏ.) இவற்றுக்கும் கடன் பெற வழி உண்டு.
ஒட்டுமொத்தமாக அனைத்து வங்கிகளையும் நிர்வகிக்கும் Indian Bank's Association (IBA), கல்விக்கடனுக்கான விதிமுறைகளை வகுத்துள்ளது. அவ்விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டே அனைத்து வங்கிகளும் செயலாற்றுகின்றன. இந்தியாவில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட படிப்புகளில் சேர அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை கல்விக்கடன் பெற வாய்ப்புள்ளது.

வங்கிக் கடனுக்கான வட்டி விகிதம் வங்கிக்கு வங்கி மாறுபடும். தற்போது பாரத ஸ்டேட் வங்கி 8.30 சதவீத வட்டியில் கல்விக்கடன் வழங்குகிறது. இதுதான் மிகக் குறைந்த விகிதம். அதாவது, ரூ.100 கடன் தொகைக்கு ஓராண்டுக்கு ரூ.8.50 வட்டி கட்ட வேண்டும். வங்கிக்கு வங்கி வட்டி சதவீத வேறுபாடு அதிகபட்சம் 1.5 சதவீதம் தான் இருக்கும். மாணவிகள், பிற்படுத்தப்பட்ட சமூக மாணவ- மாணவியர், மாற்றுத் திறனாளிகள் போன்ற பிரிவினருக்கு வட்டியில் சலுகைகளை பெரும்பான்மையான வங்கிகள் அளிக்கின்றன. புகழ்பெற்ற கல்வி நிலையங்களில் (ஐ.ஐ.டி., ஐ.ஐ.எஸ்., ஐ.ஐ.எம். போன்ற கல்வி நிறுவனங்கள்) பயில்பவர்களுக்கு சில வங்கிகள் வட்டி விகிதத்தில் சலுகை தருகின்றன. உதாரணமாக, இந்தியன் வங்கி இத்தகைய மாணவர்களுக்கு தற்போது 9.95 சதவீதத்தில் கடன் தருகிறது. MCLR எனப்படும் குறைந்தபட்ச வட்டி விகிதத்தைக் கவனத்தில் கொண்டு, சுமார் 1.1 சதவீதம் அதிகமாக லாபத்தை ஈட்டும் வண்ணம், பெரும்பாலான வங்கிகள் வட்டி விகிதத்தை நிர்ணயம் செய்கின்றன.

ரூ.4 லட்சத்திற்குள் கடன் பெற வேண்டுமானால் வீட்டுமனைப் பத்திரம், ஜாமீன் போன்ற எதுவும் தேவையில்லை. இதை Collateral free loan என்று சொல்வதுண்டு. ரூ.4 லட்சத்துக்கு மேல் ரூ.7.5 லட்சம் வரை கடன் பெறுவதாயின், ஒரு மூன்றாம் நபரின் உத்தரவாதம் தேவைப்படும். அதற்கும் மேல் கடன் தொகை பெற வேண்டுமானால் காலிமனை, வீட்டுமனை அல்லது வேறு ஏதாவது ஆவணம் அடமானமாக தேவைப்படும்.

