Friday, July 6, 2018

இந்தப் பையனை ஞாபகமிருக்கா? இப்போது இவர் என்ன செய்து கொண்டிருக்கிறார்? வாங்க தெரிஞ்சுக்கலாம்!

By சரோஜினி | Published on : 04th July 2018 01:01 PM |



சிலரது டிரான்ஸ்ஃபர்மேஷனைக் கண்டுபிடிக்கும் போது ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. சமீபத்தில் பிரபல ஆன்லைன் இணைய இதழொன்றில் சலங்கை ஒலி விமர்சனம் வாசித்தேன். அதில், அப்படத்தில் பெரிய நாட்டியக் கலைஞனாக விரும்பும் கமல்ஹாசன் அதற்காக இரு புகைப்படக் கலைஞனை வரவழைத்து விதம், விதமாக புகைப்படங்கள் எடுக்கச் சொல்வார். அந்தக் புகைப்படக் கலைஞன் ஒரு சிறுவன். அவன் கமலை அவர் குனியும் போது, நிமிரும் போது என ஏடாகூடமான நேரங்களில் ஏடாகூடமான விதங்களில் புகைப்படங்களாக எடுத்துத் தள்ளி மொத்த புகைப்படங்களையும் வீணாக்கி விடுவான். இந்தக் காட்சி படம் பார்க்கும் போது சிரிப்பை வரவழைக்கும். அந்தச் சிறுவனை அதன் பின் கே.பாக்யராஜின் சின்ன வீடு திரைப்படத்தில் நாயகியான கல்பனாவின் தம்பியாகக் கண்டு களித்திருப்போம். அக்காவின் திருமணத்தில் பரீட்சையின் காரணமாகக் கலந்து கொள்ள முடியாத சிறுவன் சக்கி, பிறகு முதல்முறையாக அக்காவையும், மாமாவையும் காண வேண்டி அவர்களது வீட்டுக்கு வருகை தருவான். வந்தவனைப் பார்த்து மாமியாரான கோவை சரளா, கன்னத்தைத் கிள்ளி, தன் கணவரிடம், ஏனுங்க, நாளைக்கு நமக்குப் பேரன் பிறந்தாலும் அவன் இப்படித்தான் இருப்பாம் போல நல்லா மொழு, மொழுன்னு’ தலைகாணிக்கு உறை தச்சுப் போட்டாப்ல’ என்பார். அந்தப் பையனை தமிழ் ரசிகர்களால் மறக்க முடியுமா? முடியாது, ஆனாலும், அந்தப் பையனைப் பற்றி அதைத் தாண்டி பெரிதாக எதுவும் நமக்குத் தெரிந்திருக்கவும் வாய்ப்பில்லை. தமிழ் சினிமாவில் இப்படித்தான் பலரை நாம் ரசித்திருப்போம். ஆனால் அவர்கள் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? என்று பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இன்று நாம் தெரிந்து கொள்ளப் போவது அந்தச் சிறுவனைப் பற்றித்தான்...

அந்தச் சிறுவன் இன்று ஒரு பிரபல இயக்குனர்.

அவர் பெயர் சக்ரி டுலெட்டி.



கமலின் உன்னைப் போல் ஒருவன், இதையே தெலுங்கிலும் ‘ஈநாடு’ என்ற பெயரில் மோகன்லால் கேரக்டருக்கு வெங்கடேஷை வைத்து இயக்கியிருக்கிறார், அஜித்தின் பில்லா 2, சோனாக்‌ஷி சின் ஹாவை வைத்து வெல்கம் டு நியூயார்க் என்ற பெயரில் ஒரு இந்தித் திரைப்படமும் இயக்கியிருக்கிறார். தற்போது லேடி சூப்பர் ஸ்டார் நயன் தாராவை வைத்து ‘கொலையுதிர்காலம்’ மற்றும் தமனா நடிப்பில் உருவாகி வரும் ‘காமோஷி’ இந்திப்படமும் இவரது இயக்கத்தில் போஸ்ட் புரொடக்‌ஷன் அளவில் பணிகள் முடிக்கப்பட்டு வெளியீடுக்காகக் காத்திருக்கின்றன.

சக்ரி அமெரிக்காவில் VFX டிகிரி முடித்தவர். படிப்பை முடித்து விட்டு டிஸ்னி நிறுவனத்தில் VFX துறையில் பணியில் இருந்த போது... கமல் தசாவதாரத்துக்காக அமெரிக்கா சென்றவர் சக்ரியின் திரைப்படத் தொழில்நுட்பத்திறமையை அறிந்து தன் படத்தில் பயன்படுத்திக் கொண்டார். குழந்தை நட்சத்திரமாக தமிழில் ஒருசில திரைப்படங்களில் நடித்திருந்த போதிலும் அதன் பின் சக்ரியை தமிழ் சினிமா மீண்டும் அடையாளம் கண்டு கொண்டது உன்னைப் போல் ஒருவனில் இயக்குனராகத்தான். தசாவதாரத்தில் கமலின் நண்பராக ஓரிரு காட்சிகளில் வந்து போனாலும் சலங்கை ஒலி காலத்து குழந்தை நட்சத்திரம் தான் இவர் என எவருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

சக்ரியின் அப்பா தம்பு தொழில் அடிப்படையில் டாக்டராக இருந்தாலும், திரைப்படத்துறையின் மீதிருந்த மோகத்தால், அவ்வப்போது திரைப்படங்களுக்கு ஸ்க்ரிப்ட் எழுதித் தந்து தனது ஆர்வத்தைத் தணித்துக் கொள்வார். அப்படித்தான் அவருக்கு பிரபல இயக்குனர்கள் கே.விஸ்வநாத், கே.பாலசந்தர், பாரதிராஜா, கே.பாக்யராஜ் உள்ளிட்டோர் நெருக்கமானார்கள். அப்பா மூலமாகத்தான் சக்ரிக்கு திரைப்பட உலகம் பரிச்சயமானது. அப்படித்தான் முதல்முறையாக கே.விஸ்வநாத்தின் (தெலுங்கில் சாகர சங்கமம்) சலங்கை ஒலியில் குழந்தை புகைப்படக்காரராக ஒரு சிறு கதாபாத்திரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் அறிமுகமானார்.

தமிழ் ரசிகர்களுக்கு அந்தச் சிறுவனை மறந்திருந்தாலும்... கே.பாக்யராஜின் ‘சின்ன வீடு’ திரைப்படத்தில் அக்காவையும், அவளது கணவரையும் பார்க்க வந்து விட்டு அட்சர சுத்தமாக ஆங்கிலம் பேசும் கொழு, கொழு சிறுவனை மறந்திருக்காது. சக்ரியின் தெளிவான ஆங்கிலத்துக்கு காரணம் அவரது குடும்பம் அந்தக் காலத்திலேயே மெத்தப் படித்த குடும்பம் என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். இவரது குடும்பத்தில் இதுவரை 30 முதல் 40 டாக்டர்கள் இருக்கலாம் என சக்ரி தனது நேர்காணலொன்றில் தெரிவித்துள்ளார். இவரது அம்மாவும் ஒரு டாக்டர்!

No comments:

Post a Comment

NEWS TODAY 14,11,2024