மொத்த படிப்புச் செலவு என்பது கற்பிக்கும் தொகை (Tuition fees), போக்குவரத்து தொகை (Transport fees), விடுதி தொகை (Hostel fees), திட்ட செயல்முறை தொகை (Project fees), தேர்வு மற்றும் புத்தக செலவு (Exam & Book fees)- இவையெல்லாம் அடங்கியவை. கட்டடத் தொகை, விரிவாக்கத் தொகை (Development fees), நன்கொடை (Donation) போன்றவை கல்விக்கடனில் அடங்க வாய்ப்பில்லை. இந்த மொத்த செலவுத் தொகையை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கலாம். மாணவருக்காக பெற்றோர் தங்களது சேமிப்பிலிருந்து தரும் பணம் (அதாவது முன்பணம் / Margin). அடுத்த பகுதி, வங்கிக் கடன். மொத்த செலவுத் தொகையில் பெற்றோர் பங்கு 10% என்றால், வங்கிக் கடன் 90% அமையும். கடன் தொகை நான்கு லட்சமோ, அதற்குக் குறைவாகவோ அமைந்தால் முன்பணம், அதாவது பெற்றோரின் பங்கு எதுவுமே தேவையில்லை. மொத்தத் தொகையையுமே வங்கி கடனாகத் தந்துவிடும்.
மருத்துவம்/ பொறியியல்/ தொழில்நுட்பம் போன்ற பட்டப்படிப்புகளுக்கு வட்டிச் சலுகை உண்டு. மத்திய அரசின் அறிவிப்பின்படி, பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.4.5 லட்சத்துக்கும் குறைவாக இருந்தால், இச்சலுகையைப் பெறலாம். கடன் பெற்றது முதல் திரும்ப செலுத்தும் ஆண்டு வரையிலான முழு வட்டித்தொகையையும் கடன் அளிக்கும் வங்கிக்கு மத்திய அரசு தந்துவிடும். அதாவது, கடனை திரும்ப செலுத்தத் தொடங்கும் வரை (EMI Starting period) வட்டித் தொகையை மாணவர்/ மாணவி செலுத்த வேண்டிய அவசியமில்லை. இதைக் கண்காணிக்கும் பொறுப்பை கனரா வங்கி ஏற்றுள்ளது.

பொதுவாக, முதல் தவணை கடன் தொகை பெற்றது முதல் மொத்த கடனையும் 10 ஆண்டுகளுக்குள் முழுமையாக அடைத்துவிடும்படி வங்கிகள் திட்டமிடுகின்றன. சில வங்கிகள், பெருங்கடனாளிகளுக்கு (ரூ.7.5 லட்சத்துக்கும் மேலாக பெற்றவர்கள்) கால அவகாசத்தை 15 ஆண்டுகளுக்குக் கூட நீட்டிப்பதுண்டு. படிப்பு முடித்தவுடன், வேலையில் அமர்ந்த பின், அதிகபட்சமாக 6 மாதங்களுக்குள் வங்கிக் கடனைத் திரும்ப செலுத்த தொடங்க வேண்டும். படிப்பு முடிந்தவுடன், வேலை கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும், அதிகபட்சமாக ஓராண்டு காலத்திற்குள் கடன் தொகையை சட்டப்படி திரும்ப செலுத்த தொடங்க வேண்டும்.
வருமான வரி சட்டம் 80 இ பிரிவின் கீழ், கல்விக்கடன் தொகையின் வட்டித்தொகைக்கு வரிவிலக்கு உண்டு. அதாவது, மொத்த ஆண்டு வருமானத்திலிருந்து கல்விக்கடனுக்கான வட்டித்தொகையைக் கழித்துவிட்டு, மீதி தொகைக்கு வருமான வரி செலுத்த வேண்டும். ஆனால், கடன் பெற்ற முதல் எட்டு ஆண்டுகள் வரையே இந்த வரிச்சலுகை அனுமதிக்கப்படும்.

CIBIL என்ற அமைப்பு, கடன் பெறுவோருக்கு மதிப்பெண் தரும் நிறுவனம். கடன் பெறுவோரின் எல்லா விவரங்களையும் - முக்கியமாக வருமான வரி நிரந்தரக் கணக்கு எண் (PAN) - தருவதன் மூலமாக CIBIL, கடன் பெறுவோருக்கான மதிப்பெண்களை வழங்கும். அதிக மதிப்பெண்களைப் பெற்றால் (சாதாரண தேர்வுகளின் சட்டவிதிப்படி) நல்ல நேர்மையான கடனாளி என்று பொருள். 750-க்கு மேல் மதிப்பெண் பெற்ற வாடிக்கையாளரையே வங்கிகள் கடனுக்காகப் பரிசீலனை செய்கின்றன. மதிப்பெண் பரிசீலனைக்கான தொகையாக மிகக் குறைவாக (ரூ.250 ) சில வங்கிகள் கடனாளிகளிடமிருந்து வசூல் செய்வதுண்டு. இதில் தற்போது ஒரு நல்ல செய்தி. www.cibil.com என்ற இணையதளத்தில் வாடிக்கையாளர்கள் இலவசமாகவே தமது மதிப்பெண்களை பெற்றுக்கொள்ளலாம். இங்கே ஓர் எச்சரிக்கை தேவை. ஒரே வாடிக்கையாளர் வெவ்வேறு வங்கிகளில் அடிக்கடி மதிப்பெண் பெற முயற்சி செய்தால், அவருக்கு பண நெருக்கடி என்ற எண்ணம் ஏற்படக்கூடும். எனவே, அப்படி முயற்சி செய்வதால் cibil மதிப்பெண் குறைய வாய்ப்புண்டு.

உத்தரவாத ஆவணம் (Collateral free), அதாவது, சொத்து பத்திரமில்லாமல் ரூ.4 லட்சம் வரை கடன் தரலாம் என்பது தற்போது அனைவரும் அறிந்ததே. இதற்கு வித்திட்டது 2002-ஆம் ஆண்டில் ஆர்.ஜி.காமத் தலைமையில் நிறுவப்பட்ட குழு. பிறகு, வெவ்வேறு வங்கிகள் தங்கள் விருப்பப்படி கற்பிக்கும் தொகை, விடுதியில் தங்கும் தொகை, பயிற்சி தொகை, புத்தக தொகை என்ற முறைப்படி தனித்தனி உச்சவரம்பை ஏற்படுத்த, சில முரண்பாடுகள் உருவாயின. அதை சரிசெய்ய பாலசுப்ரமணியன் என்பவரின் தலைமையில் குழு ஏற்படுத்தப்பட்டு அது ஓர் அறிக்கை வழங்கியது. தமிழ்நாட்டில் பெரும்பாலான வங்கிகள் அந்தக் குழுவின் அறிக்கையையே பின்பற்றுகின்றன.

கல்விக்கடன் பெறுவதற்கு முன்னால் மாணவ-மாணவியர் பெயரில் காப்பீடு எடுப்பது அவசியம். அப்படி செய்வதால், எதிர்பாராத விதமாக மாணவர் மரணமடைந்து விட்டால், காப்பீட்டு நிறுவனம் வங்கிக்குக் கடனை திருப்பி செலுத்திவிடும். காப்பீடுக்கு உரிய தவணைத் தொகையைக் கூட கடன் தொகையில் சேர்த்துக் கொள்ள வாய்ப்பு உள்ளது.

www.vidyalakshmi.co.in என்ற இணையதளம் மூலமாக மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான வங்கிக்கு விண்ணப்பிக்கலாம்.

ஒரு வாடிக்கையாளர் வங்கியில் வாங்கிய கடனை கடன் தொகையைத் திரும்ப செலுத்தாமல் போனால் அது வாராக்கடனாகிறது. பொதுத்துறை வங்கிகளில் சென்ற நிதியாண்டின் (2017 மார்ச்) கல்விக்கடன் நிலுவைத்தொகை ரூ.67,608 கோடி. அதில் வாராக்கடன் ரூ.5,192 கோடி. எனவே, தாங்கள் கொடுக்கும் கடன் வாராக்கடனாகுமோ என்ற அச்சத்தினால் பல வங்கிகள் கடன் தரத் தயங்குகின்றன. இதில் தவறேதும் இல்லை. மாணவர்கள் தாங்கள் வாங்கிய கடனை எப்படியும் திரும்ப செலுத்தி விட வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட வேண்டும். "கடன் தள்ளுபடியாகும்', "இலவசமாகக் கிடைக்க வழி என்ன?' போன்ற சபலங்களுக்கு ஆளாகக் கூடாது. ஆனால், அரசியல் கட்சிகள் இலவசங்களைச் சொல்லி விளம்பரம் தேடி, ஆட்சியைப் பிடிக்க முயலுகின்றன. இதனால், திரும்ப செலுத்தக் கூடிய பொருளாதார ரீதியில் வசதி படைத்த மாணவர்கள் கூட வேண்டுமென்றே திரும்ப செலுத்தாமல், அதை "வாராக்கடன்' என்ற அவப்பெயருக்குத் தள்ளுகின்றனர். அப்படி செய்தால் வட்டியிலும் அசலிலும் தள்ளுபடி பெறலாம் என நினைக்கின்றனர். இந்நினைப்பு மாற உண்மையைப் பேசக் கூடிய அரசியல் தலைவர்கள் தேவை! அதற்கு வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லையே!

கட்டுரையாளர்:
வங்கி அதிகாரி (ஓய்வு).

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024